/

வேண்டாம் பகைமை

மழை பெய்து ஓய்ந்திருந்த முன்னிரவில் திருப்பூரின் நெரிசல் மிகுந்த சாலையின் குறுக்கே இரு சக்கர வாகனங்களை நிறுத்தி இரண்டு பேர் சண்டையிட்டிருக்கிறார்கள். சண்டையைக் கலைப்பதற்காக தனது காரிலிருந்து கிழே இறங்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:08 pm

வா. மணிகண்டன்

மழை பெய்து ஓய்ந்திருந்த முன்னிரவில் திருப்பூரின் நெரிசல் மிகுந்த சாலையின் குறுக்கே இரு சக்கர வாகனங்களை நிறுத்தி இரண்டு பேர் சண்டையிட்டிருக்கிறார்கள். சண்டையைக் கலைப்பதற்காக தனது காரிலிருந்து கிழே இறங்கிய நடுத்தர வயதுக்காரர் இரண்டு தரப்பையும் திட்டிவிட்டு கிளம்பியிருக்கிறார்.

 அடுத்த இரண்டாவது தெருவிலிருக்கும் தன் வீட்டின் முன்னால் காரை நிறுத்திவிட்டு வீட்டின் கதவைத் திறப்பதற்காக கீழே இறங்கியவரைப் பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் வெட்டிச் சாய்திருக்கிறார்கள். கேட்பதற்கே அதிர்ச்சியாக இருக்கும் இந்தச் செய்தி, இன்றைய சமூகம் கொண்டிருக்கும் வன்முறை மனப் போக்குக்கு ஓர் உதாரணம் மட்டுமே

இறப்பவனின் குடும்பம், அவனை நம்பி இருப்பவர்கள் என்ற எந்தச் சிந்தனையும் இல்லாமல் வாழை மரத்தை வெட்டுவதைப் போல ஆளை வீழ்த்திச் செல்லும் சமூகத்தில் வாழ்கிறோம் என்பதை நினைக்கவே திகிலாக இருக்கிறது.

 கொலையாளிகள், இறப்பவனைப் பற்றி நினைத்துப் பார்க்கவில்லையே என்பதைக் கூட விட்டுவிடலாம். ஆனால் கொலைக்குப் பிறகு தனக்கு இந்த நீதியமைப்பும் சமூக அமைப்பும் அளிக்கப்போகும் தண்டனை பற்றி சிறிதும் பயமில்லை என்றுதான் தோன்றுகிறது. வன்முறை மற்றும் ரவுடித்தனத்தின் மூலமாக சமூகத்தை மிரட்ட முடியும், அச்சுறுத்த முடியும் என்று ஆழமாக நம்புகிறார்கள். அதனால் ரவுடித்தனத்தையே தங்களின் வாழ்வாதாரமாகக் கொண்டு அதிகாரத்தோடு கோலோச்சுகிறார்கள்.

வெடிகுண்டை வெடிக்கச் செய்கிறவன், அரிவாளால் வெட்டுகிறவன் மட்டும் வன்முறையாளன் இல்லை.

அற்பமான பிரச்னைகளுக்காக அடுத்தவரின் சட்டையைப் பிடித்து இழுத்து அவனது "ஈகோ'- வை சுண்டிப்ப பார்க்கிறோம், பைசா பெறாத விஷயங்களில் மற்றவர்களை முறைத்து அவர்களது கோபத்தை தூண்டிவிடுகிறோம். கோபமும் அடுத்தவர் மீது நிகழ்த்தும் வன்முறையும் நமக்குள் படிந்து கிடக்கும் ஆழ்மனக் கசடின் வெவ்வேறு வடிவங்கள்தான். இந்தச் சமூகம் நமக்கு கற்றுத் தந்து கொண்டிருப்பதை ரத்தமும் சதையுமாக சமூகத்துக்குத் திருப்பிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

அமைச்சராக இருந்தவர் ஆள் கடத்தலில் ஈடுபட்டு பதவியிழக்கிறார் என்பதையும் கொலை செய்பவன் தான் முக்கியமான அதிகார மையத்துக்கு வேண்டப்பட்டவன் என்று சொல்லி காவல்துறையை மிரட்டுவதையும் மிகச் சாதாரணமான நிகழ்வாகவே நாம் எதிர்கொள்கிறோம். இத்தகைய செய்திகளால் நமக்கு எந்த அதிர்ச்சியும் ஏற்படுவதில்லை. மாறாக இவையெல்லாம் இயல்பான ஒன்றுதான் என்பதை ஏற்றுக்கொள்ள மனதை பழக்கியிருக்கிறோம்.

அடித்து நொறுக்குவதையே நடிகர் தன் "ஹீரோயிஸமாக' காட்டுகிறார். இந்த வன்முறை தங்களின் அடையாளம் என்று காட்டிக் கொள்வதில் எந்தக் கதாநாயகனும் வெட்கப்படுவதில்லை. வெட்டுவதும், ரத்தம் பார்ப்பதும் எதிரியை நசுக்குவதும்தான் கதாநாயகனுக்கான தகுதிகள் என்பதை அச்சு பிசகாமல் ஒவ்வொரு இயக்குநர்களும் தங்கள் படங்களில் காட்டுகிறார்கள் இரண்டரை மணி நேரப் படத்தில் எழுபது அல்லது எண்பது பேர்களை வெட்டியும் சுட்டும் கொன்று தன் பராக்கிரமத்தை கதாநாயகன் நிரூபிக்க வேண்டியிருக்கிறது. அதிரடி இசை முழங்க ஹீரோ வெட்டிச் சாய்க்க வில்லன் படைகள் வீழ்ந்து கிடக்கும். அப்போது விடப்படும் இடைவேளையில் எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் கூட தன் கரங்களை முறுக்கேற்றிக் கொண்டு யாரையாவது மூக்கின் மேல் குத்த வேண்டும் என்று நினைத்துக்கொண்டு சிறுநீர் கழிக்கிறான்.

ஒருவர் தனக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்மிடத்தில் அடுத்தவர்களிடம் கோபத்தை காட்டுவதை பொதுவான சட்டங்களால் அல்லது அற நெறிமுறைகளால் கட்டுப்படுத்த முடியப் போவதில்லை. இந்த சமூக வன்முறை தனிமனித கட்டுப்பாட்டை சார்ந்திருக்கிறது. தனிமனித கட்டுப்பாடு என்பது கற்பித்தலின் மூலமாகவே துவங்கப்பட வேண்டும். பள்ளிகளில் தனிமனித கட்டுப்பாடு அல்லது ஒழுக்க நெறிமுறை சொல்லித் தரப்படுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் ஒன்பதாம் வகுப்பிலேயே பத்தாம் வகுப்புக்கான பாடங்கள் நடத்தப்படும் பள்ளிகளில் மதிப்பெண்கள் மட்டுமே பிரதானமாக்கப் பட்டுவிட்ட சூழல் நிலவுகிறது. பாடங்களை மனப்பாடம் செய்து அதை தேர்வின்போது கக்குவது மட்டுமே மாணவர்கள் முன்பாக இருக்கும் பணி. இந்தப் பணி பெற்றோர், ஆசிரியர்கள், உறவினர் ஆகியோரின் கடும் அழுத்தங்களின் மூலமாக நிறைவேற்றப்படுகிறது. பக்கத்து வீட்டு மாணவர், உடன் பயில்பவர் என யாரோ ஒருவரோடு ஒப்பிடப்பட்டு போட்டி என்பது பொறாமை கலந்ததாகவே மாற்றப்படுகிறது. இந்தப் பொறாமை எதிர்காலத்தில் எடுக்கப் போகும் வடிவங்களின் ஆபத்தை உணராமல் தலைமுறைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

இன்றைக்கு பரம்பரைகள் தாண்டி தொடரும் பகைமை வேண்டியதில்லை. தலைமுறைக்கும் நீண்டு வரும் வரப்புத் தகராறு தேவையில்லை. மறப்போம் மன்னிப்போம் என்ற மனப்பக்குவம் வேண்டும்.

கரட்டடிப்பாளையம்,

ஈரோடு மாவட்டம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.