ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

வேட்பாளரை திரும்பப் பெறுதல்: ஓர் அலசல்

தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களைத் திரும்பப் பெறும் உரிமை மக்களுக்குத் தரப்பட்டால் வேட்பாளர்கள் சற்றே சிந்தித்து செயல்படுவார்கள் என்பது உண்மையே. ஆனால், அவர்களைத் திரும்பப் பெறும் உரிமை மக்களுக்கு கிடை

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:16 pm

மயில் வாகனன்

தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களைத் திரும்பப் பெறும் உரிமை மக்களுக்குத் தரப்பட்டால் வேட்பாளர்கள் சற்றே சிந்தித்து செயல்படுவார்கள் என்பது உண்மையே. ஆனால், அவர்களைத் திரும்பப் பெறும் உரிமை மக்களுக்கு கிடைத்து விட்டால் மீண்டும் ஒரு முறை தேர்தல் களம் தோன்ற வாய்ப்புகள் உருவாகிவிடும்.

மேலும் இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டால் ஒவ்வொரு வேட்பாளரும் திரும்பப் பெறும்போது இலவச பொருள்கள், வோட்டுக்கு பணம் கொடுத்தல் என்ற தகாத செயல்கள் மீண்டும் அரங்கேறும். இதற்குரிய தடுப்பு வேலைகளைத் தேர்தல் ஆணையம் செவ்வனே செய்தாலும் அதனில் ஈடுபடுத்தப்படும் பணியாட்களும் அவர்களுக்குரிய செலவுகளும் வீண் விரயம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

ஆனால், தவறு செய்பவர்கள் தொடர்ந்து பதவியில் இருப்பது என்பது மக்களை இன்னும் அறிவிலிகள் என்ற எண்ணத்தை ஆட்சியாளருக்கு ஏற்படுத்திவிடும். ஏனெனில், மக்களை அதே கட்சிக்காரர்கள் இலவசம் என்ற சலுகைத் தூறல்கள் மூலம் ஏமாற்றவும் முடியும். இதற்கு தக்க நடவடிக்கை என்பதைவிட தக்க சீர்திருத்தத்தை மேற்கொள்வது அவசியம். அதற்கு தேர்தல் ஆணையத்தின் பங்கே மிக முக்கியமானதாகும்.

தேர்தல் நடைபெறும் நாட்களில் மக்கள் வேட்பாளர்களை அவரவர் தகுதிகளின் அடிப்படையில் வரிசைக்கிரமமாக மூன்று நபர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்களை வரிசைப்படுத்துகையில் முதலிடம் பெறுபவரை தகுதி பெற்ற வேட்பாளராக அறிவிக்க வேண்டும். வேட்பாளர்களைத் திரும்பப் பெறும் பட்சத்தில் இரண்டாமிடத்தில் இருப்பவர்களுக்கு அந்த உரிமம் வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு செய்வதால் பொருளாதார நிலையிலும் மற்றும் நிர்வாக நிலையிலும் பணமும் நேரமும் மிச்சமாகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களும் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற அச்சத்தில் தங்களது கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றுவார்கள். மேலும் அரசியலில் தேவையற்ற சந்தர்ப்பவாதக் கூட்டணிகள், கொள்கையற்ற அரசியல் கூட்டணி தர்மம் என்ற நியாயமற்ற செயல்களின் தன்மையும் குறையும்.

இம்முறையினால் கூட்டணி செய்துகொள்ளும் கட்சிகள் எத்தகைய சூழ்நிலை ஏற்படினும் பிறர் மீது குறை கூறி தன்னை நியாயப்படுத்தும் தன்மையும் குறைந்துவிடும். இம் முறையில் வேட்பாளர்களைத் திரும்பப் பெறவும் முடியும். அதேநேரத்தில் வேட்பாளர்களுடன் அந்தக் கட்சி தலைமையும் மக்களுக்கு சேவை செய்யும் பணியை செவ்வனே செய்யும் என்பதில் ஐயமில்லை.

இக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன. அதற்குத் தீர்வு காண்பதில் தேர்தல் ஆணையத்திற்குத் தனிப்பட்ட உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அவர்களின் செயல்களில் அரசியல் குறுக்கீடு இருக்கக்கூடாது. மேலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது எழும் சிக்கல்களில் முதலாவது நிற்பது எத்தனை சதவிகித மக்கள் வேட்பாளர்களைத் திரும்பப் பெறும் எண்ணிக்கையில் கையொப்பமிட வேண்டும் என்பதே.

இதற்காக ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவரையும் தேர்தல் ஆணையம் சரிபார்த்துக் கொண்டிருப்பது நேர விரயமே. எனவே, இதற்கான தீர்வில் முதல் இரண்டு ஆண்டுக்குள் வேட்பாளர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. இரண்டு ஆண்டுகளில் அவரின் சேவையில் மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டால் மக்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாட்சியர் அலுவலகம் சென்று வேட்பாளரைத் திரும்பப் பெறும் உரிமையைப் பதிவு செய்ய வேண்டும்.

ஆறு மாத இடைவெளியில் தேர்தல் ஆணையம் நிர்ணயிக்கும் அளவு மக்கள் பதிவு செய்திருந்தால் வரிசைக்கிரமப்படுத்தப்பட்ட இரண்டாவது வேட்பாளருக்கு பதவியேற்க உரிமம் தரப்படலாம். வரிசைக்கிரமப்படுத்தப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் ரகசிய ஆவணமாகப் பாதுகாக்க வேண்டும். இம் முறை செயல்பாட்டுக்கு வந்தால் தேவையற்ற குழப்பங்கள், தேர்தல்களம் மூலம் ஏற்படும் பொருளாதாரச் சீர்குலைவுகள், தேர்தல் நேர பணப் பரிமாற்றம், மக்களிடம் தேர்தலுக்குத் தேர்தல் இலவசம் என்ற அறிவிப்புகள் போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.