தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

இலங்கையில் மீண்டும் இனவெறிப்பாம்பு

இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காகப் பாடுபடுவேன் என்று, அந்நாட்டு அதிபர் ராஜபட்ச பறைசாற்றி வருகிறார். ஆனால், அவருடைய சொல்லும் செயலும் முரண்பட்ட நிலையில் உள்ளன. இலங்கையின் தேசியகீதம், ஆனந்த சமரகூன் என

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:43 am

இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காகப் பாடுபடுவேன் என்று, அந்நாட்டு அதிபர் ராஜபட்ச பறைசாற்றி வருகிறார். ஆனால், அவருடைய சொல்லும் செயலும் முரண்பட்ட நிலையில் உள்ளன. இலங்கையின் தேசியகீதம், ஆனந்த சமரகூன் என்பவரால் இயற்றப்பட்ட  ""ஸ்ரீ லங்க மாதா'' என்னும் பாடலாகும்.  சிங்கள மொழியிலுள்ள இப்பாடலின் மொழிபெயர்ப்பைத் தமிழர்கள் பாடிவருவது அங்கு வழக்கம். ஒரு நாட்டில் இருமொழி தேசியகீதம் இருக்கக்கூடாது என்ற காரணம்காட்டி, இனி, தமிழர்கள் தமிழிலுள்ள தேசியகீதத்தைப் பாடக்கூடாது என்று கட்டளையிட்டுள்ளார் அதிபர். (இதைத் தமிழகத்து அரசியல் கட்சித் தலைவர்களில் சிலர் கண்டித்துள்ளனர்). பல நாட்டினரும் குடியேறியுள்ள அமெரிக்காவில் அமெரிக்க தேசியகீதத்தை, அங்கு வாழும் ஜப்பானியர் குடியிருப்பில் அவர்களின் தாய்மொழியில் மொழி பெயர்த்துப் பாடப்படுவதாகச் சொல்லப்படுகிறது. எப்படி இருப்பினும் தமிழர்களை அரவணைத்துச் செல்வேன் என்று அறிவித்த அதிபர், இதுவரையில் நடைமுறையில் இருந்த பழக்கத்தை அழிப்பது, அவருடைய உறுதிமொழிக்கு எதிரானது. இது சிங்கள மொழித் திணிப்பாக அமைகிறது.

கதிர்காமம் முருகன் கோயில் உலகப்புகழ் பெற்றது. அந்தக் கோயிலின் நுழைவாயில் அருகிலேயே புத்தருக்குச் சிறிய கோயில் இருக்கிறது. முருகன் கோயிலுக்குச் செல்லும் தமிழர், வழியிலுள்ள புத்தரையும் வணங்க வேண்டும் என்ற நிலை மறைமுக நடைமுறையில் உள்ளது. இலங்கையின் வடபகுதியில் தமிழர்கள் வாழ்கின்றனர். இப்போது தமிழரின் வாழிடப் பகுதியில் புத்தர்கோயில்கள் கட்டப்பட்டு வருகின்றன. இது உள்நோக்கம் கொண்ட செயல்பாடு. தமிழருக்கு அச்சமூட்டும் செய்கை. மேலும் தமிழர்பகுதிகளில் சிங்கள ராணுவப்படையின் இருப்பிடங்கள் அமைக்கப்படுகின்றன. தமிழர் இனி அஞ்சி அடங்கிக்கிடக்க வேண்டும். அவர்கள் உரிமைக்குரல் எழுப்பக்கூடாது என்ற மறைமுக எச்சரிக்கை தரப்படுகிறது.

சென்னையில் 2010, டிசம்பர் 16,17-ம் தேதிகளில் உலகத் தமிழாசிரியர் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டு மலருக்கு இலங்கைப் பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் கட்டுரைகளை அனுப்பியுள்ளனர். இவர்கள் தமிழர்கள். இவர்களில் பெரும்பாலோர் பெண்கள். இவர்கள் போராளிகள் அல்லர். அறிவுத்தொண்டு புரிபவர்கள். மாநாட்டில் கலந்துகொள்ளாதபடி இவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். (இவர்களில் ஒருவர் மட்டும் தடைகளை எப்படியோ கடந்து இந்த உலகத் தமிழாசிரியர் மாநாட்டுக்கு வந்தார்). இது எதைக் காட்டுகிறது? கல்வி தொடர்பான உலக அளவில் நடைபெறும் மாநாட்டில் கலந்துகொள்ள விரும்பும் தமிழர்களின் சாதாரண உரிமைகூட இலங்கையில் இல்லை என்பதைத் தெளிவாக அறிவிக்கிறது. இலங்கையில் இனவெறிப்பாம்பு, மறுபடியும் படம் எடுக்கிறது என்பதை உலகுக்கு அறிவிக்கிறது. இப்படிப்பட்ட அடக்குமுறை இலங்கையில் தொடருமானால், அதன் எதிர்விளைவு எப்படி இருக்கும் என்பதைக் காலம் தான் கூறமுடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.