இடைநிற்றலுக்குத் தீர்வு எப்போது
கல்வியறிவு பெறாதவர்கள் பற்றி பேசும்போது, "மழைக்குக் கூட பள்ளிக்கூடம் ஒதுங்கியதில்லை' என்று கிராமப்புறங்களில் சொல்வதுண்டு. என்றோ சொன்ன இந்த வார்த்தை இன்றைய குழந்தைகளுக்கும் பொருத்தமானதாக இருக்கிறது என்


கல்வியறிவு பெறாதவர்கள் பற்றி பேசும்போது, "மழைக்குக் கூட பள்ளிக்கூடம் ஒதுங்கியதில்லை' என்று கிராமப்புறங்களில் சொல்வதுண்டு. என்றோ சொன்ன இந்த வார்த்தை இன்றைய குழந்தைகளுக்கும் பொருத்தமானதாக இருக்கிறது என்பது தான் கசப்பான உண்மை. அறிவியல், நாகரிகம், கலாசாரம் உள்ளிட்ட அனைத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டபோதும் இந்த சொல் பொருத்தமானதாக இருக்கிறதென்றால், இதற்கு ஆட்சியாளர்களின் அலட்சியம் காரணமா அல்லது பொதுமக்களின் ஆர்வமின்மை காரணமா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.
இலவச பாடப்புத்தகங்கள், இலவச சீருடை, இலவச பேருந்து பயண அட்டை, தமிழ் வழியில் பயின்றால் சலுகைகள் என்றபோதும் பள்ளிக்கல்வியில் இன்னும் இடைநிற்றல் தொடர்ந்து அனைவருக்கும் ஆரம்பக்கல்வி என்ற இலக்கை எட்ட முடியாத நிலை இருந்து வருகிறது.
கோடை விடுமுறையில் நகரங்களில் உள்ள சிறார்கள் ஏதாவதொரு பயிற்சி வகுப்புக்குச் செல்லும் அதே வேளையில் கிராமங்களில் அடித்தட்டு வகுப்பைச் சேர்ந்த சிறார்கள் தங்கள் உடற்திறனுக்கேற்ற வேலைக்குச் செல்கின்றனர்.
நகரங்களிலும் ஏழ்மை நிலையில் உள்ள சிறார்கள் கோடை விடுமுறையின் போது ஏதாவதொரு வேலைக்குச் செல்கின்றனர். இதன் மூலம் சிறிதளவே வருமானம் என்றாலும் கூட மெல்ல மெல்ல படிப்பின் மீதான ஆர்வம் குறைந்துவிடுகிறது.
அனைவருக்கும் ஆரம்பக் கல்வி அளிக்கும் பொருட்டு 6 முதல் 14 வயது வரையான சிறார், சிறுமியர் அனைவரும் பள்ளியில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும் என்பதற்காக பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. எப்போதும் இல்லாத வகையில் நடப்பாண்டு கணக்கெடுப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
பொதுவாகவே மாற்றுத் திறனாளிகள் மீதான அக்கறை அனைத்து தரப்பினரிடமும் இருப்பதில்லை. குடும்ப உறுப்பினர்களே கூட சுமையாகக் கருதும் வேளையில் அவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவது வரவேற்கத்தக்க ஒன்றுதான்.
இத்தகைய சூழலில் மாற்றுத் திறனுடைய குழந்தைகளில் அதிகப்படியானோர் பள்ளிக்கு செல்லாமலேயே இருக்கின்றனர்.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி தொடக்கக் கல்வி, நடுநிலைக்கல்வி, உயர்நிலைக் கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் அளவு அதிகமாகவே உள்ளது. அதே போன்று நகரங்களைக் காட்டிலும் கிராமப்புற மாணவ, மாணவியரிடையே தான் இடைநிற்றல் அதிகமாக உள்ளது. இதற்கு காரணம், கிராமப்புற மாணவ, மாணவியர் பயிலும் போதே விவசாயம் சார்ந்த வேலைகளுக்குச் செல்வது தான்.
வருமானத்தைக் கண்ட பெற்றோர் நாளடைவில் தங்கள் பிள்ளைகளை சென்னை போன்ற பெருநகரங்களுக்கு வேலைக்காக அனுப்பி வைக்கின்றனர். இத்தகைய போக்கு நகர்ப்புற மக்களைக் காட்டிலும் கிராமப்புற மக்களிடம் குறிப்பாக, அடித்தட்டு வகுப்பினரிடம் தான் அதிகமாக உள்ளது.
இதற்கு அவர்களின் கல்வியறிவின்மையும், அலட்சியமும்தான் காரணமாகும். பெண் குழந்தைகள் இடைநிற்றலில் வறுமை காரணமாகக் காட்டப்படுகிறது. பெண் பிள்ளைகளை அதிகம் படிக்க வைத்தால் அதற்கேற்ற வரன் தேட வேண்டும், அதிகப்படியான செலவுகள் செய்ய வேண்டும் என்ற பழங்காலத்து கருத்தில் சிலர் இன்னும் நம்பிக்கை வைத்துள்ளனர். இத்தகையோர் மத்தியில் பெண் கல்விக்கான செலவு செலவினமாகவும், ஆண் கல்விக்கான செலவு முதலீடாகவும் கருதப்படுகிறது. நடுநிலைக் கல்வியில் நிலவும் அதிகப்படியான மாணவியர் இடைநிற்றல் மூலம் இதை அறிந்து கொள்ள முடியும்.
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிற்றலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை நடப்பாண்டில் அறிமுகம் செய்துள்ளது.
இடைநிற்றலை தடுக்கும் நோக்கில் பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த அந்தந்த கிராமங்களில் பயிலும் பள்ளி மாணவர்களைக் கொண்டு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டு இடைநிற்றல் மாணவ, மாணவியர் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டாலும் அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு செல்கின்றனரா என கண்காணிக்கப்படவேண்டும்.
ஆண்டிற்கு ஒரு நாள் நடத்தப்படும் விழிப்புணர்வு நடவடிக்கை, அறியாமையில் உள்ள பெற்றோர் மத்தியில் எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை என்பது தான் உண்மை.
பள்ளி செல்லாத சிறுவர், சிறுமியர்களைக் கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது என்பது சமூக அக்கறையுடன் ஆற்ற வேண்டிய பணியாகும். அதற்கு மக்கள் மத்தியில் கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அவர்களை மனதளவில் தயார்படுத்துவது தான் இடைநிற்றல் பிரச்னைக்கு தீர்வாக அமையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...