
வழக்கமான பக்திப் பெருக்குடன் திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்டது. பக்தர்களின், ""அண்ணாமலையாருக்கு அரோகரா'' கோஷம் விண்ணை முட்டியது. அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
கோயில் உள்ளே அனைத்து பக்தர்களுக்கும் இடம் இல்லை என்பதால் எல்லா முக்கிய வீதிகளிலும் பெரிய திரைகளில் உள்ளூர் தொலைக்காட்சி மூலம் தீபக் காட்சிகள் நேர்த்தியாக ஒளிபரப்பப்பட்டன.
பஞ்சபூதங்களில் ஒன்றான அக்னியின் வடிவமாக திருவண்ணாமலை விளங்குகிறது. இன்றும் சித்தர்களும் யோகிகளும் ஞானிகளும் நாடி வரும் திவ்விய úக்ஷத்திரம் என்றால் அது திருவண்ணாமலைதான்.
ஆண்டுதோறும் திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கேற்ற அடிப்படை வசதிகள் போதவில்லை.
கோவிலைச் சுற்றியும் கிரிவலப் பாதைகளிலும் ஏராளமான அமைப்புகள் அன்னதானம் செய்து பக்தர்களின் பசியைப் போக்கின. ஆனால் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, சாப்பாடு போட்டவர்கள் கூட கை கழுவத் தண்ணீர் தர முடியாமல் தவித்தனர். குடிக்கத் தண்ணீர் தருகிறோம் அதில் கைகழுவிவிடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டனர்.
வரிசையில் நின்று வாங்கிச் சாப்பிடும் பக்குவம் இல்லாத பக்தர்களும், பக்தர்களைப் பண்போடும் அன்போடும் நடத்த வேண்டும் என்று தெரியாத அன்னதானக் குழுத் தொண்டர்களும் சற்றே இடறலாகத் தெரிந்தனர்.
அன்னதானத்தைப் பெற்ற பக்தர்கள் என்ன காரணத்தாலோ முழுதாகச் சாப்பிட்டு முடிக்காமல் அப்படியே வீசியெறிந்து நிறைய இடங்களில் வீணடித்திருந்தனர்.
2 ரூபாய்க்கு விற்கப்படும் குடி தண்ணீர் பாக்கெட்டுகள் எங்கும் காணப்படவில்லை. அதே சமயம் பாட்டில் 20 ரூபாய்க்கான குடிநீர் தாராளமாகக் கிடைத்தது.
காவல்துறையின் சார்பில் இலவச அவசரகால மருத்துவக்குழுக்களும் சேவை மையங்களும் ஆங்காங்கே இயங்கின. ஊராட்சி ஒன்றியம் சார்பில் தேவையான அளவுக்குக் குடிநீர்த் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. தாற்காலிகக் கழிப்பறைகளும் சில இடங்களில் நிறுத்தப்பட்டிருந்தன.
ஆண்கள், பெண்களுக்கான தனி சுகாதார வளாகங்கள் அரசினால் ஆங்காங்கே திறந்துவைக்கப்பட்டிருந்தன.
சுக்கு காபி, நீர்மோர், பாதாம் பால், லட்டு, கருப்பஞ்சாறு, பணியாரம், தினைமாவு போன்றவையும் வழியில் கிடைத்தன. இவற்றில் பெரும்பாலானவை இலவசம். சில இடங்களில் குடிநீர் பாட்டல்களைக் கூட சிலர் கருணையோடு இலவசமாகவே அளித்தனர்.
15 கிலோ மீட்டர் நீளம் உள்ள கிரிவலப் பாதை நன்கு செம்மையாக்கப்பட்டு நேர்த்தியாகவும் பாதுகாப்பாகவும் விளங்குகிறது.
மலையேற்றப் பாதையானது கரடுமுரடாகவே காட்சி அளிக்கிறது. கவனமாக ஏறிச் செல்ல வேண்டியிருக்கிறது.
நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. அருணகிரி நாதரை முருகப்பெருமான் தடுத்தாட் கொண்ட திருத்தலம். சைவக் குரவர்களால் பாடல்பெற்ற தலம்.
இதன் புனிதத்தையும் பெருமையையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஆலய நிர்வாகம், அரசு, இங்கு வரும் பக்தர்கள் ஆகிய அனைவருக்குமே இருக்கிறது. திருவண்ணாமலை தீபத் திருவிழாவை தமிழக அரசு அதிலும் குறிப்பாக ஹிந்து அறநிலையத்துறை, சுற்றுலா வளர்ச்சித் துறை ஆகியவை இணைந்து இன்னும் சிறப்பாக ஏற்பாடு செய்தால் வெளிநாட்டவர் அதிகம் வந்து தரிசிக்க வாய்ப்பு இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.