ஓர் ஆசிரியை தனது மாணவனாலே கொல்லப்பட்டதுதான் வேதனையின் உச்சம். என்னவாயிற்று, இந்த மாணவ சமுதாயத்திற்கு? கோபம், விரோதப் பிரச்னைகளுக்கு உயிரைப் பறிப்பதுதான் தீர்வாகுமா? பள்ளிக் கூடங்கள் இதைக் கற்றுத் தருவது இல்லையே? பெற்றவர்கள் அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு பதைபதைக்கின்றனர். புத்தகங்களைத் தொலைத்து விட்டு ஆயுதங்களை எடுத்துக் கொள்ள எப்படி மனம் வந்தது இவர்களுக்கு?
தன்னலமற்றது தாயின் நெஞ்சம், தாய்மை நிறைந்தது ஆசிரியரின் நெஞ்சம். ஒரு தாய் தனக்குப் பிறந்த பிள்ளைகளை வேறுபடுத்திப் பார்ப்பதில்லை, அதேபோல ஓர் ஆசிரியர் தன்னிடம் பாடம் பயில வரும் எந்தப் பிள்ளையையும் வேறுபடுத்திப் பார்க்கக் கூடாது.
ஆசிரியர்கள் மாணவர்களின் வளர்ச்சியிலும், நன்னடத்தையிலும், ஒழுக்கத்திலும் மாணவர்களுடனே இருந்து அவர்களை ஒரு சிறந்த குடிமகனான உயர்த்துகிறார்கள். ஆசிரியர்களும் மாணவர்களின் சமுதாயத்தை, சூழ்நிலையை உணர்ந்து அவர்களை வழி நடத்திச் செல்ல வேண்டும். இந்த இடத்தில் மாணவர்கள்-ஆசிரியர்கள் உறவு தெய்வத்திற்கும், பக்தனுக்கும் இடையே உள்ள உறவாக இருக்க வேண்டும். மாணவர்களின் மனம் புண்படாதவாறு கல்வி கற்றலின் அவசியத்தை எடுத்துக் கூறுவது ஆசிரியர்களின் கடமையாகும். மாணவர்களைக் கடுமையான சொற்கள் கொண்டோ, அடித்தோ அடக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் நினைத்தால், அது ஆசிரியர்களுக்குப் பாதகமாகவே முடியும்.
இக்கால மாணவர்கள் திறமையானவர்கள். எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் திறன் படைத்தவர்கள். 45 நிமிட வகுப்பறையில் 5 நிமிடம் மாணவர்களின் நலனுக்காக ஒதுக்கி அவர்களுடன் கலந்துரையாட வேண்டும். நல்லொழுக்கத்தையும், வாழ்க்கை முறைகளையும் தினமும் கற்றுத் தர வேண்டும்.பள்ளிகளில் ஒழுக்கநெறி சார்ந்த வகுப்புகளை ஆசிரியர்கள் கண்டிப்பாக எடுக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரின் இயல்புகளும் ஆசிரியர்களுக்கு தெரியுமாதலால், அந்த மாணவனை அடையாளம் கண்டு, அவனது பிரச்னைகளில் இருந்து விடுவிக்க அவனை தாயுள்ளத்தோடு அணுக வேண்டும்.
நல்ல பழக்க வழக்கங்களை இக்கால சினிமாக்களும், தொலைக்காட்சிகளில் காட்டப்படும் நெடுந்தொடர்களும் கற்றுத் தருவதில்லை. சினிமாத்தனம் கலந்த சிந்தனை மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது. சினிமாவில் இளைய சமுதாயத்தைச் சீரழிக்கும் வேலையை மிக சீராக செய்து வருகிறார்கள். இத்தகைய திரைப்படங்களையும் அதில்
நடிக்கும் நடிகர், நடிகையரையும் வெறுத்து ஒதுக்க வேண்டும். அத்தகைய திரைப்படங்களையும், நெடுந்தொடர்களையும் தடை செய்ய வேண்டும். கூடும் நண்பர்கள்தான் எல்லா பிரச்னைகளுக்கும் மூலவேராக உள்ளனர். மாணவர்கள் ஒழுக்கமான நண்பர்களுடனேதான் பழக வேண்டும். பள்ளியை விட்டு வெளியேறும்போதும், வேலை தேடும்போதும், நட்பு பேசாது, பெற்ற மதிப்பெண்தான் பேசும். இதை உணர்ந்து கொண்டால் பிரச்னைகளின் பக்கம் மாணவர்கள் தலை வைத்து படுக்க மாட்டார்கள்.
குழந்தைகளின் எதிர்காலம் எப்போதும் பெற்றோர்களின் செயலில்தான் அடங்கியிருக்கிறது. தனது மகன் அல்லது மகளை எவ்வளவு பணம் கொடுத்தாலாவது பள்ளியில் சேர்த்தால் போதும், பெற்றதன் கடமை முடிந்தது. இனி ஆசிரியர் பார்த்துக் கொள்வார் என்ற எண்ணமே இன்றைய பெற்றோர்களின் மனதில் நிறைந்து உள்ளது. பணம் சேர்ப்பதே வாழ்வின் இலட்சியம் என்ற குறிக்கோளுடன் இக்கால பெற்றோர்கள் செயல்படுவதால், மாணவர்கள் வேலியில்லாத பூந்தோட்டமாக மாறி விடுகிறார்கள். செல்வம் தேடுவதிலேயே தங்கள் பிள்ளைகளின் செல்வாக்கை தவற விட்டு விடுகிறார்கள்.
வீட்டில் தனியாக இருப்பதால் அவர்களை நல்வழிப்படுத்த ஆளில்லை. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் காட்ட வேண்டிய அன்பு எனும் சாவியை எங்கோ தவற விட்டு விடுகின்றனர். வழிகாட்ட துணையிருந்தால், தவறு செய்யும் மாணவர்கள் கூட நல்வழிக்கு மாறுவார்கள். பெற்றோர்களின் சண்டித்தனத்தால் ஆசிரியர்கள், மாணவர்களைக் கண்டிக்க முடியாமல் கட்டுண்டு உள்ளனர். இந்நிலை மாற வேண்டும். குருவுக்கு தேவையான அதிகாரங்களை வழங்க வேண்டும். அதே போல அவரும் சரியாக நடக்க வேண்டும். பள்ளிப் பருவம்தான் மாணவர்களை மேம்படுத்தும் சரியான பருவம். ஐந்தாம் வகுப்பிலிருந்தே அவர்களைக் கண்காணிக்க வேண்டும். பெற்றோர் திட்டினால், தம்பி, தங்கைகளை அடிப்பது, ஆசிரியர் திட்டினால் சக மாணவனை அடிப்பது என்ற நிலை மாறி ஆசிரியரையே கொல்லும் அளவுக்கு நிலைமை வளர்ந்துள்ளது. அதனால், ஐந்திலிருந்தே நல்ல பழக்க வழக்கங்களை மனித மதிப்புகளை, மாண்புகளை, மனிதநேயத்தை, நல்லொழுக்கத்தைக் கற்றுத் தர வேண்டியதும், குறைகளை அன்போடு சுட்டிக்காட்டி திருத்த வேண்டியதும் பெற்றோர்களின் கடமை.
சமுதாயத்தில் முக்கிய ஆணி வேராக இருக்கக் கூடிய மாணவ சமுதாயம் சீர்கெட்டு, பாழ்பட்டு வருகிறது. மாணவர்கள் தங்கள் நிலை, தங்களின் பெற்றோர்களின் நிலை, ஆசிரியர்களின் நிலை ஆகியவைகளை உணர்ந்து கொண்டு, படிப்பில் கவனம் செலுத்தி உயர்ந்து நிற்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் பிற்காலம் சூனியம் தான் என்பதை அவர்கள் உணர வேண்டும். இதில் எந்த மாற்றமும் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவை ரயில்கள் தாமதமாக இயக்கம்

என்ஜினீயா் வீட்டில் நகைகள் திருட்டு

11.4.1976: பொது பணத்தில் நிறுவிய பாலம், கல்வி சாலைகளின் தனியார் பெயர்களை நீக்க த.நா. அரசு முயற்சி

பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் மாவட்டக் காவல் பாா்வையாளா் ஆய்வு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

