/

மாற்றம் பெறுமா மாணவர் சமூகம்?

தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன. கல்லூரிகள் இன்னும் சில தினங்களில் திறக்கப்பட உள்ளன. "ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்'. இந்தக் குறளுக்கு ஏற்ப பள்ளி மற்றும் கல்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:03 am

தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன. கல்லூரிகள் இன்னும் சில தினங்களில் திறக்கப்பட உள்ளன. "ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்'. இந்தக் குறளுக்கு ஏற்ப பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஒழுக்கம் என்பது ஒரு குறிக்கோளாகவே இருந்த காலமுண்டு. தற்கால நிலையில், அந்த ஒழுக்கம் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. இதற்கு பல காரணங்களைக் கூறலாம்.

அந்த காலகட்டத்தில் ஆசிரியர்கள் அடிக்காவிட்டாலும் கண்டிப்பு காட்டினாலேயே பயம் கலந்த மரியாதை வந்துவிடும். தற்போது, பல மீடியாக்களில் வரும் கதைகளில், பல ஆசிரியர்களைக் கெட்டவர்களாகவும், மாணவர்களை மோசமானவர்களாகவும் சித்திரிக்கின்றன. இதைப் பார்க்கும் இருவருக்கும் ஒருவித கசப்புணர்வு வர வாய்ப்பு உள்ளது.

தொலைத்தொடர்புச் சாதனங்கள், திரைப்படம், தொலைக்காட்சித் தொடர் போன்றவை பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகம், மாணவர்கள் மனநிலையைப் பாதிப்படைய ஒரு காரணமாக உள்ளது. நாகரிகம் என்ற பெயரில் நாம் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் ஒதுக்கிவைப்பதால், பல சீர்கேடுகள் வருகின்றன என நாம் எண்ணத் தவறிவிட்டோம்.

குருவுக்குச் செய்ய வேண்டிய மரியாதை அப்போது செய்யப்பட்டது. குருவும் மாணவர்களை மதித்து அவர்களுக்குக் கற்பித்து வந்தனர். தற்போதைய நிலை என்ன? பள்ளி என்றால் மாணவர்களுக்கு ஒரு மரியாதை ஏற்பட வேண்டும். சில பெற்றோர்கள் மத்தியில், குறிப்பிட்ட சில கல்வி நிறுவனங்களில் கல்வி கற்றால்தான் பிள்ளைகள் சிறந்து விளங்குவார்கள் என்ற எண்ணம் உள்ளது. ஆனால், தங்கள் குழந்தைகளின் கற்கும் ஆற்றல் எவ்வளவு உள்ளது என்பதை உணர்வதில்லை. ஆங்கில வழிக் கல்வி முறையில் கல்வி கற்பதுதான் பெருமை என நினைக்கும் நிலை உள்ளது. ஆங்கில மொழித் திறன் அவசியம்தான். ஆனால், தாய்மொழியைப் புறக்கணிக்கக் கூடாது.

கடந்த பதினைந்து ஆண்டுகளில் கல்வி-பள்ளி-சமூக மாற்றங்களைப் பார்க்கும்போது, ஒரு வகுப்பில் 30 சதவிகித மாணவர்கள், ஆசிரியர்களிடம் திட்டு வாங்குபவர்களாக இருப்பார்கள். இப்படி தொடர்ந்து திட்டு வாங்கும் மாணவனின் மனநிலை பாதிக்கப்படுகிறது.

இதனால், நாம் என்ன செய்தாலும் ஆசிரியர் திட்டத்தான் செய்வார் என்ற எண்ணம் கற்கும் திறனைக் குறைத்து விடுகிறது. ஐந்து விரலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. வகுப்பில் உள்ள மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக இருப்பார்கள். அந்த மாணவர்களைப் புரிந்துகொண்டு, அவர்களிடம் நல்லவிதமாகப் பேசி கற்பிக்க வேண்டும்.

இதனை எத்தனை ஆசிரியர்கள் செய்கிறார்கள் என்பதே கேள்வி. படித்தால் என்ன, படிக்காவிட்டால் என்ன என்ற மனநிலை சில ஆசிரியர்களுக்கு இருப்பது மறுக்க முடியாத உண்மை. ஆசிரியர்கள் திட்டினால், அதைச் சவாலாக ஏற்று ஜெயிக்க வேண்டும் என்ற மனநிலை எத்தனை மாணவர்களிடம் உள்ளது?

பிள்ளைகளுக்கு செல்போன், கணினி உள்ளிட்டவைகளை வாங்கிக் கொடுத்துவிட்டு, அவர்களுடன் அமர்ந்து குத்துப்பாட்டினை ரசிக்கும் பெற்றோர்கள் ஒருபுறம். பிளஸ் 2 வகுப்பில் நிறைய மதிப்பெண்கள் பெற்றால்தான் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும், நல்ல வேலை கிடைக்கும் எனச் சொல்லி நெருக்கடி கொடுக்கும் உற்றார்-உறவினர் ஒருபுறம். ஆசிரியர்-மாணவர் உறவின் புனிதம் கெட்டதோடு, தமிழையே எழுத்துக் கூட்டி படிக்கத் தெரியாவிட்டாலும், எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி செய்யச் சொல்லும் கல்வி முறையும் இதற்கு ஒரு காரணமாகும். இவற்றையெல்லாம் களைய மாணவர்கள், ஆசிரியர் நல்லுறவு வளர பெற்றோர்களைப் பள்ளிக்கு வரவழைத்து, அவர்களோடு உரையாடி, உரிய ஆலோசனைகளை பள்ளி நிர்வாகம் வழங்க வேண்டும்.

தேவைப்பட்டால், மனநல நிபுணர்களை வரவழைத்து, பேசச் சொல்லலாம். நாட்டின் வருங்காலத் தூண்களான மாணவச் சமுதாயத்தினை நல்வழிப்படுத்துதல் என்பது பெற்றோர்-ஆசிரியர் மற்றும் சமூகத்தின் கடமை என்பதை உணர்ந்து செயல்பட்டால், மாணவர் சமூகம் மாற்றம் பெறுவது உறுதியாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.