தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வெள்ளை வீசப்பட்ட குளம்

மத்திய அரசின் ஆட்சிமுறை, தவறுகள், முறைகேடுகள் மற்றும் லஞ்ச ஊழல்கள் தேசம் முழுவதையும், 122 கோடி மக்களையும் பாதிக்கிறது. மாநில அரசுகளின் ஆட்சிமுறை, தவறுகள், முறைகேடுகள் மற்றும் லஞ்ச ஊழல்கள் அந்தந்த மாநில மக்களைப் பாதிக்கின்றன.

News image
Updated On :9 நவம்பர் 2012, 11:38 pm

சுடர்ஒளி முத்துப்பெருமாள்

மத்திய அரசின் ஆட்சிமுறை, தவறுகள், முறைகேடுகள் மற்றும் லஞ்ச ஊழல்கள் தேசம் முழுவதையும், 122 கோடி மக்களையும் பாதிக்கிறது. மாநில அரசுகளின் ஆட்சிமுறை, தவறுகள், முறைகேடுகள் மற்றும் லஞ்ச ஊழல்கள் அந்தந்த மாநில மக்களைப் பாதிக்கின்றன.

மக்கள் தயவைக் கொண்டு, வெள்ளையர்களைக் கப்பலேற்றி அனுப்பி விட்டு, இந்திய சுதேசிகள் மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சிக் கட்டில்களில் அமர்ந்தனர். அதை இந்திய மக்கள் விடுதலை பெற்று விட்டதாக வருணித்தனர்.

காந்தியின் சீடராகவே நேருவைக் கருதியது பாரதம். அவர்களும் அப்படித்தான் நடந்து கொண்டனர். ஆனால், மனப்பான்மையில், அரசியல் கண்ணோட்டத்தில், அரசாங்க நடைமுறையில், அரசு நிர்மாணப்பணிகளில் அவ்விருவரின் அபிப்ராயங்கள் வெவ்வேறாக இருந்தன. இந்த வேறுபாடு அவ்விருவரின் நட்புக்கும் தொடர்புக்கும் அன்பு பாசத்திற்கும் எவ்வித குந்தகத்தையும் தரவில்லை.

நேரு கற்றறிந்த கல்வியும், புரட்சிக்குப் பிறகான சோவியத் ரஷ்யாவின் சோஷலிஸ ஆட்சிமுறை ஏற்படுத்திய தாக்கமும், இந்திய அரசின் ஆட்சிப்போக்கை சமதர்ம சித்தாந்த வழியில் செலுத்த வேண்டும் என்பதாகவே அவர் மனதில் படிமானம் இட்டிருந்தது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஆட்சிப் பொறுப்பேற்ற அவர் மனப் படிமானத்தின் படியான ஆட்சிமுறையை அமல்படுத்தத் தொடங்கினார்.

காந்தியின் திட்டமே வேறு. அவர் கண்ட கிராம ராஜ்ஜியமும், சுயதேவைப் பூர்த்திப் பொருளாதாரத் தத்துவமும் அன்றைய காலகட்டத்தில் நமது பாரதத்திற்கு மிகப் பெரிய பொருத்தமானதாகவே இருந்தன. பலரும் அவற்றை வரவேற்கவே செய்தனர்.

காந்தியும், நேருவும் மக்கள் செல்வாக்கை அபரிமிதமாகப் பெற்ற மகத்தான தலைவர்கள். அவர்களுக்குள் படிமம் பெற்றிருந்த வெவ்வேறு விழுமியங்கள், சுதந்திரம் எட்டும் வரை, விடுதலை போராட்டக் காலங்களானதால், முரண்பாடாய் வெளியே தெரியவில்லை.

சுதந்திரத்திற்குப் பிறகுங்கூட காந்தி 165 நாட்களே உயிருடன் இருந்ததால் நேருவின் ஆட்சிமுறை, அவரது மனப் படிமானத்தின் படியான சோஷலிஸ பாணியிலேயே தொடர்ந்தது.

நேருவுக்கு அடுத்து இந்திராகாந்தி வரையும்கூட நேருவின் ஆட்சிமுறைப் போக்கே நீடித்தது.

இந்திரா காந்திக்குப் பிறகும் அப்போக்கையே கடைபிடிக்க வேண்டிய ராஜீவ் காந்தியும் சுயநலச் சூழல்களால் தவறாக வழி நடத்தப்பட, நேரு, இந்திரா அளவுக்கு அரசியல் முதிர்ச்சி பெற்றிராததால் ஒரு சில தவறுகளுக்கு ஆளானார். அதுவரை நேரு பரம்பரைக்கு ஒவ்வாத லஞ்ச ஊழல் (ஃபோபர்ஸ் பீரங்கி பேர ஊழல்) குற்றச்சாட்டுக்கும் ஆளானார். இன்று அவர் இவர் என்கிற பேதமெல்லாம் கிடையாது, ஊழலும் முறைகேடுகளும் ஏகமயம்! இதைத் தொடர்ந்து உலகமயம், தாராளமயம், தனியார்மயம் ஆட்சியில் அறிமுகமும் அமலாக்கமும் செய்யப்பட்டதாலும், மத்தியிலும், மாநிலங்களிலும் ஒரு கட்சி ஆட்சிபோய் பலகட்சி (கூட்டணி) ஆட்சிகள் ஏற்பட்டதாலும் தலைக்கட்டு அதிகமாகிப் பங்குகள் பலவானபோது வேட்டைகளும் பெரிதாகிப் பரிணாமம் பெற்றது. அதையும் ஒழுங்குபடுத்தி முறைசெய்ய ஓர் ஏற்பாடு இல்லாததால் தானடித்த மூப்பாய், அவரவர்க்குக் கிடைத்த வாய்ப்பில், ஆளுக்கொரு பந்தக்காலை அவரவர் பங்குக்குப் பிடுங்கலாயினர்.

தமிழ்நாட்டிலிருந்து தில்லி சென்று அமைச்சர் பதவி வகித்த ஆர்.கே. சண்முகம் செட்டியார், டி.டி. கிருஷ்ணமாச்சாரி, சி.சுப்பிரமணியம், ஆர். வெங்கட்ராமன், ஓ.வி. அழகேசன் போன்றோர் களங்கம் கற்பிக்க முடியாத அளவுக்கு இருந்தனர். அப்படியே களங்கம் கற்பிக்கப்பட்டபோது அடுத்த பேச்சுச் பேச இடங்கொடுக்காமல் பதவியைத் துச்சமெனத் தூக்கியெறிந்து தங்கள் கெüரவத்தையும், செல்வாக்கையும் நிலை நிறுத்தினர்.

இப்போது, அப்படி இல்லை. சமீப காலத்தில் தில்லியில் அமைச்சர் பதவி வகித்து வந்த தமிழர்கள், குறிப்பாக ஓர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், உலக மகா ஊழல் மற்றும் முறைகேடுகள் புரிந்ததாக உலகப் புகழ் பெற்று விட்டனர். அவற்றைத் தங்களளவில் நிறுத்திக் கொள்ளாமல் தங்கள் குடும்பம், உற்றார், உறவினர், ஒட்டினோர், உரசினோர், தொட்டோர், தொடர்வோர் என்று சகலரையும் ஈடுபடுத்தியதால் டமாரம் அடித்தாற்போல ஆகிவிட்டது. இந்தியாவில் ஊழலும் முறைகேடுகளும் ஏகமயம்.

ஓர் உருவகம், அது ஊரை ஒட்டிய குளம், உயர்ந்த கரை, நிறைந்த நீர்ச் சூழல், மீன் முதலான நீர்வாழ் உயிரினங்கள் செறிவு, கிளை நுனிகளை மட்டுமே காட்டிக் கொண்டு நீருக்குள் நிற்கும் கருவேலம் மரங்கள், கிளை நுனிகளில் அலகு நீண்ட பல வண்ணப் பறவைகள்! குளக்கரைச் சோங்கில் எப்போதும் மனிதப்புழக்கம், இருந்தும் எவரும் தூண்டில் போடவில்லை, ஏன்? ஊர்க்கட்டுப்பாடு-அவ்வூர் மக்களின் சுயக்கட்டுப்பாடு.

கோடையில் குள நீர் வற்றிச் சுருங்குகிறது, சுருங்கிய நீரில் சிறிதும், பெறிதுமாய் செறிவாய் மீன்கள். ஒரு நாள், அந்தக் குளக்கரையில் ஏராளமான மக்கள் கூட்டம். அவர்களில் பலர் மீன் பிடிக்க வந்தவர்கள். கைகளில் பல விதமான வலைகள். ஊர் நாட்டாண்மை வருகிறார். தன் தோளில் கிடந்த துண்டை எடுத்து வெள்ளை வீசுகிறார். அது அக்குளச் செல்வங்களை அழிமானம் செய்ய அனுமதித்த சமிக்ஞை. கரையில் இருந்தவர்கள் குளத்தில் பாய்கிறார்கள். வலைபோட்டு அரித்தெடுக்கிறார்கள், மீன்களை. மறுநாள் அந்தக் குளத்தில் ஒரு நண்டுக் குஞ்சு கூட இல்லை. கரையோரச் சோங்கும் களையிழந்து பூவை இழந்த பெண் பிள்ளையாய்!

இது தான் இன்றைய இந்தியாவின் நிலை. இந்தச் சீரழிவுக்கான "வெள்ளை வீச்சு' எப்போது நிகழ்ந்தது?

சிறுபான்மை காங்கிரஸ் ஆட்சியின் இறுதிக் காலத்தில், 1989-ல், பேசவும் சிரிக்கவும் பழகாத பிரதமர் நரசிம்மராவ், தன் தோளில் கிடந்த "உலகமயம்' என்கிற அமெரிக்க நெசவுத் துண்டை எடுத்து "வெள்ளை வீசினார்'. அப்போது பாய்ந்த அரசியல்வாதிகள் மற்றும் பெருமுதலாளிகளால், உருவகத்தில் கொல்லப்பட்ட குளம் அழிமானமுற்றதைப் போல இந்தியச் செல்வங்களும் அழிந்து கொண்டே வருகின்றன. இந்த நிலை நீடித்தால் இந்தியாவும் இன்னொரு சோமாலிய தேசமாக உருமாறிவிடும். இந்தியா இந்தியாவாக இருக்காது. பெரும்பகுதியை அமெரிக்காவும், எஞ்சிய பகுதியை பிரிட்டன் முதலான ஐரோப்பிய நாடுகளும் பங்கு போட்டுக் கொள்ளும், அவனவன் அவனவன் வாய்க்கு வந்தபடி ஆளுக்கொரு பெயரிட்டு அழைப்பான். உலக வரைபடத்தில் இந்தியாவின் அளவொழுங்கும், அழகொழுங்கும் மாறிப்போய்விடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.