

வந்துவிட்டது - மீண்டும் வந்துவிட்டது - ஜல்லிக்கட்டு.
மனிதனுக்கும் பிராணிக்குமான போட்டி. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டல் மற்றும் அனுமதியுடன் நடைபெறும் வீர விளையாட்டு...
இரண்டு காரணங்களுக்காக இந்த ஜல்லிக்கட்டு அல்லது எருது விடுதல் என்ற இந்த வீர விளையாட்டை மனம் ஏற்க முடியாமல் போகிறது.
பொருத்தமான விளையாட்டுதானா - முதலில் இது விளையாட்டுதானா?
விளைவுகள் தாங்கக்கூடியவையா?
மனிதனும் மனிதனும் சண்டையிடுவது சரியானது, பொருத்தமானது. அதற்கே ஏகப்பட்ட விதிமுறைகள் உண்டு. பிராணியுடன் மனிதன் பொருதுவது சரியா?
ஒரு காலத்தில் குத்துச் சண்டைப் போட்டிகளில் இருவரில் ஒருவர் இறக்கும் வரையில் கூட போட்டி நடைபெறுமாம். "கடைசிவரை இருந்து பார்த்துவிடுவது' என்ற மன நிலையில் அந்தக் காலத்தில் ரசிகர்கள் இருந்திருக்கிறார்கள்.
பிறகு இதில் படிப்படியாக விதிகளையும் கட்டுப்பாடுகளையும் புகுத்தி, சற்றே நாகரிகமான விளையாட்டாக மாற்றியிருக்கிறார்கள். அப்படியும் டபிள்யூ டபிள்யூ போட்டிகளைத் தொலைக்காட்சியில் பார்த்தால் மனம் பதைக்கிறது.
இரும்புச் சேர்களால் தலையிலும் உடலிலும் திடீரென அடித்து ரத்த வெள்ளமாக்குகிறார்கள்.
இப்போது குத்துச் சண்டைப் போட்டிகளில் சமமான எடைப் பிரிவுகளில்தான் போட்டிகள் நடத்தப்படுகின்றன. எனவே "மெலியானை', "வலியான்' புரட்டி எடுக்கும் போட்டிகளுக்கு வாய்ப்புகள் இல்லை. அத்துடன் போட்டியாளர்களின் உயிரையும் உடலையும் காக்கும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டுவிட்டன. நடுவரின் கண்காணிப்பும் பலமாக இருக்கிறது. இப்படி மனிதர்களுக்குள்ளே நடக்கும் சண்டைகளுக்குப் பலவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துவிட்டு மோதவிடுகிறார்கள்.
ஹாக்கி, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் ஆட்டக்காரர்கள் அணிந்துகொள்ளவே பல கவசங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. அறிவிலும் உடல் பலத்திலும் சமமே இல்லாத மனிதனும் மாடும் மோதுவதை விளையாட்டாகவோ அதில் வீரம் இருப்பதாகவோ கருத வேண்டுமா?
மாட்டுக்குக் கொழுத்த ஆகாரம் கொடுப்பதோடு வெறியூட்ட சாராயத்தையும் தருகின்றனர், வெறி கொள்வதற்கான ஊசிகளையும் போடுவதாகக் கூறப்படுகிறது. இது எந்த விதத்தில் நியாயம்?
வேட்டைச் சமுதாயம், வேளாண் சமுதாயமாக மாறிய காலத்தில் வேறு பொழுதுபோக்குகள் இல்லாததாலும், உடல் வலிமை அவசியமான வாழ்வியல் தகுதி என்பதாலும், "காளையை அடக்குபவனுக்கே தனது மகள்' என்று பல தகப்பன்மார்கள் அந்தக் காலத்தில் அறிவித்திருக்கிறார்கள். அதை இப்போதும் நடத்துவது எதற்காக?
ஜல்லிக்கட்டில் உயிரிழப்பவர் குடும்பங்களுக்குப் போட்டியாளர்கள் தரும் தொகை எவ்வளவு? காயம் அடைந்தவர்களுக்குத் தரப்படும் நஷ்ட ஈடு எப்படிப்பட்டது? நிரந்தர ஊனம் ஆகிவிட்டால் அவருடைய வாழ்வாதாரத்துக்கு போட்டியாளர்களோ சுற்றுலாத்துறையோ மாநில அரசோ பொறுப்பேற்கின்றனரா?
போட்டியில் பங்கேற்காமல் - ஆனால் வேடிக்கை பார்க்கவந்து - மாடு முட்டி இறப்பவர்கள் அல்லது காயம் அடைபவர்களின் கதி என்ன?
காளையை அடக்குவோருக்குப் பரிசாகத் தரப்படுவது ஒரு கிராம் தங்கம், சில ஆயிரம் ரூபாய்கள் அல்லது அதற்கும் குறைவான தொகை, பித்தளை தவலை, அண்டா, மிக்சி, குக்கர், சைக்கிள் போன்றவைதான். இதற்காகவா இளைஞர்களின் உயிரைப் பணயம் வைப்பது?
கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, பூப்பந்து, வாலிபால், கபடி, நீச்சல் போன்ற போட்டிகளில் திறமையைக் காட்டி வெற்றி பெற்றால் அது வீரத்தில் சேராதா?
உலகமே நாகரிகம் அடையும்போது நாமும் நாகரிகம் அடைவோமா - சிந்தனையில்தான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.