இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பாராட்டு எண்ணும் ஊக்க மருந்து!

சில வாரங்களுக்கு முன்பு ஒரு நண்பன் வீட்டுக்குச் சென்றிருந்தேன். நான் போன வேளை சரியில்லை போல. விடாமல் அழுது கொண்டிருந்த தன் பேரனைச் சமாதானம் செய்து கொண்டிருந்தான் அவன்.

Updated On :24 ஆகஸ்ட் 2014, 9:39 pm

சில வாரங்களுக்கு முன்பு ஒரு நண்பன் வீட்டுக்குச் சென்றிருந்தேன். நான் போன வேளை சரியில்லை போல. விடாமல் அழுது கொண்டிருந்த தன் பேரனைச் சமாதானம் செய்து கொண்டிருந்தான் அவன். யு.கே.ஜி. படித்துக் கொண்டிருக்கும் பேரனுக்குப் பள்ளியில் வண்ணம் பூசுவது, எண்களை எழுதிப் பழகுவது போன்ற பயிற்சிகளைத் தந்திருக்கிறார்கள். அவனும் செய்திருக்கிறான். ஆனாலும், அவனுக்கு "நட்சத்திரக் குறிகள்' ஏதும் போடப்படவில்லையாம். அதுதான் அழுகை!

அந்தத் தாளைச் சினேகிதன் என்னிடம் காண்பித்தான். "பரவாயில்லையே? நீ கோட்டுக்கு வெளியே வண்ணம் தீட்டியருக்கிறாய்! மேலும் முயற்சி செய்' என்று குழந்தையைச் சமாதானப்படுத்தி விட்டுத் திரும்பினேன். உள்ளூற எனக்கு வேதனையாக இருந்தது. இது போல் குழந்தைகளுக்கு, ஏன் "ஸ்டார்' போட்டு மற்றவர்களுடன் அவர்களை ஒப்பிட வேண்டும்? மிக மோசமாகக் கிறுக்குபவர்களை ஒதுக்கிவிட்டு, பிற சிறார்களுக்கு நன்று என்றோ, மிகவும் நன்று என்றோ எழுதி விட்டுப் போக வேண்டியதுதானே?

சரி, பள்ளிக் கூடங்களாவது கல்வி கற்றுக் கொடுத்து வருங்கால சமுதாயத்தை உருவாக்கும் ஆலயம். மேன்மேலும் நன்றாகப் படித்து முன்னேற, பாராட்டும் கண்டிப்பும் அவசியம். பாராட்டின் சின்னம்தான் நட்சத்திரக் குறிகள் என்கிற வாதத்தை ஏற்கலாம். ஆனால், தொலைக்காட்சியின் சில சேனல்கள் போட்டி என்கிற பெயரில் சிறுவர், சிறுமியர்களை வதைக்கிற கூத்துகளைத் தாங்க முடியவில்லை. பங்கேற்கும் பிரபல திரையுலக, இசையுலகக் கலைஞர்கள் புகழ் மாலைகளை அள்ளி வீசுகிறார்கள். வருங்கால சிவாஜி நீதான். அடுத்த எம்.எல்.வி. நீதான் என்றெல்லாம் சொல்லி குழந்தைகளை உசுப்பேற்றி விடுகிறார்கள்.

அகில இந்திய தொலைக்காட்சியும் வேறு ஒரு நிறுவனமும் இணைந்து நடத்திய போட்டியைப் பற்றி இங்கு குறிப்பிட்டாக வேண்டும். எட்டு வயது சிறுவனிலிருந்து, பதின் பருவ இளைஞர் வரை, வாய்ப்பாட்டில் - தங்கள் திறமையை நிரூபிப்பதற்கான வாய்ப்பு. இதில் நடுவர்கள் குட், ரெயிலைப் பிடிக்கிற வேகம் கூடாது, நிதானம் தேவை. ஓக்கே! என்றோ, நல்ல குரல் தோடி ராகத்தில் கமகம முக்கியம். இன்னும் பயிற்சி செய் என்று பாராட்டுடன், குறையையும் மென்மையாகச் சொல்லுகிறார்கள். இளங் கலைஞர்களுக்கு இது ஒரு வகையில் பாராட்டாகவும், மற்றொரு வகையில் அறிவுரையாகவும் அமைகிறது.

கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள் அனைவருக்குமே பாராட்டு அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், அது உளப் பூர்வமான வெளிப்பாடாகவும், ஒரு வரம்புக்குள் அடங்கியுமிருக்க வேண்டும். முப்பது வருடங்களுக்கு முன்பு நண்பரும் நானும் புகழ் பெற்ற எழுத்தாளர் லக்ஷ்மியை மயிலை இல்லத்தில் சந்தித்தோம். பேச்சு வாக்கில் நண்பர் லக்ஷ்மியின் ஒரு நாவலிலிருந்து ஒரு சின்ன நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுச் சொன்னதும், அவர் முகம் அடைந்த மலர்ச்சி, இப்போதும் என் நினைவிலிருக்கிறது.

அலுவலகங்களிலும் பாராட்டு மிக அவசியம்தான், நற்குணம் கண்டு போற்றுகிற வழக்கத்தைகக் கடைப்பிடித்தால், அது ஊழியருக்கும் நல்லது. நிறுவனமும் முன்னேறும். பல அரசு நிறுவனங்களில் பதவி உயர்வு என்பது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பின்னரே கிடைக்கக் கூடியது. கணினி நிறுவனங்களிலோ அகால வேளைகளில் இருந்து பணிபுரிய வேண்டிய நிர்பந்தம். இது போன்ற சூழலில் ஊழியரின் திறமையை வெளிக்கொணர பாராட்டைத் தவிர வலிமை வாய்ந்தது எது? சில எதிர்மறை சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள். எல்லாம் சுயநலம். முதுகு சொறிகிற வேலை, காரியம் ஆவதற்கு வெறுமனே புகழ வேண்டியது. ம்.... இதையும் நம்புகிறார்களே என்று முணுமுணுப்பார்கள். இத்தகைய கருத்தில் ஓரளவு உண்மை இருக்கலாம். ஆனால், அந்தக் கோணத்தில் நோக்கி, எதையும் துருவித் துருவி ஆராய்வது சரியான போக்கு இல்லை. அப்படிப் பார்த்தால் தகப்பன் - பிள்ளை; கணவன் - மனைவி போன்ற குடும்ப உறவில்கூட சுயநலம் ஒளிந்திருக்கிறதே?

ஆக, பாராட்டு அவசியம்தான். ஆனால், அது சரியான நேரத்தில் சரியான முறையில், சரியான அளவில் அமைய வேண்டும்.

பாராட்டு என்பது தன் பணியில் மேலும் சிறக்க ஓர் உந்து சக்தி என கொள்ள வேண்டும். அது மிதமிஞ்சிப் போய் போதையாகிற அளவுக்கு விட கூடாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.