/

முதியோரை அரவணைப்போம்!

இந்தியாவில் ஏறத்தாழ 81 லட்சத்திற்கும் அதிகமான முதியோர் பராமரிப்புக்காகவும் பாதுகாப்புக்காகவும் பாசத்திற்காகவும் ஏங்குகின்றனர் என்பதுதான் உண்மை.

News image
Updated On :28 ஜூலை 2025, 4:27 am

தங்க. சங்கரபாண்டியன்

இந்தியாவில் ஏறத்தாழ 81 லட்சத்திற்கும் அதிகமான முதியோர் பராமரிப்புக்காகவும் பாதுகாப்புக்காகவும் பாசத்திற்காகவும் ஏங்குகின்றனர் என்பதுதான் உண்மை.

முதியோருக்கு எதிரான கொடுமைகள் மட்டுமன்றி அவர்களது வாழ்க்கைச் சூழலும் ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. மக்கள் தொகையில் ஆண்டுக்கு ஆண்டு முதியோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மருத்துவத் துறையின் வளர்ச்சியால் இது எதிர்வரும் காலங்களில் இன்னும் அதிகமாக உயரும் என்பதுதான் அந்த ஆய்வு.

முதியோருக்கு எதிரான கொடுமைகளில் சிக்கித் தவிக்கும் பலர் தங்களது குடும்ப கெüரவத்தின் காரணமாய் யாரிடமும் புகார் செய்யாமல் உள்ளனர்.

பிறர் தங்களை மரியாதைக் குறைவாக நடத்துவதாகவும், தங்களை மோசமாகத் திட்டுவதாகவும் சில முதியோர் தெரிவிக்கின்றனர். பலர் தங்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளை யாரிடம் சொல்வது என்று புரியாமல் உள்ளனர்.

பொருளாதார ரீதியில் பிறரின் வருவாயை சார்ந்திருப்பதால் சில முதியோர்களுக்கு அவர்தம் குடும்பத்தினர் ஒத்துழைப்புக் கொடுக்காமல் உள்ளனர். குடும்பத்தினருக்கும் முதியவர்களுக்கும் இருக்கும் இடைவெளியைக் குறைப்பது மட்டுமே முதியோரின் பிரச்னைக்குத் தீர்வாக இருக்க முடியும்.

மகனுடனோ, மகளுடனோ சேர்ந்து வாழும் முதியோர், ஏதாவது ஒரு விதத்தில் குடும்பத்தினரால் புறக்கணிக்கப்படுவதாகவும் அவமானப்படுத்தப்படுவதாகவும் சமீபத்தில் வெளியான அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

நகர்ப்புறத்தில் வாழும் முதியோரில் ஆறு பேரில் ஒருவர் போதிய ஊட்டச் சத்துள்ள உணவு கிடைக்கப் பெறாதவராக உள்ளதாகவும் மூன்றில் ஒருவர் முறையான மருத்துவ வசதியும் தேவையான மருந்துகளைப் பெறும் வழி இல்லாமல் இருப்பதாகவும், இரண்டு பேரில் ஒருவர் குடும்பத்தினராலும், சமுதாயத்தினராலும் கெüரவமாகவும், மரியாதையாகவும் நடத்தப்படாதவராகவும் இருப்பதாக ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது. குறிப்பாக 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் சுமார் 7 கோடி பேர் 60 வயதைக் கடந்தவராக இருந்தனர். தற்போதைய நவீன மருத்துவ முறைகளாலும் மத்திய - மாநில அரசுகள் தரும் மருத்துவ வசதிகளாலும் முதியோரின் ஆயுள்காலம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் 2016-ஆம் ஆண்டில் இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் 12 கோடி பேர் இருப்பர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இவர்களில் 51 சதவீதத்தினர் பெண்களாக இருப்பர்.

சென்னையில் மட்டும் சுமார் 50 முதியோர் இல்லங்களில் முதியவர்கள் கட்டணம் செலுத்தி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பது ஒரு கசப்பான உண்மையாகம்.

நாம் நம் பெற்றோராகிய முதியவர்களை அனாதைகளாக்கிவிடாமல் நம்முடனே அவர்களை அரவணைத்துக் காப்பதுதான், முதியோர் பிரச்னைகளுக்கான சிறந்த தீர்வாகும்.

நமது திரைப்படங்களில் முதியோர் மீதான மதிப்பீட்டைக் குறைக்கும் விதமான காட்சிகள் காட்டப்படுகின்றன. இவை முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும். அதிலும், தமிழ்ப் பாடல்களில், நகைச்சுவைக் காட்சிகளில் முதியவர்களை அடி வாங்குபவர்களாக சித்திரிக்கும் அநாகரிகப் போக்கும் உடனடியாக மாற்றப்பட வேண்டும்.

மாறிவரும் சமூகச் சூழலில் போதிய மருத்துவ வசதியும், தரமான தங்கும் வசதியும் கொண்ட முதியோர் இல்லங்கள் ஒவ்வொரு ஊராட்சி மற்றும் பேரூராட்சியிலும் அரசு அமைத்திட வேண்டும்.

அரசு உதவியுடன் நடத்தப்படும் முதியோர் இல்லங்களை அந்தந்த ஊராட்சி, பேரூராட்சியில் இயங்கும் கல்லூரிகள், வங்கிகள், தொழிற்சாலைகள் போன்றவை தத்தெடுத்துப் பராமரித்தால் மட்டுமே முதியோர் வாழ்வில் வசந்தம் வீசும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.