டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் தமிழில் வாதாட அனுமதிக்க வேண்டும். தாய் மொழியில் வாதிடுவதற்கு அனுமதி கோர வேண்டும் என்னும் அவல நிலை இந்தியாவில் மட்டும்தான் நிலவுகிறது.

News image
Updated On :28 ஜூலை 2025, 4:27 am

தங்க. சங்கரபாண்டியன்

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் தமிழில் வாதாட அனுமதிக்க வேண்டும். தாய் மொழியில் வாதிடுவதற்கு அனுமதி கோர வேண்டும் என்னும் அவல நிலை இந்தியாவில் மட்டும்தான் நிலவுகிறது. உலகின் பெரும்பான்மையான நாடுகளில் உள்ள நீதிமன்றங்களில் தாய் மொழியில்தான் வழக்கு விசாரணைகள் நடைபெறுகின்றன.

ஆங்கிலம் தோன்றிய ஐரோப்பாவிலேயே இந்த நிலைதான் காணப்படுகிறது. தொடக்கத்தில் பெரும் பாலான ஐரோப்பிய நாடுகளில் ஆங்கிலம்தான் நீதிமன்றத்தில் வழக்கு மொழியாக இருந்து வந்தது. ஆனால், அந்த நாடுகளில் உள்ள வழக்குரைஞர்கள் தாய்மொழியில் வாதிடுவதற்கான உரிமை தங்களுக்கு வேண்டும் என்று வலியுறுத்தியதின் பயனாக இன்று ஐரோப்பாவின் அனைத்து நாடுகளிலும் உள்ள நீதிமன்றங்களிலும் தாய் மொழிதான் வழக்கு மொழியாக உள்ளது. இந்தியாவின் கதையும் கிட்டத்தட்ட அதேதான். ஒரு காலத்தில் இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டபொழுது உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் ஆங்கிலம் வழக்கு மொழியாகிவிட்டது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினாலும் நீதிமன்றங்களில் இருந்து ஆங்கிலத்தை வெளியேற்ற நமது ஆட்சியாளர்களே தடையாக உள்ளனர்.

தமிழில் வாதிடுவது தமிழர்களின் உரிமை. சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறிவிப்பது என்பது ஏதோ சலுகை தருவது அல்ல. மாறாக இதுவரை மறுக்கப்பட்டு வந்த உரிமையை வழங்குவது ஆகும். மொழி என்பது மனிதனின் உரிமையாகும்.

1948-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி பாரிஸ் நகரில் நடைபெற்ற ஐ.நா. பொது சபையின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட உலகளாவிய மனித உரிமை பிரகடனத்தில் மனிதர்களின் மொழி உரிமைக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பிரகடனத்தின் முன்னுரையில் "மனித குலத்தின் கண்ணியம் மற்றும் மதிப்புத் தொடர்பான அடிப்படை மனித உரிமைகளில் இப்பிரகடனம் நம்பிக்கை கொள்கிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் இரண்டாவது பிரிவில் "உலகிலுள்ள அனைவரும் அவர்களின் இனம் - நிறம் - பாலினம் - மொழி - மதம் - அரசியல் அல்லது பிற அம்சங்களை பொருள்படுத்தாமல் (மொழியுரிமை உள்பட) அனைவருக்கும் அனைத்து உரிமைகள் மற்றும் சுதந்திரங்களும் உண்டு' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரகடனத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டிருக்கிறது. அதன்படி தமிழர்களுக்குத் தங்களின் தாய் மொழியான தமிழ் மொழியை தங்களின் அனைத்துத் தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளும் உரிமை உண்டு.

சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறிவிப்பதில் எந்தத் தடையும் இல்லை. உயர்நீதிமன்றங்களில் வழக்கு மொழியாக அந்தந்த மாநிலங்களின் அலுவல் மொழியை அறிவிக்கலாம். இந்திய அரசியல் சட்டத்தின் 348 (2) பிரிவில் ஒரு மாநிலத்தில் அமைந்துள்ள உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக ஹிந்தியையோ அல்லது அந்த மாநிலத்தின் அலுவல் மொழியாக பயன்படுத்தப்படும் வேறு மொழியோ குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற்று ஆளுநர் அறிவிக்கலாம் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் அலுவல் மொழி ஆணையத்தின் பரிந்துரைகளை ஆய்வு செய்வதற்காக இந்திய அரசியல் சட்டத்தின் 344 (4) பிரிவின் கீழ் அமைக்கப்பட்ட 30 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளது. 8.2.1959 அன்று குடியரசுத் தலைவரிடம் தாக்கல் செய்யப்பட்ட இக்குழுவின் அறிக்கையில்தான் நீதிமன்ற வழக்கு மொழியாக மாநில மொழிகளை அறிவிக்கலாம் என்று முதன் முறையாக பரிந்துரைக்கப்பட்டது.

அலுவல் மொழி ஆணையத்தின் பரிந்துரைகளில் "உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் வழக்கு மொழியாக ஆங்கிலம் உள்ளது. இதை மாற்றுவதற்கான நேரம் வரும்போது ஹிந்தியையே அலுவல் மொழியாக அறிவிக்கலாம்' என்று கூறப்பட்டிருந்தது. அதை ஆய்வு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு உயர்நீதிமன்றம் தொடர்பான பரிந்துரைகளை மட்டும் முழுமையாக ஏற்றுக் கொண்டது. உயர்நீதிமன்றங்களின் ஆட்சி மொழி தொடர்பான பரிந்துரையே நிராகரித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் "அனைத்து உயர்நீதிமன்றங்களிலும் ஆங்கிலம்தான் ஆட்சி மொழியாக உள்ளது. நேரம் வரும்போது அனைத்து நீதிமன்றங்களிலும் ஹிந்தியை ஆட்சி மொழியாக மாற்ற வேண்டும் என்றும் நேரம் வரும்போது ஹிந்தியை வழக்கு மொழியாக அறிவிக்கலாம்' என்றும் பரிந்துரைத்தனர். இந்தப் பரிந்துரையை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டது.

அதன்படி தமிழை சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக அறிவிப்பதற்கான தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தால் தமிழ் உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாகிவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.