கீழடி ஸ்பெஷல்: வேளாண் சமூகம் மற்றும் வாழ்க்கை முறை

வருங்காலங்களில் மேற்கொள்ளப்படும் அகழாய்வின் போது சேகரிக்கப்படும் மகரந்தம் மற்றும் பைட்டோலித் போன்ற தாவரவியல் மாதிரிகளை முறையாக பகுப்பாய்வு செய்வதன் மூலம் கூடுதல் தெளிவு பெற முடியும் 
கீழடி ஸ்பெஷல்: வேளாண் சமூகம் மற்றும் வாழ்க்கை முறை
Published on
Updated on
2 min read

வேளாண் சமூகம் மற்றும் கால்நடை வளர்ப்பு (Trace of agrarian society and cattle rearing)



கீழடி அகழாய்வில் வெளிக்கொணரப்பட்ட விலங்குகளின் 70 எலும்புத் துண்டுகளின் மாதிரிகள், அறிவியல் அடிப்படையில் பகுப்பாய்வு செய்வதற்கு புனேவிலுள்ள முதுகலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான டெக்கான் கல்லூரிக்கு அனுப்பப்பட்டன.

இந்த எலும்புத் துண்டுகள் பகுப்பாய்வின் தன்மைக்கேற்ப வகைப்படுத்தப்பட்டதில் இவை திமிலுள்ள காளை, எருமை, வெள்ளாடு, கலைமான், காட்டுப்பன்றி மற்றும் மயில் ஆகிய உயிரினங்களுக்குரியவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவற்றில் திமிலுள்ள காளை, பசு, எருமை, வெள்ளாடு ஆகிய விலங்கினங்கள் 53 சதவீதம்இடம்பெற்றுள்ளன. எனவே, இவ்விலங்கினங்கள் வேளாண்மைக்கு உறுதுணை செய்யும் வகையில் கால்நடைகளாக வளர்க்கப்பட்டுள்ளன எனக் கருதலாம்.

கலைமான், வெள்ளாடு, காட்டுப்பன்றி போன்ற விலங்குகளின் சில எலும்பு மாதிரிகளில் வெட்டுத் தழும்புகள் காணப்படுகின்றன என்று ஆய்வில் குறிப்பிட்டுள்ளதால், இவ்விலங்கினங்களை அக்கால மனிதர்கள் உணவிற்காகப் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரிய வருகிறது.

இப்பகுப்பாய்வு முடிவுகள் மூலம் சங்காலச் சமூகம், வேளாண்மையை முதன்மைத் தொழிலாகக் கொண்டுடிருந்ததோடு, கால்நடை வளர்ப்பையும் மேற்கொண்டிருந்தது என்பது தெளிவாகிறது.

இனி வருங்காலங்களில் மேற்கொள்ளப்படும் அகழாய்வின் போது சேகரிக்கப்படும் மகரந்தம் மற்றும் பைட்டோலித் போன்ற தாவரவியல் மாதிரிகளை முறையாக பகுப்பாய்வு செய்வதன் மூலம் கூடுதல் தெளிவு பெற முடியும் 

வாழ்க்கை முறை (life Style of ancient people at Keeladi)


தமிழகத்தில் சங்க காலத்தை மீள் உருவாக்கம் செய்வதற்கு முதன்மைச் சான்றுகளான கல்வெட்டு, நாணயம், வெளிநாட்டவர் குறிப்புகள், இலக்கியம் மற்றும் தொல்பொருட்கள் ஆகியவற்றினை முன்னிறுத்தி ஆய்வு மேற்கொள்ளும் போதுதான் அச்சமூகத்தின் முழுமையான வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள இயலும்.

கீழடி அகழாய்வில் கிடைக்கப்பெற்றுள்ள தொல்பொருட்கள், அக்கால சமுதாயத்தினை பிரதிபலிக்கும் வகையில் உள்ளன. அச்சமூகம் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு ஆகியவற்றினை முதன்மைத் தொழில்களாக மேற்கொண்டிருந்தது. வேளாண்மைக்குத் துணை புரிகின்ற தொழிலாக இரும்பு பொருட்கள் தயாரித்தல், தச்சு வேலை ஆகியவையும் இருந்துள்ளன. மேலும், அன்றாட தேவைகளுக்குப் பயன்படும் பானை வனைதல், நாகரிக வாழ்க்கைக்கு தேவையான ஆடைநெய்யும் நெசவு தொழில் ஆகியவை முக்கிய இடம் பெற்றிருந்தன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com