சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

கால நிர்ணயம் வேண்டும்!

திருச்சூர் சகோதரர்கள் கிருஷ்ண மோகனும் ராம்குமாரும் கடந்த இரண்டு சீசன்களாகவே சங்கீத ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றிருக்கும் இரட்டையர்கள்.

News image
Updated On :29 டிசம்பர் 2013, 11:42 pm

திருச்சூர் சகோதரர்கள் கிருஷ்ண மோகனும் ராம்குமாரும் கடந்த இரண்டு சீசன்களாகவே சங்கீத ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றிருக்கும் இரட்டையர்கள். அப்பா மோகன் மிருதங்க வித்வான். இவர்களது கச்சேரிக்கு அவர்தான் பக்கவாத்தியம். இயற்கையாகவே இருக்கும் ஸ்ருதி சுத்தமும் அப்பாவிடமிருந்து கிடைத்த லய சுத்தமும் திருச்சூர் சகோதரர்களின் சங்கீதத்தை ஒரு படி மேலே தூக்கி வைக்கிறது.

பிரம்மகான சபையில் வியாழனன்று சாயங்காலம் 4 மணி நேர கச்சேரி. அதிலும், கட்டண கச்சேரி. ஆனாலும் பாருங்கள், கூட்டம் அலைமோதுகிறது. இதிலிருந்தே திருச்சூர் சகோதரர்களுக்கு இருக்கும் ரசிகர்கள் ஆதரவை நாம் தெரிந்து கொள்ளலாம். அன்றைய கச்சேரிக்கு டாக்டர் நர்மதா வயலின். அப்பா மோகன் மிருதங்கம் என்று முன்பே குறிப்பிட்டிருக்கிறோம். நெற்குணம் சங்கர் கஞ்சிரா.

நாட்டைகுறிஞ்சி வர்ணத்துடன் நிகழ்ச்சியை தொடங்கி அடுத்த உருப்படியாக கானமூர்த்தி ராகத்தில் கானமூர்த்தே சாகித்யம். ஸ்வரம் மட்டும்தான் பாடினார்கள். உச்சஸ்தாயில் கூட கொஞ்சமும் பிசிறு தட்டாத சாரீர வளம் இந்த சகோதரர்களின் பெரிய பலம்.

ஸ்ரீ ராகம் ஆலாபனையில் சகோதரர்கள் இறங்கியபோது சந்தோஷமாக நிமிர்ந்து உட்கார்ந்தேன். அடேயப்பா, எத்தனை நாளாயிற்று விஸ்தாரமாக ஸ்ரீ ராக ஆலாபனை கேட்டு. தியாகராஜ ஆராதனை பஞ்சரத்ன கிருதியின்போது ஸ்வரம் பாடி கேட்பதோடு சரி. ஆலாபனை அற்புதம். அதிலும் சகோதரர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு இசைக்கும் நேர்த்தி ஸ்ரீ ராக ஆலாபனைக்கு மேலும் கீர்த்தியை தந்தது. ஸ்வரப்ரஸ்தாரங்களிலும் நல்ல விறுவிறுப்பு.

ஆரபியில் ஒரு கிருதி பாடிவிட்டு, அடுத்த ராக ஆலாபனை. எடுத்துக் கொண்ட ராகம்தோடி. கார்த்திகேய காங்கேய என்கிற பாபநாசம் சிவனின் சாகித்யம். அதில் மால்மருகா என்கிற இடத்தில் நிரவல் ஸ்வரம்.தோடி ஆலாபனையும் நிரவலும் பல இடங்களில் ரசிகர்களின் சபாஷ், பேஷ் பலே பாராட்டுகளை பெற்றன. திஸ்ர நடையில் ஸ்வரம் போட்டது வித்தியாசமாகவும் பாராட்டும்படியும் இருந்தது.

ஜெயந்திஸ்ரீ ராகத்தில் மருகேலரா. கனமான தோடிக்குப் பிறகு கொஞ்சம் ரிலீப்பாக இருக்கட்டும் என்று நினைத்தார்கள் போலும். அடுத்தாற்போல விஸ்தாரமாக ராகேஸ்ரீ ராக ஆலாபனையில் இறங்கினார்கள். மூன்றாவதாக ஆலாபனை செய்வதால் இது நிச்சயமாக ராகம், தானம், பல்லவியாக இருக்கும் என்று நிர்ணயம் செய்துகொள்ள முடிந்தது. அண்ணனும் தம்பியும் போட்டி போட்டுக்கொண்டும் சுவாரஸ்யமாக தங்களுக்குள் ரசித்துக் கொண்டும் ஆலாபனையில் புகுந்து விளையாடியதில் நேரம் ஓடி போய்விட்டது.

தாளத்தில் கால நிர்ணயம் இருந்தால் மட்டும் போதாது. கச்சேரியை அமைத்துக் கொள்வதிலும் முறையான திட்டமிடலும் கால நிர்ணயமும் வேண்டும் என்பதை திருச்சூர் சகோதரர்கள் இன்னும் கற்றுக்கொள்ளாததால் ஏற்பட்டுவிட்ட குளறுபடி இது. மேடையில் உட்கார்ந்து பாடும்போது அதில் தங்களை மெய்மறந்து விடுகிறார்கள். அதனால் நேரம் போவது தெரியாமல் தங்கள் கற்பனையை சிறகடித்து பறக்க விடுகிறார்கள். ரசிகர்களும் ரசிக்கிறார்கள். கடைசியில் ராகம், தானம், பல்லவியை முறையாக முடிக்க தெரியாமல் நேரமாகிவிட்டது என்று அரைகுறையாக விட்டுவிடுகிறார்கள்.

என்ன தவம் செய்தனை பாடி கச்சேரியை நிறைவு செய்தபோது வெளியில் வந்துக் கொண்டிருந்த ரசிகர் ஒருவர் அடித்த காமென்ட்- இப்படித்தான் சார், போன கச்சேரியில் ஒரு மணி நேரம் அதிகம் எடுத்துக் கொண்டார்கள். போக போக சரியாகிவிடும். அனுபவம்தான் கலைஞர்களை பக்குவப்படுத்தும்.

அவரது கருத்தை நாமும் ஆமோதிக்கிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.