சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சவிதாவின் சபதம்!

சீசனில் இரண்டே இரண்டு கச்சேரி மட்டுமே பாடுவது என்று சவிதா நரசிம்மன் ஏதாவது சபதம் எடுத்துக்கொண்டிருக்கிறாரோ என்னவோ?

News image
Updated On :29 டிசம்பர் 2013, 11:45 pm

சீசனில் இரண்டே இரண்டு கச்சேரி மட்டுமே பாடுவது என்று சவிதா நரசிம்மன் ஏதாவது சபதம் எடுத்துக்கொண்டிருக்கிறாரோ என்னவோ? அதிலும் சில சீசன்களில் இரண்டாவது கச்சேரியை ரத்து செய்துவிடுகிறார் என்பதால் கிருஷ்ணகான சபாவில் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி நடந்த அவரது முதல் கச்சேரிக்கே நான் முதல் ஆளாக ஆஜர். சவிதா சங்கீதத்தைக் கேட்காமல் சங்கீத சீசன் மனநிறைவைத் தராது என்பது சவிதா ரசிகர்களுக்குத்தான் தெரியும்.

டி.பிருந்தா ஸ்கூல். தேன் சொட்டும் சாரீரம். ஸ்வரப்ரஸ்தாரங்களில் பூந்தோட்டத்தில் வண்டு பறப்பது போன்ற லாவகமும் விறுவிறுப்பும். இத்தனையும் ஒருசேர இருக்கும் சவிதா நரசிம்மனின் சங்கீதம் கேட்க கிடைக்காமல் போகும்போது எரிச்சலும் கோபமும் வருவது இயற்கைதானே? கேட்டுவிட்டாலோ, அந்த பரமானந்தத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

சாருலதா ராமானுஜம் வயலினில், கணபதி ராமன் மிருதங்கத்தில், ஹரிஹர சர்மா கஞ்சிரா. அன்று கிருஷ்ணகான சபாவின் காமகோடி அரங்கத்தில் நடந்த கச்சேரியில் சவிதாவும் சாருலதாவுமாக, தீபாவளி நாள் இரவில் பார்க்கும் வாண வேடிக்கை போல, சப்தஸ்வரங்களையும் கையாண்டு விளையாடிய சித்து விளையாட்டை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

நாட்டைக்குறிஞ்சி வர்ணத்துடன் தொடங்கி மந்தாரியில் நின்னு ஜெப்பகாரணாவும், ஆபேரியில் பஜரே ரே மானஸாவும் பாடிவிட்டு சாராங்காவில் நீ வாட நே கான பாடியபோது அப்படியே ரசிகர்கள் மது உண்ட வண்டுகளாய் மயங்கிக் கிடந்தனர். தொடர்ந்து சாவேரியில் பெரியசாமி தூரனின் முருகா... முருகா...

அன்றைய கச்சேரியின் அசத்தல் அயிட்டம் மத்யமாவதி. மிக சுலபமாக ரசிகர்களை கட்டிப்போடும் ராகம் இது. அப்படியே லயிக்க வைத்துவிடும். அதிலும் சவிதா போன்ற சாரீர செüக்கியமுள்ளவர்கள் பாடினால் கேட்கவா வேண்டும். பாலிஞ்சு காமாக்ஷிதான் சாகித்யம். எந்தவொரு கச்சேரியிலும் மத்யமாவதி போல பிரபலமான ராகத்தில் எல்லோருக்கும் பிடித்த சாகித்யத்தை கையாண்டு ஆலாபனை நிரவல் ஸ்வரம் பாடுவது நிகழ்ச்சியின் வெற்றிக்கு நிச்சய உத்தரவாதத்தை தரும் என்கிற ரகசியம் சவிதாவுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.

ஆரார் ஆசைப்படார் தாண்டவம் ஆடிடும் பாதம் என்கிற ரவிகிரணின் பல்லவியில் ராகமாலிகையாககேதாரம், காபி, வராளி மூன்றையும் இசைத்து ராகம், தானம், பல்லவி இல்லாத குறையை நிறைவு செய்தார். அதற்குள் நேரம் ஒன்பதரையை கடந்துவிட்டது. மங்களம் பாடி முடித்தபோது, அடுத்த ஓராண்டுக்கு இந்த சங்கீதத்தை கேட்க காத்திருக்க வேண்டுமே என்கிற ஆதங்கம் எழுந்ததை சொல்லாமல் இருக்க முடியவில்லை.

சாருபதி ரகுராமனின் வயலினுக்கு சுத்திப் போட வேண்டும். அவரது விரல் அசைவுக்கு சப்தஸ்வரங்களும் சேவகம் செய்கின்றன. அப்படியொரு சுகமான வாசிப்பு. நேர்த்தியான வாசிப்பு. சவிதா - சாருமதி காம்பினேஷன் அதிஅற்புதம்.

கணபதிராமன் மிருதங்கம் பற்றி ஒரு வார்த்தை. ரொம்ப சத்தம். இப்படிப் போட்டு அந்த மிருதங்கத்தை அடிக்க வேண்டாம். அதிலும் ஸ்த்ரி சங்கீதத்துக்கு சற்று அடக்கி வாசிக்க வேண்டும் என்கிற அடக்கத்தை அவரது மிருதங்கம் கற்றுக் கொண்டால் தேவலாம்.

இந்த சீசனில் சவிதாவின் மத்யமாவதிக்கு நிகர் வேறொன்று இருக்க முடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.