சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

வம்சாவளி அப்படி...

மகாராஜபுரம் பாரம்பரியத்தின் இந்த நாள் வாரிசு. தாத்தா சங்கீதப் புலி. கொள்ளு தாத்தா சங்கீத சாம்ராட். அந்த வம்சாவளியில் வந்த வாரிசுக்கு நல்ல குரல்வளமும் இருந்தால் கேட்கவா வேண்டும்?

News image
Updated On :29 டிசம்பர் 2013, 11:42 pm

மகாராஜபுரம் பாரம்பரியத்தின் இந்த நாள் வாரிசு. தாத்தா சங்கீதப் புலி. கொள்ளு தாத்தா சங்கீத சாம்ராட். அந்த வம்சாவளியில் வந்த வாரிசுக்கு நல்ல குரல்வளமும் இருந்தால் கேட்கவா வேண்டும்? நாரதகான சபா மினி ஹாலில் கடந்த வெள்ளிக்கிழமை மத்தியானக் கச்சேரி ஆயிற்றே கூட்டம் இருக்குமோ இருக்காதோ என்கிற சந்தேகத்துடன் மாடி ஏறி போனால் அரங்கம் நிரம்பி வழிந்தது. அன்றைக்கு மகாராஜபுரம் கணேஷ் விஸ்வநாதனுக்கு ஆர். ராகுல் வயலின், குரு ராகவேந்திரா மிருதங்கம், கிருஷ்ணா கடம்.

சம்பிரதாயம் மீறாமல் பைரவி அடதாள வர்ணத்துடன் கச்சேரியை ஆரம்பித்து ஹம்சத்வனியில் பாகி பாகி பால கணபதே பாடினார். அப்போதே கச்சேரி களைகட்டிவிட்டது.

நாட்டையில் ஜெய ஜெய ராமநாத என்கிற நாராயண தீர்த்தரின் தரங்கம் அடுத்தாற்போல் வந்தது. கல்பனாஸ்வரத்தில் விஷயம் தெரிந்த ரசிகர்களை வாயை பிளக்க வைத்துவிட்டார் கணேஷ். என்னவென்றா கேட்கிறீர்கள்? இரண்டு தள்ளி, மூன்று தள்ளி கல்பனாஸ்வரம் பாடி கேட்டிருக்கிறோம். ஒன்பது கார்வை தள்ளி கல்பனாஸ்வரம் பாடுவது என்பது அனுபவசாலி வித்வான்களையே அசர அடித்துவிடும். கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் கணேஷ் கையாண்டபோது இது நிச்சயமாக சாதக பலமல்ல, ஜன்மனால் கிடைத்த லய தேர்ச்சி என்று புரிந்தது.

யமுனா கல்யாணி ராகத்தில் நந்தகோபாலா என்கிற முத்துசாமி தீட்சிதரின் கிருதியை சமீப காலத்தில் பாடி கேட்டது அன்றுதான். ஆரபியில் அசாத்தியமான ஒரு ஆலாபனை. தொடர்ந்து நரசிம்ம மாமவ என்கிற இன்னொரு தீட்சிதர் கிருதி. அதில் கல்பனாஸ்வரம்.

என்ன இது தியாகய்யரை அன்றைய கச்சேரியில் புறக்கணிப்பது என்கிற முடிவுடன் கணேஷ் வந்திருக்கிறாரோ என்கிற நமது சந்தேகத்தை கல்யாணி ராக ஆலாபனைக்குப் பிறகு எந்துக்கோ நீ மனசு என்கிற தியாகராஜ கிருதியை இசைத்தபோது தீர்த்துவைத்தார். கல்யாணி ஆலாபனையில் அப்படியொரு சுகம். குரல் சர்வசாதாரணமாக பிருகாக்களை அள்ளி வீசியது. தியாகராஜ ஹ்ருதய சதனு தனி லினே என்கிற இடத்தில் நிரவல் கல்பனாஸ்வரம். இங்கேயும் கல்பனாஸ்வரத்தில் மிஸ்ர குறைப்பு செய்து தனது வித்வத்தை முத்திரை பதித்தார் கணேஷ்.

தொடர்ந்து விறுவிறுப்பாக நாலு துக்கடா பாடி கச்சேரியை முடித்தார். இதில் என்ன சிறப்பு என்றால் இரண்டு மணி நேரத்தில் ஏறத்தாழ 10 உருப்படிகள் பாடியிருக்கிறார். விஸ்தாரமாக ஆரபி, கல்யாணி இரண்டு ராகங்களையும் திருப்தியாக கையாண்டிருக்கிறார். கல்பனாஸ்வரத்தில் தனது மனோதர்மத்தையும் கணக்கு விவகாரங்களில் இருக்கும் தேர்ச்சியையும் நிரூபித்திருக்கிறார். இதெல்லாம் எப்படி முடிந்தது? வம்சாவழி அப்படி, அதனால் முடிந்தது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.