சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

வெற்றி ரகசியம்!

கடந்த செவ்வாய் அன்று மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸில் பாம்பே ஜெயஸ்ரீயின் கச்சேரி. எச்.என். பாஸ்கர் வயலின், பத்ரி சதீஷ்குமார் மிருதங்கம், அனிருத் ஆத்ரேயா கஞ்சிரா.

News image
Updated On :29 டிசம்பர் 2013, 11:45 pm

கடந்த செவ்வாய் அன்று மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸில் பாம்பே ஜெயஸ்ரீயின் கச்சேரி. எச்.என். பாஸ்கர் வயலின், பத்ரி சதீஷ்குமார் மிருதங்கம், அனிருத் ஆத்ரேயா கஞ்சிரா.

கச்சேரியை எப்படி அமைத்துக் கொண்டால் சிறப்பாக இருக்கும் என்பதில் பாம்பே ஜெயஸ்ரீயிடம் இளம் கலைஞர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அவரது கச்சேரியில் அரங்கம் நிறைந்திருப்பதற்கு அவருடைய சங்கீதம் ஐம்பது சதவிகிதம் காரணம். இருபத்தைந்து சதவிகிதம், எண்ணி 6 அல்லது 7 கச்சேரிகளை மட்டுமே சீசனில் ஒத்துக்கொள்வது காரணம். மீதி இருபத்தைந்து சதவிகிதம் அவர் தனது கச்சேரியை அமைத்துக்கொள்ளும் பாணியும் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் ராகங்கள், சாகித்யங்கள் போன்றவையும் காரணம்.

தொடக்கமே விறுவிறுப்பு. எல்லோருக்கும் பரவலாக தெரிந்த நாட்டை ராக மகாகணபதிம் சாகித்யம். அத்தனை பேரையும் அதிலேயே கட்டிப்போட்டு விடுகிறார். தொடர்ந்து சந்திரஜோதியில் பாகாயனய்ய. விஸ்தாரமாக ஸ்ரீரஞ்சனி ராக ஆலாபனை. சொக சொகா மிருதங்க தாளமுதான் சாகித்யம். நிரவல் இல்லை. மிருதங்க தாளமு என்ற இடத்தில் ஸ்வரம் மட்டும். அங்கே பத்ரி சதீஷ்குமார் புகுந்து விளையாடியிருக்கிறார். அதை குறிப்பிடாமல் இருக்க முடியாது.

அன்றைக்கு விஸ்தாரமாக இசைப்பதற்கு அவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட ராகம் சங்கராபரணம். சாகித்யம் ஸ்வர ராக சுதா. நிரவல் ஸ்வரம் எல்லாம் பாடி திருப்தியான சங்கராபரண விருந்து பரிமாறினார். மகாகணபதிம், பாகாயனய்ய, சொக சொகா மிருதங்க தாளமு, ஸ்வர ராக சுதா ஆகிய நான்கு சாகித்யங்களும் சாதாரண சங்கீத ரசிகர்கள் கூட தெரிந்து வைத்திருக்கும், முணுமுணுக்கும் சாகித்யங்கள். நாட்டை, ஸ்ரீரஞ்சனி, சங்கராபரணம் மூன்றும் ஜனரஞ்சகமும் விறுவிறுப்பும் உடைய ராகங்கள். இவற்றை தேர்ந்தெடுத்துக் கொள்வதன் மூலம் ஜெயஸ்ரீ சிரமப்படாமல் ரசிகர்களை தனது சங்கீத வலையில் வீழ்த்திவிடுகிறார்.

அன்றைக்கு ராகம், தானம், பல்லவிக்கு ஒரு ராகம் இசைத்தார். அது என்ன ராகம் என்று தெரியாமல் தலையை பிய்த்துக் கொண்டவர்கள்தான் அதிகம். ஆலாபனை முடிந்து அவரே புதிரை உடைத்தார். அந்த ராகத்தின் பெயர் பகாடி என்பதாம். நான் இதுவரை கேட்டதில்லை. அற்புதமாக இருந்தது என்பதை சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. மிஸ்ர ஜாதி திரிபுடை தாளத்தில் அமைந்த பல்லவி. ராகமாலிகையாக சிந்துபைரவி, பீலு, வலஜ் ஆகிய ராகங்களை கையாண்டார்.

எல்லோருக்கும் தெரிந்த ராகங்களை மட்டுமே ஜெயஸ்ரீ கையாள்கிறார் என்கிற விமர்சனத்தை முறியடிக்க வேண்டும் என்பதற்காகவே பகாடியை ராகம், தானம், பல்லவிக்கு தேர்ந்தெடுத்துக் கொண்டாரோ என்னவோ? என்னவானால் என்ன? அன்றைய ராகம், தானம், பல்லவி அட்டகாசமாக இருந்தது.

ஒரு பஜன், ஒரு தில்லானா என்று பாடி கச்சேரியை நிறைவு செய்தார் பாம்பே ஜெயஸ்ரீ. இரண்டாம் காலத்தில் இவரால் மட்டுமே இப்படி அநாயசமாக பாட முடியும். என்ன பிரமாதமான திட்டமிடல் என்று பாம்பே ஜெயஸ்ரீயை பார்த்து பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.