பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கச்சேரிக்குக் கச்சேரி புது மெருகு...

நமக்கும் காயத்ரி வெங்கட்ராகவனுக்கும் ஒரு ராசி இருக்கும் போலிருக்கிறது.

News image
Updated On :5 ஜனவரி 2013, 11:46 pm

தினமணி

நமக்கும் காயத்ரி வெங்கட்ராகவனுக்கும் ஒரு ராசி இருக்கும் போலிருக்கிறது. கடந்த சீசனில் அவருடைய கச்சேரி விமர்சனத்துடன் இசை உலா தொடங்கியது என்றால், இந்த சீசனில் இசை உலா அவருடைய நிகழ்ச்சி பற்றிய விமர்சனத்துடன் நிறைவு பெறுகிறது. இன்றைய முதல் வரிசை இசைவாணிகளில் தனக்கென்று தனி இடமும் ரசிகர்களும் பெற்றிருக்கும் கலைஞர் காயத்ரி வெங்கட்ராகவன் என்பதில் யாருக்கும் இரு வேறு கருத்து இருக்க வழியில்லை. ஏதோ நமது குரல் நன்றாக இருக்கிறது, சாஸ்திரிய சுத்தம் இருக்கிறது என்று பாடிவிட்டுப் போகாமல் கச்சேரிக்குக் கச்சேரி விறுவிறுப்பும் புது மெருகும் இருக்கும்படி அமைத்துக் கொள்வதுதான் காயத்ரி வெங்கட்ராகவனின் தனிச் சிறப்பு.

புது வருடம் பிறந்த அன்று மாலை 6.30 மணிக்கு தியாக பிரம்ம கான சபாவின் சார்பில் வாணி மஹாலில் காயத்ரி வெங்கட்ராகவனின் சங்கீதக் கச்சேரி. எம்.ஆர்.கோபிநாத் வயலின், பூங்குளம் சுப்பிரமணியம் மிருதங்கம், வெங்கட்ராமன் கஞ்சிரா.

"வாக்குண்டாம்' விருத்தம் பாடி, "நாட்டை' ராகத்தில் தீட்சிதர் இயற்றிய "பரமேஸ்வர ஜகதீஸ்வர' என்கிற ஸ்ரீபஞ்சநத úக்ஷத்ர கீர்த்தனையைப் பாடினார். கல்பனா ஸ்வரம் மட்டும் பாடிவிட்டு, மைசூர் வாசுதேவாச்சாரின் "ப்ரோச்சேவா ரெவருரா' (கமாஸ்),

பெரியசாமித் தூரன் இயற்றிய "முருகா முருகா' (சாவேரி), அன்றைய திருப்பாவையான "அம்பரமே' (கல்யாணி) என்று மூன்று உருப்படிகளை இசைத்தார்.

விஸ்தாரமான "பைரவி' ஆலாபனை. காயத்ரி வெங்கட்ராகவனின் குரல்வளத்துக்குக் கேட்கவா வேண்டும்? தேனில் குழைத்து வெளிவருகிறதோ என்கிற சந்தேகத்தை எழுப்பும் சாரீரம் அவருடையது. அதுமட்டுமல்ல, பிடிகளும் சங்கதிகளும் நொடிக்கு நொடி எப்படித்தான் வந்து விழுகின்றனவோவென வியப்பாக இருந்தது. அந்த நாளில் நாயனத்திலும் புல்லாங்குழலிலும் மட்டுமே வெளிவந்த பல சங்கதிகள் காயத்ரி வெங்கட்ராகவனின் சாரீரத்தில் வெளிவருவது "பைரவி'யின் சுகத்துக்கு மேலும் சுகம் சேர்த்தது. "உபசாரமுலனு'தான் சாகித்யம். அதில் "கபடநாடக சூத்ரதாரி' என்கிற இடத்தில் நிரவல் அமைத்துக் கொண்டு கல்பனா ஸ்வரமும் பாடினார். தனியாவர்த்தனத்துக்கு அவர் நேரம் ஒதுக்கியது இங்கேதான்.

"பைரவி' ஆலாபனையைத் தொடர்ந்து "சரஸ்வதி' ராகத்தில் ராகம் தானம் பல்லவி. கண்டதிரிபுடை தாளத்தில் திஸ்ர கதியில் அமைந்த "வாகீஸ்வரி வாணி சரஸ்வதி ரக்ஷமாம் அம்பா' என்கிற பல்லவி. அன்றைய "சரஸ்வதி' ராக ஆலாபனையில் ஆகட்டும், தானத்தில் ஆகட்டும், பல்லவியில் ஆகட்டும், ஸ்வரம் பாடியதில் ஆகட்டும், தானும் ஒருதேர்ந்த விதூஷி என்பதை அவர் நிரூபித்தார். அனுலோமம் பிரதிலோமம் கனகச்சிதமாக இருந்தது. தொடர்ந்து "பாவயாமி கோபால பாலம்' (யமன் கல்யாணி) பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

காயத்ரி வெங்கட்ராகவனின் சங்கீதத்தில் குறிப்பிடத்தக்க அம்சம் அவர் தனது கச்சேரியைத் திட்டமிட்டுக் கொள்ளும் விதம். இந்த நிகழ்ச்சியையே எடுத்துக் கொண்டால் மைசூர் வாசுதேவசார், தீட்சிதர், தியாகய்யர் என்று பல்வேறு வாக்கேயக்காரர்களின் பிரபல சாகித்யங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதுடன் நின்றுவிடாமல் அன்றைய திருப்பாவை, தமிழ் சாகித்யம் என்று எதிலும் குறை வைக்காமல் இருப்பதுதான் இவரது சங்கீதத்தின் நிறை.

இவருடைய நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இவரது இன்னொரு உத்தி புலப்படும். ஒரு நிகழ்ச்சியில் எடுத்துக் கொண்ட ராகமோ சாகித்யமோ அடுத்த சில நிகழ்ச்சிகளில் வராமல் நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சி வித்தியாசப்படுத்தி, தொடர்ந்து இவரது நிகழ்ச்சிகளைக் கேட்டாலும் அலுப்புத் தட்டாத வகையில் திட்டமிட்டுக் கொள்கிறார். நல்ல மனோதர்மம், நிறைய பாடாந்தரம், அதி அற்புதமான குரல்வளம், சாஸ்திரிய லட்சணங்களை சற்றும் மீறாத சங்கீதம். இத்தனையும் இருக்கும்போது காயத்ரி வெங்கட்ராகவனின் கச்சேரி களைகட்டுவதில் வியப்பென்ன இருக்கிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.