

கொல்லங்கோடு விஸ்வம் பாகவதர் என்றால் அந்த நாளில் மிகவும் பிரசித்தம். அவர் யார் என்றால், கே.வி.நாராயணஸ்வாமியின் கொள்ளுத் தாத்தா. அவர் திருவிதாங்கூர் சமஸ்தான வித்வானாக இருந்தார். தினந்தோறும் காலையில் திருவனந்தபுரம் பத்மநாப ஸ்வாமி கோவிலுக்குப் போய் தரிசனம் செய்வார். அவர் "அஷ்டபதி' பாடினால் அனைவரும் மெய்மறந்து போய்விடுவார்கள். அவருக்கு மட்டும் எப்போது வேண்டுமானாலும் கோவிலுக்குச் சென்றுவர அரண்மனை அனுமதித்திருந்தது.
தினந்தோறும் காலையில் மகாராஜா தரிசனத்துக்கு வரும் நேரத்தில் ஒருநாள் விறுவிறுவென்று விஸ்வம் பாகவதர் கோவிலுக்கு வந்தார். யாரும் அவரை ஏனைய பக்தர்களை மகாராஜா தரிசன நேரத்தில் தடுப்பதுபோல தடுக்கவில்லை. சந்நிதிக்கு வந்து அவர் மெய்மறந்து "அஷ்டபதி' பாடிக் கொண்டிருக்கும்போது மகாராஜா வந்துவிட்டார். அவரும் "அஷ்டபதி'யைக் கேட்டபடியே தரிசனம் செய்துவிட்டுக் காத்திருக்கிறார்.
பாடி முடித்து விஸ்வம் பாகவதர் திரும்பிப் பார்த்தால் மகாராஜா நின்று கொண்டிருக்கிறார். "மன்னிக்க வேண்டும்! உங்கள் தரிசனத்துக்குத் தடையாக இருந்துவிட்டேனோ?' என்று கேட்ட பாகவதரிடம் மகாராஜா சொன்னாராம்- "உங்களுக்கும் பகவானுக்கும் இடையில் நாங்கள் தடையாக இருந்துவிடலாகாது என்பதுதான் எங்கள் கவலையாக இருந்தது. இனிமேல் நான் தரிசனத்துக்கு வரும்போதெல்லாம் நீங்கள் "அஷ்டபதி' பாட வேண்டும்' என்று வேண்டிக் கொண்டாராம் மகாராஜா.
____________________________________
ஜி.என்.பி. சினிமாவில் நடித்தபோது கர்நாடக சங்கீத வித்வான்கள் மத்தியில் அதற்குப் பெரிய எதிர்ப்பு. அவருக்குப் பக்கவாத்தியம் வாசிக்க பெரிய வித்வான்கள் மறுத்தனர். அவரை சாஸ்திரிய சங்கீத வட்டாரத்தில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று ஒரு கோஷ்டி முனைந்து செயல்பட்டது. அந்தச் சூழ்நிலையில் தஞ்சாவூரில் ஒரு கச்சேரி. அதற்கு உள்ளூர் வயலின், மிருதங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. தஞ்சாவூர் வைத்தியநாத அய்யர் உள்ளிட்ட சில மூத்த வித்வான்கள் ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து ஜி.என்.பி. எப்படிப் பாடுகிறார் என்று தெரிந்துகொள்ள காத்துக் கொண்டிருக்கிறார்கள். "ஆந்தோலிகா' ஆலாபனை செய்தபோதே அந்த வித்வான்கள் அவரது வித்வத்தைப் பார்த்து வியந்தனர். "ராகசுதா' பாடிவிட்டு, "பைரவி'யில் ஒரு கீர்த்தனமும் பாடியபோது "இவருக்கு நிகர் இவர்'தான் என்று சர்ட்டிபிகேட் கொடுத்துவிட்டார்கள்! பிறகென்ன, எதிர்ப்பெல்லாம் தவிடு பொடியாகிவிட்டது!
____________________________________
திருவிடைமருதூர் வீருசாமிப் பிள்ளை சினிமா படங்களெல்லாம் பார்க்க மாட்டார். ஜி.என்.பி., எம்.எஸ்.சுப்புலட்சுமி ஜோடியாக நடித்த "சகுந்தலை' படம் உள்ளூர் டென்ட் கொட்டகையில் வெளியாகியது. அதில் ஜி.என்.பி. ஒரு "காம்போதி' பாடுவார். சரியாக அந்த நேரத்தில் உதவியாளர் ஒருவர் நாற்காலியைத் தூக்கிக் கொண்டு வந்து டென்ட் கொட்டகை வாசலில் வைப்பார். வீருசாமிப் பிள்ளை அந்த நாற்காலியில் அமர்ந்து ஜி.என்.பி.யின் "காம்போதி' ராக ஆலாபனையைக் கேட்டு ரசித்துவிட்டுப் போய்விடுவாராம். அந்தக் கொட்டகையில் "சகுந்தலை' படம் ஓடிய நாள்களில் எல்லாம் தொடர்ந்து இதுபோல் வீருசாமிப் பிள்ளை "காம்போதி'யைக் கேட்டு ரசித்தார் என்று சொல்வார்கள்.
____________________________________
கீரனூர் கோவிந்தப் பிள்ளை என்பவர் தொண்டை மண்டலத்தில் பிரபல நாகஸ்வர வித்வான். ராகத்தை ரக்தியாக வாசிப்பார். அப்போது செய்யாறு ஜமீன் என்று ஒரு ஜமீன்தார் இருந்தார். அந்த ஜமீனின் ஆஸ்தான வித்வான் கீரனூர் கோவிந்தப் பிள்ளை. ஜமீன்தாரிடம் புரோ நோட்டு எழுதிக் கொடுத்து ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார் அவர். அதில் நானூறு ரூபாய் அடைத்துவிட்டார். மீதி 600 ரூபாயை அடைக்க முடியவில்லை. அவரது கடன் பாக்கியை ஜமீனின் கணக்குப்பிள்ளை அடிக்கடி நினைவுபடுத்தி நச்சரித்துக் கொண்டிருந்தார். அந்த நச்சரிப்பு தாளாமல், கடனை அடைத்து புரோ நோட்டை திரும்பிப் பெறும் வரை செய்யாறுக்கு வருவதில்லை என்கிற வைராக்கியத்துடன் ஒரு நாள் ஜமீன்தாரிடம் சொல்லிக் கொள்ளாமல் ஊரைவிட்டுக் கிளம்பிவிட்டார். அங்கிருந்து போனவர் சூணாம்பேடு ஜமீன்தாரிடம் ஆஸ்தான வித்வானாக வேலைக்குச் சேர்ந்துவிட்டார்.
கோவிந்தப் பிள்ளையின் கஷ்ட காலத்துக்கு சூணாம்பேடு ஜமீன்தாரின் மகளை செய்யாறு ஜமீன்தாரின் மகனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நிச்சயதார்த்தத்துக்கு பெண் வீட்டுக்கு வந்த செய்யாறு ஜமீன்தாருக்கு அங்கே ஆஸ்தான வித்வானாக கீரனூர் கோவிந்தப் பிள்ளை இருப்பதைப் பார்த்து ஒரே அதிர்ச்சி. கோபமும் கூட. ஆனால், கோவிந்தப் பிள்ளை "கானடா' ராகம் ஆலாபனை செய்யத் தொடங்கியபோது செய்யாறு ஜமீன்தாரின் கோபம் பாலாறு போல வற்றிவிட்டது.
நிச்சயதார்த்தம் முடிந்தபிறகு செய்யாறு ஜமீன்தார் கீரனூர் கோவிந்தப் பிள்ளையை அழைத்து அவர் தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் ஊரை விட்டு வந்து இங்கே ஆஸ்தான வித்வானாக சேர்ந்தது ஏன் என்று விசாரித்தார். கடன் பாக்கியைக் கொடுத்து புரோ நோட்டைத் திரும்பிப் பெற முடியாவிட்டால் செய்யாறு திரும்புவதில்லை என்று கணக்குப் பிள்ளையிடம் சூளூரைத்து வெளியேறிய விவரத்தைச் சொன்னார். அதைக் கேட்ட ஜமீன்தார் ஒரு உதவியாளரை உடனடியாக செய்யாறுக்கு அனுப்பி கீரனூர் கோவிந்தப் பிள்ளை எழுதிக் கொடுத்த புரோ நோட்டை எடுத்து வரச் சொல்லி அதைக் கிழித்தெறிந்தார்.
"உம்மோட "கானடா'வுக்கு என்னோட ஜமீனையே எழுதித் தரலாமே! நீங்க போய் இந்த புரோ நோட்டுக்காக ஜமீனை விட்டுப் போகலாமா' என்று நா தழுதழுக்கக் கேட்டு அவரையும் தன்னுடன் திருப்பி அழைத்துச் சென்றுவிட்டாராம்.
____________________________________
முத்தண்ணா என்பவர் ஜகந்நாத பக்த சபா என்று ஒரு சபா நடத்திக் கொண்டிருந்தார். அதில் செம்பை வைத்தியநாத பாகவதரின் கச்சேரி. கச்சேரிக்கு வரும்போது தனக்கு மிருதங்கம் வாசிக்கப் போவதாக பதின்மூன்று வயது சிறுவனான பாலக்காடு மணி அய்யரை அழைத்து வந்திருந்தார். மகா வித்வானான செம்பைக்கு இந்தச் சிறுவன் எப்படி ஈடு கொடுக்க முடியும் என்று எல்லோருக்கும் சந்தேகம். எதற்கும் இருக்கட்டும் என்று சங்கர மேனன் என்றொரு லோக்கல் மிருதங்க வித்வானை ஏற்பாடு செய்து வைத்திருந்தனர். அந்தப் பையனால் ஈடு கொடுக்க முடியாமல் போனால் இவர் தொடர்ந்து வாசித்துக் கச்சேரியை நடத்துவது என்பது அவர்கள் எண்ணம்.
"விரிபோணி' வர்ணத்தில் தொடங்கி அடுத்த நான்கு மணி நேரம் நடந்த செம்பையின் கச்சேரி முழுவதும் கொஞ்சமும் அலுப்பில்லாமல் பாலக்காடு மணி என்கிற அந்தச் சிறுவன் வாசித்த வாசிப்பைப் பார்த்து அத்தனை பேரும் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். ஜலதரங்கம் ரமணய்ய செட்டியார் என்பவர் தான் கழுத்தில் போட்டுக் கொண்டிருந்த தங்க மெடலை சிறுவன் பாலக்காடு மணிக்கு அணிவித்து மேடையிலேயே பாராட்டினார். அன்று தொடங்கிய வாசிப்புதான் அடுத்த அரை நூற்றாண்டு காலம் "மணி அய்யர்தான் மிருதங்கம்' என்றாகிவிட்டது!
____________________________________
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.