தத்வலோகா அரங்கத்தில் கடந்த செவ்வாயன்று மாலை 5 மணிக்கு இசை உலக வாரிசுகளின் அற்புதமான கச்சேரி ஒன்று ரசிகர்களுக்கு விருந்து படைக்கப்பட்டது. இதற்காகவே தபஸ் அமைப்பினரை பாராட்டியாக வேண்டும். பட்டம்மாளின் பேத்தியும், பரூர் குடும்ப வாரிசும், தஞ்சை உபேந்திரனின் பேரனும் ஒரு கச்சேரியில் இணைந்தால் அந்த நிகழ்ச்சி நெகிழ்ச்சியாகத்தானே இருக்க முடியும்? அவர்கள் மூவரின் ரத்தத்திலும் மூச்சிலும் சங்கீதம் கலந்திருக்கிறது என்பதை அன்றைய கச்சேரி கேட்டவர்கள் சத்தியம் செய்வார்கள்.
என்.எஸ். ராமச்சந்திரன் சுநாத விநோதினி ராகத்தில் இயற்றிய கணநாயகா என்கிற வர்ணத்துடன் தனது நிகழ்ச்சியை தொடங்கினார் டி.கே. பட்டம்மாளின் பேத்தியும் பிரபல இசை ஆசிரியை லலிதா சிவக்குமாரின் மகளுமான லாவண்யா சுந்தர்ராமன். வயலினில் பரூர் எம்.எஸ். அனந்தராமனின் பேத்தியும், ராணிமேரி கல்லூரியின் இசைத் துறை தலைவரும் பண்ணாராய்ச்சி நிபுணருமான டாக்டர் பாகீரதியின் மகளுமான பரூர் ஹரிணி ஸ்ரீவத்ஸô. அன்று மிருதங்கம் வாசித்த பிரவீண்குமார் தஞ்சை உபேந்திரனின் பேரன்.
அடுத்தாற்போல, தேனுகா ராகத்தில் அமைந்த தெலியலேரு ராமா என்கிற தியாகய்யர் கிருதி. ஸ்வரம் மட்டும் இசைத்தார். மலையமாருதம் ஆலாபனைக்குப் பிறகு மனசா எட்டுலோ. தொடர்ந்தது கமலமனோகரி ராகத்தில் கஞ்சதளாய தாக்ஷி என்கிற தீட்சிதர் கிருதி. அந்த நாளில் எம்.எஸ். சுப்புலட்சுமி பிரபலப்படுத்திய சாகித்யம் இது. மத்யமவராளி என்கிற அதிகம் இசைக்கப்படாத ராகத்தில் நாராயண தீர்த்தரின் தரங்கம் ஒன்றை பாடிவிட்டு அன்றைய விஸ்தாரமான ராக ஆலாபனைக்கு தயாரானார் லாவண்யா சுந்தர்ராமன்.
கல்யாணி ஆலாபனை பற்றி எப்படி புகழ்வது என்றே தெரியவில்லை. அப்படியொரு சுகம். அதுமட்டுமல்ல, ஆலாபனையில் ராக பாவம் சொட்டியது. முதிர்ந்த கலைஞர்கள் எட்டிப்பிடிக்கும் பிடிகளையெல்லாம் லாவண்யாவால் சிரமமே இல்லாமல் வெளிக்கொணர முடிகிறது என்பது ஆச்சரியமாக இருந்தது. ராக ஆலாபனையின் போது எடுத்துக்கொண்ட ராகத்தின் லட்சணங்களை வெளிக்கொணர்ந்தால் மட்டும் போதாது. அது ஏதோ மனப்பாடம் செய்து கக்கியதுபோல இருக்கும். நல்ல ராக ஆலாபனைக்கு அழகு செüக்கியமும் இருப்பதுதான். லாவண்யாவின் ஆலாபனையில் செüக்கியம் இருந்தது.
வெங்கடரமணா என்கிற சாகித்யம். அதில் அலர்மேல் மங்கை மணாளா என்கிற இடத்தில் நிரவல் அமைத்துக்கொண்டு கல்பனா ஸ்வரம் பாடினார். கல்பனா ஸ்வரத்தில் லாவண்யாவும் ஹரிணியும் பிரவீண்குமாரும் ஒருவர் மாற்றி ஒருவர் கண்டக்குறைப்பு செய்ததும், அதைத் தொடர்ந்து மிஸ்ர குறைப்பு செய்ததும் பாராட்டும்படியாக இருந்தது. அபூர்வமாகத்தான் கண்டக்குறைப்பை தொடர்ந்து மிஸ்ர குறைப்பில் இறங்குவது வழக்கம். அந்த அளவுக்கு தேர்ச்சி இல்லாதவர்களால் கண்டக்குறைப்பையும் மிஸ்ர குறைப்பையும் ஒருசேர கையாள முடியாது. அதிலிருந்து ஒன்று தெரிந்தது. சங்கீத உலகத்தை வளைய வர மூன்று தேர்ந்த கலைஞர்கள் தயாராகிவிட்டார்கள் என்பதுதான் அது.
கந்தா நீ ஒரு மலைவாசி என்கிற அஹிர் பைரவ் ராக பாடலுடன் கச்சேரியை நிறைவு செய்தார் லாவண்யா.
""பட்டம்மாளின் பேத்தி, டி.கே.பி. பிரபலப்படுத்திய ஏதாவது ஒரு பாமலையாவது தனது கச்சேரிகளில் தவறாமல் பாட வேண்டாமோ'' என்று பட்டம்மாள் ரசிகர்கள் கேட்கக் கூடும் என லாவண்யாவுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.
ஒன்ஸ்மோர் கேட்கலாம் போல இருந்தது அந்தக் கச்சேரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மீண்டும்.. மீண்டுமா? சிஎஸ்கே போராடி தோல்வி!

புற்றுநோய் பாதித்த நிலையிலும் மமதாவுக்கு வாக்கு கேட்கும் நடிகை!

நூறு சாமி டீசர்!

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


