திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

தமிழில் ஜன கண மன...

இந்தியன் பைன் ஆர்ட்ஸில் கடந்த 27ஆம் தேதி விஜய் சிவாவின் கச்சேரி. அளவுக்கு அதிகமான கச்சேரிகளை ஒத்துக்கொண்டு தனது சாரீரத்தையும் சங்கீதத்தையும் பாழாக்கிக் கொள்ளாத கலைஞர்.

News image
Updated On :2 ஜனவரி 2014, 11:54 pm

இந்தியன் பைன் ஆர்ட்ஸில் கடந்த 27ஆம் தேதி விஜய் சிவாவின் கச்சேரி. அளவுக்கு அதிகமான கச்சேரிகளை ஒத்துக்கொண்டு தனது சாரீரத்தையும் சங்கீதத்தையும் பாழாக்கிக் கொள்ளாத கலைஞர். அதுமட்டுமல்ல, ஒரு கச்சேரிக்கும் அடுத்த கச்சேரிக்கும் இரண்டு நாள் இடைவெளி இருப்பதுபோல பார்த்துக் கொள்பவர். அதன்மூலம் விஜய் சிவாவின் கச்சேரி என்று சொன்னால் அது சோடை போகாது என்று ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு நம்பிக்கையை உருவாக்கி வைத்திருப்பவர்.

அன்றைய கச்சேரியில் அவருக்கு பலம் சேர்த்தவர்கள் ஆர்.கே. ஸ்ரீராம்குமார் (வயலின்), ஜெ. வைத்தியநாதன் (மிருதங்கம்), ஆலத்தூர் ராஜகணேஷ் (கஞ்சிரா).

இன்றைய மிருதங்க வித்வான்களில் செüக்கியமாக அந்தத் தோல் வாத்தியத்தைக் கையாள்பவர் ஜெ. வைத்தியநாதன் என்று துணிந்து சொல்லலாம். அவரது மிருதங்கம் எந்தவொரு கச்சேரிக்கும் பலம். எங்கே அடக்கி வாசிக்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்கும் கலைஞர் இவர்.

கெüளிபந்து ராகத்தில் தெரதீயகர ராதா நாலோனி (எனக்காகத் திரையை விலக்கக் கூடாதா?) என்கிற தியாகராஜ சுவாமிகளின் உருக்கமான சாகித்யத்துடன் தனது நிகழ்ச்சியை தொடங்கி அடுத்தாற்போல இசைத்தது முகாரி ராகத்தில் அமைந்த சங்கீத சாஸ்த்ர ஞானமு. இரண்டு உருக்கமான சாகித்யங்களுக்குப் பிறகு சற்று ஜனரஞ்சகமாக இருக்கட்டும் என்று ஹரிகாம்போதியில் சாகேத நகரநாத என்கிற மைசூர் சதாசிவராவின் சாகித்யம்.

விஸ்தாரமான பேகடா ஆலாபனை. அதற்கு அம்ப காமாக்ஷி என்கிற தீட்சிதரின் சாகித்யம். அன்றைய கச்சேரியின் சிறப்பம்சம் விஜய சிவா பாடிய தோடி. தோடியை சக்கையாக பிழிந்து எடுத்து பரிமாறினார். இனி தோடியில் தொட்டுக்காட்ட ஒரு இடம் கூட இல்லை என்று சொல்லும் அளவுக்கு அசாத்தியமான அற்புதமான பிடிகளை ஒன்றன்பின் ஒன்றாக விஜய் சிவா வெளிக்கொணர்ந்தபோது ஆஹாகாரம் போட்டு அரங்கம் ரசித்தது. கமலாம்பிகேதான் சாகித்யம். அதில் வியதாதி பூத கிரணே என்கிற இடத்தில் நிரவல். தொடர்ந்து ஸ்வரம். அரை ஆவர்த்தன ஸ்வரங்கள் சரசரவென்று வந்து விழுந்தன. அந்த வேகத்தையும் விறுவிறுப்பையும் சொல்லி மாளாது. தொடர்ந்து தனி.

கரகரப்ரியாவில் பராமுகம் ஏனய்யா பாடிவிட்டு தமிழில் ஜன கண மன பாடினார். என்ன ஆச்சரியப்படுகிறீர்கள்? நிஜம் தானய்யா! தேசீய கீதத்தை அப்படியே தமிழ் படுத்தி அதே மெட்டில் பாடினார் விஜய் சிவா. ரசிகர்கள் எழுந்து நின்று கரகோஷித்திருக்கலாம். இதேபோல இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளிலும் தேசீய கீதத்தை மொழி பெயர்த்து விஜய் சிவாவை பாட வைத்தால் நன்றாக இருக்கும்.

என்ன இருந்தாலும் டி.கே. ஜெயராமனின் சீஷ்யரான விஜய் சிவா பாரதியார் பாட்டை பாடாமல் இருப்பாரா? பாருக்குள்ளே நல்ல நாடு பாடி கச்சேரியை நிறைவு செய்தார்.

உன்னிகிருஷ்ணன், டி.எம். கிருஷ்ணா, சஞ்சய் சுப்பிரமணியம், விஜய் சிவா ஆகிய நால்வரும் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் இசை மேடையில் பவனி வர தொடங்கியவர்கள். அவர்களுக்கு இருக்கும் கிளாமர் இவருக்கு இல்லாமல் போனதன் காரணம் என்ன? அவர்கள் கலைஞர்கள். அப்படியானால் விஜய் சிவா? கலைஞர்களின் கலைஞர்! எம்.டி. ராமநாதன், ராம்நாட் கிருஷ்ணன் வரிசையில் இன்று விஜய் சிவா. இது எனது கணிப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.