சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

ஆண்டுதோறும் இசை விழா!

ஆண்டுதோறும் அமெரிக்காவில் உள்ள க்ளீவ்லாண்டில் தியாகராஜ ஆராதனை நடத்துகிறார் வீரவநல்லூர் வி. சுந்தரம். அமெரிக்காவில் உள்ள ஒரு பெரிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருப்பவர்.

Updated On :3 ஜனவரி 2014, 12:02 am

ஆண்டுதோறும் அமெரிக்காவில் உள்ள க்ளீவ்லாண்டில் தியாகராஜ ஆராதனை நடத்துகிறார் வீரவநல்லூர் வி. சுந்தரம். அமெரிக்காவில் உள்ள ஒரு பெரிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருப்பவர். மகாரசிகர். சங்கீத புரவலர். பல இளம்கலைஞர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்க வழிகோலுபவர். கடந்த 36 ஆண்டுகளாக ஆண்டுதோறும் இவர் க்ளீவ்லாண்டில் தியாகராஜ ஆராதனை நடத்தும்போது தென்னிந்தியாவில் இருக்கும் அத்தனை முன்னணி இசைக் கலைஞர்களையும் அங்கேதான் பார்க்க முடியும்.

கடந்த ஆண்டு க்ளீவ்லாண்ட் ஆராதனையின்போது அங்கே ராமாயணம் நாட்டிய நாடகம் ஒன்றை அரங்கேற்றினார்கள். இதற்காக நெய்வேலி சந்தானகோபாலன், ரவிகிரண், சுகுணா புருஷோத்தமன், ருக்மிணி ரமணி ஆகியோர் தமிழில் அந்த நாட்டிய நாடகத்தின் ஒவ்வொரு பகுதியை தகுந்த சாகித்யங்களை இயற்றி மெட்டமைத்து அரங்கேற்ற உதவினர். இங்கிருந்து கச்சேரி செய்ய சென்றிருந்த காயத்ரி வெங்கட்ராகவன், கே. காயத்ரி, ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன் போன்றவர்கள் அந்த நாட்டிய நாடகத்தின் பாடல்களை இசைத்தனர். இப்படியொரு நிகழ்ச்சியை ஏன் க்ளீவ்லாண்ட் சுந்தரம் இந்தியாவில் என்னைப் போன்ற ரசிகர்களுக்கு விருந்து படைக்க கூடாது என்கிற ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது. அது போகட்டும்.

இந்த ஆண்டு க்ளீவ்லாண்ட் சுந்தரம் தியாகராஜ ஆராதனையின்போது ராமாயணத்தைப் போலவே தமிழில் மகாபாரதத்தையும் நாட்டிய நாடகமாக அரங்கேற்ற திட்டமிட்டிருக்கிறாராம். அதில் ஒரு பகுதிக்கு சாகித்யம் எழுதி மெட்டமைக்கும் பணியில் பிரபல சங்கீத ஆச்சாரியாவான சுகுணா புருஷோத்தமன் ஈடுபட்டிருக்கிறார்.

அவருக்கு உடல்நிலை சரியில்லை. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். மருத்துவமனையில் இருக்கும் அந்த இசைஞானி இந்த நிலையிலும் சற்றும் கவலைப்படாமல் முழுமூச்சாக கிருதிகளை இயற்றுவதிலும் அதற்கு மெட்டமைப்பதிலும் முனைப்புடன் இருக்கிறார் என்பதை அவரது பிரதம சிஷ்யை கே. காயத்ரி நமது நிருபர் சந்திரிகா ராஜராமிடம் சொன்னதாக கேட்டபோது அழுகையே வந்துவிட்டது.

சங்கீதத்தில் என்னவொரு ஈர்ப்பு. எப்படிப்பட்ட அர்ப்பணிப்பு. இறைவா, சுகுணா புருஷோத்தமனுக்கு ஆரோக்கியத்தை கொடு. தீர்க்க ஆயுஸை கொடு. நாதோபாசனை செய்யும் அந்த அற்புதக் கலைஞரின் சேவை இசை உலகுக்கு தேவை. இசைக்கு அவர் ஆற்ற வேண்டிய தொண்டு இன்னும் ஏராளம் ஏராளம் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.