வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பகுதி 23 – செத்திலாப்பத்து – 3

திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவனே, நாட்டுத் தேவர் எனப்படும் நல்ல மக்களாலும் பெறஇயலாத பெரும்பொருளே, நாதனே, பல்வேறு திருப்பணிகளைச் செய்யும் தேவர்கள்/ மும்மூர்த்திகளின் தலைவனே,

News image
Updated On :28 நவம்பர் 2015, 8:59 am

என். சொக்கன்

செத்துஇலாப் பத்து. அதாவது, இறைவனை எண்ணி மனம் மகிழ்ந்து, இன்னும் உன்னிடம் சேராமல் நான் இந்த உடலோடு இருக்கிறேனே என்று வருந்திப் பாடிய பாடல்கள்.

இந்தப் பகுதியில் பத்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவை திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை.

146

பாடலின்பம்

ஆட்டுத் தேவர்தம் விதிஒழித்து அன்பால்

ஐயனே என்றுஉன் அருள்வழி இருப்பேன்,

நாட்டுத் தேவரும் நாடுஅரும் பொருளே,

நாதனே, உனைப் பிரிவுஉறா அருளைக்

காட்டி, தேவ, நின் கழல்இணை காட்டிக்

காய மாயத்தைக் கழித்து அருள்செய்யாய்,

சேட்டைத் தேவர்தம் தேவர்பிரானே,

திருப்பெருந்துறை மேவிய சிவனே.

*

அறுக்கிலேன் உடல் துணிபட, தீப்புக்(கு)

ஆர்கிலேன், திருஅருள் வகைஅறியேன்,

பொறுக்கிலேன், உடல் போக்குஇடம் காணேன்,

போற்றி போற்றி, என் போர்விடைப்பாகா,

இறக்கிலேன், உனைப் பிரிந்து இனிதுஇருக்க

என்செய்கேன்? இதுசெய்க என்றுஅருளாய்

சிறைக்கணே புனல்நிலவிய வயல்சூழ்

திருப்பெருந்துறை மேவிய சிவனே.

பொருளின்பம்:

திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவனே, நாட்டுத் தேவர் எனப்படும் நல்ல மக்களாலும் பெறஇயலாத பெரும்பொருளே, நாதனே, பல்வேறு திருப்பணிகளைச் செய்யும் தேவர்கள்/ மும்மூர்த்திகளின் தலைவனே,

விண்ணுலகத் தேவர்கள் என்னை ஆட்டுவிக்கிறார்கள், நான் அவர்களை விரும்பாமல், ‘ஐயனே’ என்று உன்மீது அன்புசெலுத்தி உன்னுடைய அருள்வழியில் நடக்கிறேன்,

தேவா, உன்னைப் பிரியாமல் என்றும் உன்னோடு இருக்கும்படியான அருளை எனக்குத் தருவாய், சிவபெருமானே, உன்னுடைய திருவடிகளைக் காட்டி, என்னுடைய உடல் என்கிற இந்த மாயத்தைக் கழித்து அருள்செய்.

*

வயல் வரப்புகளிடையே நீர் தேங்கிநிற்கும் திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவனே,

இந்த உடலாகிய பாரத்தை என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை, ஆனால் அதேசமயம், உன்னை வாழ்த்தியபடி நான் என்னுடைய உடலைத் துண்டித்துக்கொள்ளவில்லை, தீயில் பாயவில்லை, வேறு எந்தவகையில் உன் திருவருளைப் பெறுவது என்று எனக்குத் தெரியவில்லை,

போர்செய்யும் காளைவாகனத்தில் எழுந்தருளுபவனே, சிவபெருமானே, உன்னைப் ‘போற்றி, போற்றி’ என்று பாடியபடி நான் சாகவில்லை, உன்னைப் பிரிந்து வாழ்வதால் என் வாழ்வில் இன்பமும் இல்லை, நான் என்ன செய்வேன்? இதைதான் செய்யவேண்டும் என்று எனக்கு வழிகாட்டி அருள்செய்.

சொல்லின்பம்:

ஆட்டுத் தேவர்: ஆட்டுவிக்கும் தேவர்

நாட்டுத் தேவர்: நாட்டில் வாழும் நல்லவர்கள்

நாட: பெற

நாதனே: தலைவனே

கழல்: ஆண்கள் காலில் அணியும் வீர ஆபரணம்/ இங்கே சிவபெருமானின் திருவடிகளைக் குறிக்கிறது

காயமாயம்: உடல் என்கிற மாயம்

சேட்டைத் தேவர்: பல்வேறு திருப்பணிகளைச் செய்யும் தேவர்கள்/ மும்மூர்த்திகள்

தேவர்பிரானே: தேவர்களின் தலைவனே

மேவிய: எழுந்தருளிய

அறுக்கிலேன்: அறுக்கவில்லை

துணிபட: துண்டிக்கப்பட

புக்கு: நுழைந்து

ஆர்கிலேன்: தங்கவில்லை

போர்விடைப்பாகா: போர் செய்யும் காளை வாகனத்தில் எழுந்தருளியிருப்பவனே

என்செய்கேன்: என்ன செய்வேன்

சிறை: அடைபட்ட இடம்/ வரப்பு

புனல்: நீர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.