பகுதி 23 – செத்திலாப்பத்து – 5
கெண்டைமீன்களும் குவளைமலர்களும் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவனே,


செத்துஇலாப் பத்து. அதாவது, இறைவனை எண்ணி மனம் மகிழ்ந்து, இன்னும் உன்னிடம் சேராமல் நான் இந்த உடலோடு இருக்கிறேனே என்று வருந்திப் பாடிய பாடல்கள்.
இந்தப் பகுதியில் பத்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவை திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை.
ஞாலம், இந்திரன், நான்முகன், வானவர்
நிற்க மற்றுஎனை நயந்துஇனிதுஆண்டாய்,
காலன் ஆர்உயிர்கொண்ட பூங்கழலாய்,
கங்கையாய், அங்கி தங்கிய கையாய்,
மாலும் ஓலம்இட்டுஅலறும் அம்மலர்க்கே
மரக்கணேனையும் வந்திடப் பணியாய்,
சேலும் நீலமும் நிலவிய வயல்சூழ்
திருப்பெருந்துறை மேவிய சிவனே.
*
அளித்துவந்து எனக்கு ஆவ என்றுஅருளி
அச்சம் தீர்த்த நின் அருட்பெரும்கடலுள்
திளைத்தும் தேக்கியும் பருகியும் உருகேன்,
திருப்பெருந்துறை மேவிய சிவனே,
வளைக்கையானொடு மலரவன் அறியா
வானமாமலை மாதொருபாகா,
களிப்பெலாம் மிகக் கலங்கிடுகின்றேன்,
கயிலை மாமலை மேவிய கடலே.
பொருளின்பம்
கெண்டைமீன்களும் குவளைமலர்களும் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவனே,
எமனின் அரிய உயிரைக் கவர்ந்த திருவடிகளைக் கொண்டவனே, தலையில் கங்கையைக் கொண்டவனே, கையில் நெருப்பை ஏந்தியவனே,
இந்தப் பூமியில் வாழ்கிறவர்கள், இந்திரன், பிரம்மன், தேவர்கள் என எல்லாரும் உன்னை எண்ணித் தவமிருக்கிறார்கள், ஆனால் நீயோ, என்மீது அன்புசெலுத்தி என்னை ஆண்டாய்,
உன்னுடைய திருவடிகளைக் காண்பதற்குத் திருமாலும் ஓலமிட்டு அலறித் தவிக்கிறார், அத்தகைய திருவடியில், மரக்கண் கொண்ட, நேசமில்லாதவனாகிய நான் வந்து சேர இயலுமா? சிவபெருமானே, அருள்செய்.
*
திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே, சங்கை ஏந்திய திருமாலும் பிரம்மனும் அறிய இயலாதபடி பெரிய மலையுருவாக நின்றவனே, உமையம்மையைத் தன் உடலின் ஒரு பகுதியாகக் கொண்டவனே, திருக்கயிலைமலையில் எழுந்தருளியிருக்கும் அருள்கடலே,
நீ என்மீது கருணை காட்டினாய், அருள்செய்தாய், அச்சம் தீர்த்தாய், நான் உன்னுடைய அருளாகிய பெருங்கடலில் திளைத்தேன், மகிழ்ந்தேன், அதைப் பருகினேன்,
ஆனாலும், அந்தக் கருணையை எண்ணி நான் உருகவில்லை, உன்னை மறந்துவிட்டேன், உலக இன்பங்களை நினைத்துக் களிப்போடு இருந்துவிட்டேன், அதை எண்ணி இப்போது கலங்குகிறேன், சிவபெருமானே, அருள்செய்.
சொல்லின்பம்
ஞாலம்: உலகம்
நயந்து: விரும்பி
ஆர்உயிர்: அரிய உயிர்
பூங்கழலாய்: கழல் என்ற வீர ஆபரணங்களை அணிந்தவன்/ இங்கே சிவபெருமானின் திருவடிகளைக் குறிக்கிறது
அங்கி: நெருப்பு
மரக்கணேன்: மரக்கண் கொண்டவன்
சேல்: கெண்டைமீன்
நீலம்: குவளைமலர்
மேவிய: எழுந்தருளியிருக்கும்
அளித்து: கருணைகாட்டி
தேக்கியும்: நிறைய இன்பம் பெற்றும்
வளைக்கையான்: சங்கைக் கையில் ஏந்திய திருமால்
மலரவன்: பிரம்மன்
வான: உயர்ந்த
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...