பதிகம் என்பது பத்து பாடல்களின் தொகுப்பு. இந்தப் பத்து பாடல்களின் திருப்பெருந்துறை சிவனின் பெருமை குறிப்பிடப்படுவதால், இங்கே ‘கோயில்’ என்பது திருப்பெருந்துறை என்று கொள்ள வேண்டும்.
இவை அந்தாதி வகையில் அமைந்த பாடல்கள், அதாவது, முதல் பாடலின் நிறைவுச் சொல், அடுத்த பாடலின் முதல் சொல்லாக அமையும்.
குறைவுஇலா நிறைவே, கோதுஇலா அமுதே,
ஈறுஇலாக் கொழும்சுடர்க்குன்றே,
மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்துஎன்
மனத்திடை மன்னிய மன்னே,
சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப் பாயும்
திருப்பெருந்துறைஉறை சிவனே,
இறைவனே, நீஎன் உடல் இடம்கொண்டாய்,
இனிஉன்னை என்இரக்கேனே?
*
இரந்துஇரந்து உருக என் மனத்துஉள்ளே
எழுகின்ற சோதியே, இமையோர்
சிரம்தனில் பொலியும் கமலச்சேவடியாய்,
திருப்பெருந்துறைஉறை சிவனே,
நிரந்த ஆகாயம்,நீர்,நிலம்,தீ,கால்
ஆயவை அல்லையாய் ஆங்கே
கரந்ததோர் உருவே களித்தனன், உன்னைக்
கண்ணுறக் கண்டுகொண்டு இன்றே.
பொருளின்பம்
குறைவில்லாத நிறைவே, குற்றமில்லாத அமுதே, முடிவில்லாத பெரிய ஒளிக்குன்றே,
வேதமாகவும் வேதத்தின் பொருளாகவும் வந்து என் மனத்தில் தங்கிய தலைவா, அணையைக் கடந்து பாயும் நீர்போலப் பக்தர்களின் சிந்தனையில் பாய்கின்றவனே,
திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவனே, இறைவா,
சிவபெருமானே, நீ என் உடலையே தங்குமிடமாகக் கொண்டாய், இனி உன்னிடம் நான் வேறு என்ன கேட்பேன்?
*
உன்னை எண்ணி எண்ணி உருக, என் மனத்தில் எழுகின்ற சோதியே,
தேவர்களின் தலையில் பொலிகின்ற தாமரைத் திருவடிகளைக் கொண்டவனே, திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவனே,
பரந்த ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று ஆகிய ஐம்பூதங்களாகவும், அவை அல்லாத மற்றவையாகவும், உருவமில்லாத அருவமாகவும் தோன்றுகிறவனே, சிவபெருமானே, இன்று உன்னைக் கண்ணால் கண்டு களிக்கின்றேன்.
சொல்லின்பம்
கோது: குற்றம்
ஈறு: முடிவு
கொழுஞ்சுடர்: பெரிய சுடர்
மறை: வேதம்
மன்னிய: தங்கிய
மன்: தலைவன்
சிறை: அணை
இடம்கொண்டாய்: இடமாகக் கொண்டாய்
என்இரக்கேன்: என்ன கேட்பேன்?
சிரம்: தலை
கமலச்சேவடியாய்: தாமரைத் திருவடிகளைக் கொண்டவனே
நிரந்த: பரந்த
கரந்த: மறைந்த
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.