ஆசைதரும் கோடி அதிசயங்கள் கண்டதிலே
ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ
என்றான் பாரதி, குயில் பாட்டில். குயில் பாட்டு வெண்டளையில் அமைந்திருந்தாலும், இதில் ஒருவகையான ஓசை ஒழுங்கு அமைந்திருக்கிறது.
ஒவ்வொரு வகைப் பாடலுக்கும் ஒவ்வொரு வகை ஓசை என்று வகுத்தார்கள். வெண்பாவில் பயில்வது செப்பலோசையும், ஆசிரியப் பாவில் அகவலோசையும், கலிப்பாவில் துள்ளலோசையும், வஞ்சிப்பாவில் தூங்கலோசையும் என்றெல்லாம் வழக்கங்கள் உண்டு. மறுபடியும், இவை ஒவ்வொன்றுக்குள்ளும் உட்பிரிவுகள் உண்டு. கொஞ்சம் பயமுறுத்துவதுபோல இருந்தாலும், உண்மையில் ஓசையை மட்டும் கவனித்து இயங்கினால் போதும். இவற்றில் ஏதாவது ஒரு சட்டகத்துக்குள் தானாகப் பொருந்தும் என்பதுதான் சூட்சுமம். இந்த வித்தை கைவந்துவிட்டால், எதை வேண்டுமானாலும் ஊதித் தள்ளிவிடலாம்.
ஆனால், ஓசையின் ஒழுங்குக்குள் உட்காருவது என்பது சற்றே கவனித்து சரிசெய்துகொள்ள வேண்டிய வித்தை. இந்த வித்தை கைவரப் பெறுவதற்காகத்தான் இத்தனை கணக்குகள், இத்தனை வகைப்பாடுகள், இத்தனை mappings.
தாளலயத்தை ஒழுங்காகக் கையாளத் தெரிந்துவிட்டால், நேரசையில் தொடங்கினால் அடிக்கு (ஒற்றொழித்து) பதினாறு எழுத்து, நிரையசையில் தொடங்கினால் அடிக்குப் பதினேழு எழுத்து என்று பயமுறுத்தும் கட்டளைக் கலித்துறையைக்கூட எழுத்தெண்ணாமல் பாட முடியும். அனுபவத்தில் சொல்கிறேன். வெறும் உபசார வழக்கில்லை.
மற்ற எந்த மொழிகளைக் காட்டிலும், தமிழில் எழுத்தெண்ணிக்கை தவறாமல் பாடுவது சுலபமான ஒன்று. தான தனந்தன தான தனத்தன தானன என்ற தாளக்கட்டுக்குள் எழுதினால், அடிக்கு எவ்வளவு எழுத்து வரும்? அந்தத் தாள அமைப்பிலேயே எண்ணிப் பாருங்கள். பதினைந்து எழுத்துகள். அவ்வளவேதான்! இந்தத் தாளம் பிசிறாமல் எழுதிப் பாருங்கள். அடிக்குப் பதினைந்து பதினைந்து எழுத்துகள் வரும். உத்தரவாதம்.
நம்முடைய மொழி அமைப்பு அப்படி. எல்லா சொற்களையும் (அல்லது சீர்களையும்) இரண்டே வகை அசைகளாகப் பிரித்துவிடலாம். இந்த அசை என்பது ஆங்கிலத்தில் syllable என்கிறார்களே, அதற்கு இணையானது. நேர் என்பது ஒன்று. நிரை என்பது மற்றொன்று. நேர் என்றால், தனிக்குறில் (ஒற்றுடன்/ஒற்றில்லாமல்), தனி நெடில் (ஒற்றுடன்/ஒற்றில்லாமல்); நிரையென்றால் குறில்-குறில், குறில்-நெடில் (ஒற்றுடன்/ஒற்றில்லாமல்). அப்படியானால், நேரசையில் ஒரே ஒரு எழுத்துதான் கணக்குக்கு வரும். நிரை என்றால் இரண்டே எழுத்துகள்தாம் கணக்கில் வரும். அப்ப, நாம மேல அமைச்சிருக்கோமே தாளக்கட்டு (சினிமா பாணியில் சொல்வதானால், தத்தகாரம், சந்தம் சொல்றது — எல்லாம் ஒண்ணுதான்), அதுக்கு நேர்நிரை போட்டா, நேர்நேர் நிரைநிரை நேர்நேர் நிரைநிரை நேர்நிரை. இப்ப இதுலயும் எழுத்தெண்ணிப் பாருங்கள். பதினஞ்சுதான் வரும். இந்த நேர் நிரையின் வேறுவேறு permutation combinationதான் தத்தகாரம், சந்தம், தாளக்கட்டு எட்செட்ரா. தமிழில் அமைவதுபோல் எழுத்தமைப்பு — ஸ்பெல்லிங் — மற்ற மொழிகளில் அமைவதில்லை என்பதால், தமிழில் ஓசையைப் பின்பற்றுவது எளிதாகிறது.
ஆசிரிய விருத்தம், சந்த விருத்தம் என்பதில் ஓசை ஒத்து வரும். இதைத் தாளத்தால் அளவொத்து வருவது என்பார்கள். அறுசீர் விருத்தத்தில், ஒரு வகைக்கு வீரபத்திர முதலியார் கொடுத்திருந்த சூத்திரத்தைப் பார்த்தோம்.
இருமா காய்ச்சீ ரரையடிக்கா
யிவையே மற்றை யரையடிக்கும்
வருமா றுணர்க வாரணியுங்
கொங்கை பொலியு மடக்கொடியே!
இதைச் சுருக்கமாக, மா மா காய், மா மா காய் என்பார்கள். எந்த மாமாவுடனும் காய்விட வேண்டாம்! தேமா தேமா கூவிளங்காய், தேமா புளிமா கருவிளங்காய் என்று இஷ்டப்படி மாற்றிப் போட்டுக்கொள்ளலாம். தத்தகாரத்தில் சொன்னால்,
தானா தனனா தானனனா, தன்னா னானா தானேனா என்று விதவிதமாக மாற்றிப் போட்டுக்கொள்ளலாம். எப்படிப் போட்டாலும், மா மா காய். சின்ன எச்சரிக்கை. இதை இன்னமும் முழுமையாக விளக்கவில்லை.
திருப்புகழின் சிக்கலான அமைப்புக்குள் இப்போதுதான் காலடி எடுத்து வைத்திருக்கிறோம். குருநாதருடைய வரலாற்றை, ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் புராணம் என்ற பெயரில் குகஸ்ரீ திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் இயற்றியிருக்கிறார்.விருத்த தொடர்நிலைச் செய்யுளால் அமைந்திருக்கும் இந்தப் புராணத்தை, அவருடைய 18-19 வயதில் செய்திருக்கிறார். குகஸ்ரீ வாரியார் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. எல்லா சரவண பவன் உணவு விடுதிகளிலும் கிடைக்கும். புத்தகக் கடைகளிலும் கட்டாயம் கிடைக்கும்!
இந்தப் புராணப்படி, அருணகிரிநாதருக்கு முறையான கல்வி இருந்திருக்குமா என்பது ஐயமே. இவர்தான் தமிழையும் வடமொழியையும் அநாயாசமாகக் கலந்து, இத்தனை சிக்கலான அமைப்புகளில் பல பாடல்களை இயற்றியிருக்கிறார். இதை இறையருள் என்னாமல் வேறு எப்படிச் சொல்வது.
இப்போது நாம் சொல்லியிருப்பதில் தொடர்நிலைச் செய்யுள் என்பதைச் சற்று விளக்க வேண்டும். இது விருத்தத்திலும் அமையும்; வெண்பாவிலும் அமையும். என்ன என்பதை அடுத்ததாகப் பார்ப்போம்.
இப்போது இன்றைய பாடல். இதுவும் விநாயகர் துதிதான்.
வண்ணக் குழிப்பு
தந்ததனத் தானதனத் தனதான
தந்ததனத் தானதனத் தனதான
உம்பர்தருத் தேநுமணிக் கசிவாகி
ஒண்கடலிற் றேனமுதத் துணர்வூறி
இன்பரசத் தேபருகிப் பலகாலும்
என்றனுயிர்க் காதரவுற் றருள்வாயே
தம்பிதனக் காகவனத் தணைவோனே
தந்தைவலத் தாலருள்கைக் கனியோனே
அன்பர்தமக் கானநிலைப் பொருளோனே
ஐந்துகரத் தானைமுகப் பெருமாளே
</p><p align="JUSTIFY">திருப்புகழில் மிக எளிதான சந்த அமைப்பும், பொருளமைப்பும் கொண்ட பாடல். பொருளை நாளைக்குக் காண்போம்.</p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாங்கள் ஒன்றாக பிரசாரம் செய்வதை பார்த்து சிலர் பயத்தின் உச்சத்தில் உள்ளனர்: டிடிவி தினகரன்

பிக்பாஸ் பிரபலம் மீது தாக்குதல்: கானா வினோத், புகழ், மாகாபா ஆனந்த் மீது போலீஸில் புகார்!

பாஜகவுடன் கூட்டணி வைத்த திமுக: அதிமுக கூட்டணி வைத்தால் மதவாத கட்சியா? - இபிஎஸ் பிரசாரம்

எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

