சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பகுதி - 14

திருப்புகழில் எழுத்தமைப்பைப் பார்த்தோம். பாடல்களின் கருத்தமைப்பை இப்போது பார்ப்போம்.

Updated On :28 செப்டம்பர் 2015, 11:51 am

திருப்புகழில் எழுத்தமைப்பைப் பார்த்தோம். பாடல்களின் கருத்தமைப்பை இப்போது பார்ப்போம்.

இது வண்ணவிருத்தம் என்ற வகையைச் சேர்ந்தது என்று சொல்லி, மற்ற விருத்தங்களுக்கும் இதற்கும் உள்ள வேறுபாட்டைச் சொன்னோம். எந்த விருத்தமாக இருந்தாலும் அதன் அடிக்கணக்கு என்னவோ நான்குதான். அருணகிரிநாதர் இயற்றிய, திருப்புகழ் மதாணியில் அடங்கிய அனைத்துப் பாடல்களும் நான்கடிகளைக் கொண்டவையே — திருவெழுகூற்றிருக்கை ஒன்று நீங்கலாக.

திருப்புகழில், பொதுவாக அனைத்துப் பாக்களுக்கும் ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பு (ஸ்ட்ரக்சர்) உண்டு. ஏதோ ஒருவகை விளியாகவோ மற்ற வருணனையாகவோ தொடங்கும் முதலிரண்டு அடிகளில், இரண்டாம் அடி முடியும் சமயத்தில் ஒரு வேண்டுதலோடு முடியும். மூன்றாம் நான்காம் அடிகளில் மீண்டும் விளி, வருணனை போன்றவை அமைந்து, இன்ன தலத்தைச் சேர்ந்த பெருமாளே, தம்பிரானே போன்ற கடைசிச் சீரோடு முடியும்.

நாம் இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் பாடல் திருப்பரங்கிரித் திருப்புகழ். ‘பரங்கிரி வந்தருள் பெருமாளே’ என்று முடிந்திருப்பதைப் பார்க்கலாம். பெருமாளே என்பது தனதான என்ற அமைப்பிலும், தம்பிரானே என்பது தன்னனன என்ற அமைப்பிலும் இருப்பதைப் பார்க்கலாம். இப்படி வருவதைத் தனிச்சொல் என்போம். இந்த இடத்தில்தான், அந்தந்தப் பாடலில் என்னவகையான சந்தம் அமைந்திருந்தாலும், ஓசை சட்டென மாறி, ஒரு முறிப்பு எல்லை (breaking point) கிடைக்கிறது. இப்படி ஒவ்வொரு அடியின் கடைசியிலும் ஓசை மாறுபட்டு ஒலிக்க வேண்டும். அப்படி மாறுபடாவிட்டால், சொல்லும்போது மூச்சு முட்டிப்போகும். அந்த relief தான் இந்தச் சீரின் தாளமாறுபாட்டால் கிடைக்கிறது. திருப்புகழை வாய்விட்டுச் சொல்லிப் பார்த்தால் இது புரியும்.

இப்படி, இரண்டாம் அடி வேண்டுதலோடு முடிந்து, மூன்றாம் நான்காம் அடிகள் துதி, வருணனை, விளி போன்ற அமைப்போடு இருப்பதால்தான், திருப்புகழுக்கு உரை செய்பவர்கள் மூன்றாம் நான்காம் அடிகளுக்கு முதலில் பொருள் சொல்லிவிட்டு, வேண்டுதலோடு முடிகின்ற முதலிரண்டு அடிகளுக்கு அதன்பின்னர் உரை சொல்வார்கள். நாம் எளிமை கருதி, பாடல் இருக்கும் அதே அமைப்பை நம் உரை விளக்கத்துக்குப் பின்பற்றுகிறோம். இதைத் தொடர்வோம். இப்போது இன்றைய பாடலின் பொருளைப் பார்ப்போம்.

கனகந்திரள்கின்ற பெருங்கிரி - கனகம் என்றால் பொன். பொன் திரண்டு உருவானதைப்போல விளங்கும் பெரிய மலையாகிய மேருவை,

தனில்வந்து - அடைந்து,

தகன்தகன் என்றிடு - (அந்த மலைமேல்) தகதக என்று

கதிர் மிஞ்சிய செண்டை எறிந்திடு - ஒளிவிடுவதாகிய செண்டு எனும் ஆயுதத்தை (செண்டு என்பது வளைந்த பிரம்பு) கொண்டு அடித்த

கதியோனே - புகலிடமானவனே, (பிரம்பால் மேருமலையை அடித்தது திருவிளையாடற் புராணத்தில் வரும் (முருகனின் கூறான) உக்கிர பாண்டியன் செய்ததைக் குறிக்கும். இந்த வரலாற்றை இன்னொரு நாள் சொல்வோம்).

கடமிஞ்சி அநந்தவிதம் புணர் - கடம் என்றால் மதம். மதம் பெருகியபடி, பற்பல வகையாகச் (செய்யப்பட்ட பட்சணங்கள்) எல்லாவற்றையும் 

கவளந்தனை உண்டு வளர்ந்திடு - கவளம் கவளமாக உண்டு வளர்ந்திடு (எல்லாவகையிலும் நிறைவடைந்தவனான இறைவனுக்கு உணவாகப் பலவகையானவை சொல்லப்பட்டபோதிலும், அவன் உணவை உண்பதனால் வளர்ச்சியடைவதில்லை என்பதால், இந்த வளர்ந்திடு என்பதற்கு உண்டு அமைகின்ற என்று கொள்வது பொருந்தும்).

கரியின்றுணை என்றுபிறந்திடு முருகோனே - கரியாகிய யானைக்குத் (யானைமுகனுக்குத்) துணையாக (தம்பியாகப்) பிறந்தவனான முருகனே!

பனகந்துயில்கின்ற திறம்புனை - (பனகம் என்பது பாம்பை, ஆதிசேஷனைக் குறிக்கும்) பாம்பின் மேல் அறிதுயிலை மேற்கொள்ள வல்லவரும்

கடல்முன்பு கடைந்த பரம்பரர் - பழைய காலத்தில் (கூர்மாவதாரத்தில்) கடலைக் கடைந்த பரம்பரனானவரும் (பெரும்பொருளானவரும்)

படரும்புயல் என்றவர் அன்புகொள் மருகோனே - புயல் என்பதற்கு மேகம் என்று பொருள். இதை இதற்கு முன் பாடலில் பார்த்தோம். வானத்திலே படர்கின்ற மேகத்தின் வண்ணத்தைக் கொண்டவருமான திருமால் அன்புவைத்திருப்பவனான மால்மருகனே, மருமகனே,

இப்போது ஆரம்ப விளிகள் முடிகின்றன. இதுவரையில் ஒவ்வொரு விளியிலும் வேறுவேறு தெய்வங்களைக் குறித்திருந்தாலும், எல்லோரையும் முருகனோடு கொண்டுகூட்டியிருக்கிறார். இப்போது இரண்டாம் அடியில் முடியப்போவதான வேண்டுதல் தொடங்குகிறது.

பலதுன்பம் உழன்று கலங்கிய - நான் பல துன்பங்களில் உழன்று கலக்கத்தை அடைந்தவன்

சிறியன்புலையன் கொலையன் - அற்பன், புலைத்தொழிலன், கொலைகாரன்

புரி பவமின்று கழிந்திட வந்தருள் புரிவாயே – புரி = செய்யும்; பவம் = பாவம். இப்படிப்பட்ட நான் செய்யும் பாவமெல்லாம் தொலையும்படியாக என்னெதிரில் வந்து அருள் செய்ய வேண்டும் (வேண்டுதல் முடிகிறது. அடுத்த பகுதி விளிகள் தொடர்கின்றன)

அனகன்பெயர் நின்று - (அனகன் - பாவமில்லாதவன், தூயவன்) தூயவன் என்ற பெயர் நிலைத்தவனும்

உருளுந்திரி புரமுந்திரி வென்றிட - எப்போதும் உருண்டு திரிந்துகொண்டிருந்த திரிபுரங்களை வெற்றிகொள்ளுமாறு

இன்புடன் அழல் உந்த - மகிழ்ச்சியோடு அக்கினி தேவன் வந்து பற்றிக்கொள்ளும்படியாக

நகுந்திறல் கொண்டவர் புதல்வோனே - சிரித்தே புரம் எரிக்கும் திறல் கொண்டவரான சிவபெருமானின் புதல்வனே

அடல்வந்து முழங்கியிடும்பறை - (அடல் - வலிமை) வலிமையோடு முழங்குகின்ற பறையானது

டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென - டுடுடுண்டுடு என்ற ஓசையோடு

அதிர்கின்றிட அண்டநெரிந்திட - உலகமெல்லாம் அதிர்ந்திடும்படியும், அண்டங்கள் நெரிந்திடும்படியாக

வருசூரர் மனமும் தழல் சென்றிட - போருக்கு வந்த சூரர்களுடைய மனத்துக்குள்ளே தீப்பற்றும்படியும்

அன்றவர் உடலுங் குடலுங் கிழி கொண்டிட - அந்தச் சமயத்தில் அவர்களுடைய உடல்களும் குடல்களும் கிழிபடும்படி

மயில் வென் தனில் வந்தருளும் - (வென், வெரிந் - முதுகு) மயில் முதுகில் அமர்ந்து வந்து அருளும்

கன பெரியோனே - மிகுந்த மதிப்பையும் பெருமையையும் உடையவனே

மதியும் கதிரும் தடவும்படி - சந்திர சூரியர்கள் தடவிச் செல்லும் அளவுக்கு

உயர்கின்ற வனங்கள் பொருந்திய - உயரத்தில் இருப்பதான வனங்கள் அமைந்துள்ள

வளமொன்றுப ரங்கிரி வந்தருள் பெருமாளே - வளம்பொருந்திய திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளியிருக்கிற பெருமாளே.

அடிகள் 1, 3, 4 ஆகியவற்றில், முருகனைப் பல்வேறுவிதமாக அழைக்கிறார். இரண்டாம் அடியின் முடிவில் ஒன்றை வேண்டுகிறார். ‘திருப்பரங்குன்றில் எழுந்தருளியிருப்பனும் இப்படிப்பட்டவனுமான முருகா, என் பாவங்களெல்லாம் தொலையும்படி எனக்குக் காட்சி கொடுத்தருள வேண்டும்.

</p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.