ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

பகுதி - 335

சிவனார் ஆடும் ஞான ஆனந்தத் தாண்டவத்தைக் கண்ட—சிவனோடு சா ரூப நிலையிலுள்ள

Updated On :16 ஆகஸ்ட் 2016, 6:30 pm

பதச் சேதம்

சொற் பொருள்

சாங்கரி பாடி இட ஓங்கிய ஞான சுக தாண்டவம் ஆடியவர் வடிவான

 

சாங்கரி: சங்கரி; பாடியிட: பாட; ஞானசுக தாண்டவம்: ஞான ஆனந்த தாண்டவம்; ஆடியவர் வடிவான: ஆடிய சிவனாரின் வடிவத்தை எய்திய (சா-ரூபம் அடைந்த);

சாந்தம் அதீதம் உணர் கூ(ர்)ந்த தம சாதி அவர் தாங்களும் ஞானம் உற அடியேனும்

 

சாந்தம் அதீதம்: சாந்தத்தைக் கடந்த, அந்நிலையின் உச்சத்தில் உள்ள; உணர் கூர்ந்த தம சாதி: (ஞான நிலையான) உணர்வு மிகுந்தவர்களும், சிவனின் தமர்களுமான;

தூங்கிய பார்வையொடு தாங்கிய வாயுவொடு தோன்றிய சோதியொடு சிவ யோகம்

 

தூங்கிய பார்வை: அறிதுயில் நிலையிலுள்ள பார்வை; தாங்கிய வாயு: விளக்கத்தில் காணவும்;

தூண்டிய சீவனொடு வேண்டிய காலமொடு சோம்பினில் வாழும் வகை அருளாதோ

 

சோம்பினில்: சும்மா இருக்கும் மோன ஞான நிலையில்;

வாங்குகை யானை என ஈன் குலை வாழை வளர் வான் பொழில் சூழும் வயல் அயல் ஏறி

 

வாங்கு கை யானை: தொங்குவதான துதிக்கையை உடைய யானை; ஈன்: ஈனும், தோற்றுவிக்கும்;

மாங்கனி தேன் ஒழுக வேங்கையில் மேல் அரிகள் மாந்திய ஆரணிய(ம்) மலை மீதில்

 

அரிகள்: குரங்குகள்; மாந்திய: பருகிய, உண்ட; ஆரணியம்: காடு;

பூங்கொடி போலும் இடை ஏங்கிட வார் அம் அணி பூண்பன பாரியன தன பார

 

ஏங்கிட: தளர்வெய்த; பாரியன: பருத்த, பெரிய;

பூங்குற மாதினுடன் ஆங்கு உறவாடி இருள் பூம் பொழில் மேவி வளர் பெருமாளே.

 

 

சாங்கரி பாடியிட ... உமையம்மைப் பாட்டுப் பாடி(த் தாளமிட),

ஓங்கிய ஞானசுகதாண்டவ மாடியவர் வடிவான... உயர்ந்ததான ஞான ஆனந்த (சுக) தாண்டவத்தை ஆடியவரான சிவபெருமானின் வடிவமாக (சா ரூப நிலையை அடைந்தவகளும்;

சாந்தம் அதீதம் உணர் கூந்தம சாதியவர் தாங்களு (உணர் கூர்ந்த தம-சாதியவர்) ... சாந்த குணத்தின் உச்சத்தை உணர்ந்து; மிகுந்த (கூர்ந்த) சிவநேசர்களாக (சிவன் தமர் சாதியவர்)

ஞானமுற... (உமையம்மை பாட, சிவனாடக் கண்டதனால்) ஞான நிலையை எய்த;

அடியேனும் தூங்கிய பார்வையொடு தாங்கிய வாயுவொடு* ... (அதுபோலவே) அடியேனும் அறிதுயிலால் பெற்ற ஞானதிருஷ்டியோடும்; உள்ளே சுழுமுனையில்—வெளியேறாதபடி நிறுத்திய—பிராணவாயுவோடும்;

(* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:

நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு

'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரமகபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.  'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.  'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.  'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.  'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.

சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால்

மன அமைதி ஏற்படும். – விளக்கத்துக்கு நன்றி: http://kaumaram.com/thiru/nnt1240_u.html)

தோன்றிய சோதியொடு ... (அப்படிப்பட்ட நிலையிலே மனத்துக்குள்) தோன்றும் ஜோதியின் தரிசனத்தோடும்;

சிவயோகந் தூண்டிய சீவனொடு ... சிவயோக நிலையில் பரசிவத்துடன் கூடி நிலைத்த ஆன்மாவோடும்,

வேண்டிய காலமொடு ... விரும்பும் அளவுக்கு நீண்ட காலத்துக்கு,

சோம்பினில் வாழும்வகை அருளாதோ ... சும்மா இருக்கும் மெளனஞான நிலையில் வாழும் பேற்றை (உன்னுடைய திருவருள்) எனக்கு அருளாதோ? 

வாங்குகை யானையென ஈன்குலை வாழைவளர் ... நீண்டு தொங்கும் யானையின் துதிக்கையைப் போல வாழைக்குலைகளை ஈனுகின்ற வாழைமரங்கள் வளர்ந்து;

வான்பொழில் சூழும்வயல் அயலேறி ... உயரமான சோலைகள் சூழ்ந்திருக்கும் வயல்களுக்கு வெளியே (உள்ளதான)

மாங்கனி தேனொழுக வேங்கையில் மேல் அரிகள் ... (மாமரங்களில் பழுத்திருக்கும்) மாம்பழத்தின் தேன் ஒழுகும்படியாக, வேங்கை மரங்களிலிருந்து பாய்கின்ற குரங்குகள்,  

மாந்திய ஆரணிய மலைமீதில் ... பருகியதான தேனையும் (உண்தான) பழங்களையும் கொண்ட காடுகள் நிறைந்த வள்ளிமலையில்,

பூங்கொடி போலும் இடை ஏங்கிட ... கொடிபோன்ற மெல்லிய இடை சோர்ந்து தளரும்படியாக,

ஆரமணி பூண்பன பாரியன தனபாரப் பூங்குற மாதினுடன் ஆங்கு (உ)றவாடி... அணிந்துள்ள முத்து மணி ஆபரணங்களின் கனமும்; மார்பகத்தின் கனமும் கொண்ட அழகிய குறமகளான வள்ளியோடு அங்கே அன்போடு உறவுகலந்தபடி (அந்த),

இருள் பூம்பொழில் மேவிவளர் பெருமாளே. ... (அடர்த்தியான மரங்களின் நிழலாலே) இருண்டதான சோலையை அடைந்து வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

யானையின் துதிக்கையைப் போல கனமான வாழைக்குலைகளைத் தள்ளும் சோலைகள் நிறைந்த வயல்வெளிகளுக்கு வெளியே உள்ள மாமரங்களின் இனிய சாறு நிரம்பிய பழங்களின்மேல் வேங்கை மரத்திலிருந்து பாயும் குரங்குகள் உண்டதான தேனும், பழங்களும் நிரம்பிய காடுகளின் இருண்டவெளியில், ஆபரணங்களாலும் மார்பகத்தின் கனத்தாலும் சோர்ந்து தளரும் மெல்லிய இடையையுடைய வள்ளியம்மையுடன் நேசத்தோடு கலந்திருக்கும் பெருமாளே!

சங்கரி பாட; சிவனார் ஆடும் ஞான ஆனந்தத் தாண்டவத்தைக் கண்ட—சிவனோடு சா ரூப நிலையிலுள்ள—சிவநேசச் செல்வர்கள் ஞானநிலையை அடைவதைப் போல, அடியேனும் அறிதுயிலால் பெற்ற ஞானவிழியோடும் சிவயோக நிலையில் பரசிவத்துடன் கூடி நிலைத்த ஆன்மாவுடனும் நீண்டகாலத்துக்குச் சும்மா இருக்கும் மௌன ஞான நிலையை அடையும் பேற்றை உனது திருவடிகள் அடியேனுக்கு அருளவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.