ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

பகுதி - 180

திருத்தணிகைத் திருப்புகழான இந்தப் பாடலில் பலவகையான செய்திகளைக் காண முடிகிறது. பாடலின் முதற் சொல்லான ‘கிறிமொழி’ என்பதிலுள்ள ‘கிறி’ என்பதற்குப் பொய் என்று பொருள்.

Updated On :15 மார்ச் 2016, 12:41 pm

திருத்தணிகைத் திருப்புகழான இந்தப் பாடலில் பலவகையான செய்திகளைக் காண முடிகிறது.  பாடலின் முதற் சொல்லான ‘கிறிமொழி’ என்பதிலுள்ள ‘கிறி’ என்பதற்குப் பொய் என்று பொருள். 

கேடிலியைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்

    கிறிபேசி மடவார்பெய் வளைகள் கொள்ளும்…

என்பார் திருநாவுக்கரசர் (திருக்கஞ்சனூர் திருத்தாண்டகம் ‘ஏடேறு மலர்க்கொன்றை’). 

பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப்

    பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர்

என்பார் சம்பந்தர் (திருநாகைக்காரோணம்)

கிறி பேசுதல் என்றால் பொய் பேசுதல்.  கிறிமொழி என்றால் பொய்மொழி.  இது ஒருபுறமிருக்கட்டும்.  திருஞானசம்பந்தரை முருகனுடைய அவதாரம் என்று பாடுகின்ற இந்தப் பாடலில் சம்பந்தரை ‘புகலியில் கவுணியப் புலவோனே’ என்று பாடுகிறார்.  புகலி என்பது சீர்காழிக்கு உரிய பன்னிரண்டு பெயர்களுள் ஒன்று.  திருஞான சம்பந்தரை கவுணியர் குலத்தவர் என்கிறார்.  ஞானசம்பந்தர் தன்னைக் கவுணியன் என்று பல பாடல்களில் சொல்லியிருக்கிறார்.  எடுத்துக்காட்டாக,

கண்டல்கண் மிண்டிய கானற்காழிக் கவுணியன் ஞானசம்   பந்தன்சொன்ன
கொண்டினி தாவிசை பாடியாடிக் கூடும வருடை யார்கள்வானே.

(திருவாரூர் பசுபதீச்சரம் 11-ம் பாடல்)

இப்படி தொட்ட தொட்ட இடங்களிலெல்லாம் தேவார திருவாசக ஆட்சிகளையும் செய்திகளையும் குருநாதர் உதிர்த்தபடிச் செல்கிறார்.  இவற்றையெல்லாம் நூற்பயிற்சி என்பதா அல்லது முருகனுடைய வேற்பயிற்சி — வேல் தந்த பயிற்சி — என்பதா!  இந்தப் பாடலில் இன்னொரு குறிப்பும் கிடைக்கிறது.  திருத்தணிக்கு செருத்தணி என்ற பெயரிருப்பதை இந்தப் பாடல் குறிக்கிறது.  முன்னொருமுறை சொன்னதைப்போல, திருவண்ணாமலையில் தற்போது அடியண்ணாமலை என்று அறியப்படும் ஆலயம் ஆதி அண்ணாமலை என்பதன் சிதைவு (ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே) என்பதற்கும் குருநாதருடைய பாடல் சான்றளிக்கின்றது.  செருத்தணிக்கும் அப்படியொரு சான்றை அளிக்கின்றது.  பாடலைப் பார்ப்போம்.

தனதனத் தனதனத் தனதனத் தனதனத்

தனத் தனதனத் - தனதான

கிறிமொழிக் கிருதரைப் பொறிவழிச் செறிஞரைக்

               கெடுபிறப் பறவிழிக் - கிறபார்வைக்

        கெடுமடக் குருடரைத் திருடரைச் சமயதர்க்

              கிகள்தமைச் செறிதலுற் - றறிவேதும்

அறிதலற் றயர்தலுற் றவிழ்தலற் றருகலுற்

                 றறவுநெக் கழிகருக் - கடலூடே

        அமிழ்தலற் றெழுதலுற் றுணர்நலத் துயர்தலுற்

               றடியிணைக் கணுகிடப் - பெறுவேனோ

பொறியுடைச் செழியன்வெப் பொழிதரப் பறிதலைப்

               பொறியிலச் சமணரத் - தனைபேரும்

        பொடிபடச் சிவமெனப் பொடிபரப் பியதிருப்

                புகலியிற் கவுணியப் - புலவோனே

தறிவளைத் துறநகைப் பொறியெழப் புரமெரித்

                தவர்திருப் புதல்வநற் - சுனைமேவுந்

        தனிமணக் குவளைநித் தமுமலர்த் தருசெருத்

                தணியினிற் சரவணப் - பெருமாளே.

</p><p align="justify"> </p><p align="justify"><iframe src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/251801591&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" style="width: 377px; height: 302px" /></p><p align="justify"> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.