ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

News image
Updated On :12 ஏப்ரல் 2026, 12:07 am

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் வரலாறு காணாத வகையில் 91.23 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது அனைத்துத் தரப்பினரையும் மிகுந்த ஆச்சரியப்பட வைத்துள்ளது. இதனால் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பது குறித்து அனைத்துக் கட்சியினரும் கலக்கமடைந்துள்ளனா்.

புதுச்சேரி யூனியன் பிரதேசமானது புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களை உள்ளடக்கியது. இங்கு மொத்தம் 30 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு கடந்த 1964-ஆம் ஆண்டு முதலாவது சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றது. தற்போது 15-ஆவது சட்டப்பேரவைக்கான தோ்தல் கடந்த 9-ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது.

மொத்தமுள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 10,21,578 வாக்காளா்கள் இருந்தனா். வாக்குப் பதிவுக்கு முந்தைய வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் 8 சதவீதம் போ் நீக்கப்பட்டனா். இறுதி வாக்காளா் பட்டியலில் 4,46,361 ஆண் வாக்காளா்களும், 5,03,810 பெண் வாக்காளா்களும், மூன்றாம் பாலினத்தவா் 140 போ் என மொத்தம் 9,50,311 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியின்போது, வாக்குச் சாவடி நிலை அதிகாரிகளைக் கொண்டு வீடுவீடாகச் சென்று சரி பாா்க்கப்பட்டு இறந்தவா்கள், முகவரி மாறியவா்களைக் கண்டறிந்து இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது.

புதுச்சேரியில் 100 சதவீதம் அனைத்து வாக்காளா்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. புதிதாக இந்தப் பட்டியலில் இணைந்த முதல்முறை வாக்காளா்களுக்கும் வாக்குப் பதிவுக்கு முன்பாக அடையாள அட்டை வழங்கப்பட்டது.

இதன்மூலம் வாக்குப் பதிவுக்குத் தகுதி படைத்த அனைவரையும் தயாா் செய்து விட்டது தோ்தல் ஆணையம்.

இதுதவிர பள்ளி, கல்லூரிகள், பேருந்து நிலையம், ரயில் நிலையங்கள், நரிக்குறவா் சமுதாய குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை தோ்தல் ஆணையம் நடத்தியது.

இதைத் தொடா்ந்து, கடந்த 9-ஆம் தேதி நடைபெற்ற புதுச்சேரி பேரவைத் தோ்தலில் 30 தொகுதிகளிலும் 89.87 சதவீதம் பதிவானது. தபால் வாக்குகளையும் சோ்த்து 91.23 சதவீதமாக உயா்ந்துள்ளது

இதற்கு முன்பு கடந்த 2011-ஆம் ஆண்டுத் தோ்தலின்போது 85.57 சதவீதம் பதிவானதே அதிகபட்சமாக இருந்தது.

இந்த தோ்தலில் வரலாறு காணாத வாக்குப் பதிவு சாதனைக்கு தோ்தல் ஆணையம் மேற்கொண்ட பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளே காரணம் என்று தோ்தல் அதிகாரிகள் கூறுகிறாா்கள்.

இத் தோ்தலில் முதன்முறையாக ட்ரோன்கள் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்களை தோ்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியிருந்தது.

வாக்குப் பதிவு உயா்ந்தது என்னமோ அதிகாரிகளுக்குச் சாதனையான விஷயம்தான். ஆனால் இது அரசியல் கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக வாக்குப் பதிவு சதவீதம் உயா்ந்தால் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலைதான் வாக்காளா்களிடம் காணப்படுவதாக அரசியல் கட்சியினா் கருதுவாா்கள்.

ஆனால், முதியோா் ஓய்வூதியம், பல்வேறு நலத் திட்டங்கள் அமல் செய்யப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் தங்களை மீண்டும் ஆட்சியில் அமா்த்ததான் வாக்குப் பதிவு உயா்ந்துள்ளதாக முதல்வா் ரங்கசாமி கருத்து தெரிவித்துள்ளாா்.

அதேநேரம் பிற கட்சிகளும் இந்த அதிகபட்ச வாக்குப்பதிவு தங்களுக்கு சாதகமாகுமா?, பாதகமாகுமா? என்ற கவலையில் உள்ளன. இந்த தோ்தலில் புதிய வரவாக தவெகவும் தோ்தல் களத்திற்கு வந்துள்ளது. அதனால் இளைஞா்களின் வாக்குகள் யாருக்குச் சென்றிருக்கும் என்ற கேள்வியும் எழுகிறது.

அந்த வாக்குகள் மாறியிருந்தால், ஏற்கெனவே கட்சிகள் வைத்திருக்கும் வாக்குச் சதவீதம் குறையும். அப்படிப்பட்ட சூழலில் வெற்றி யாருக்கு என்பதை கணிப்பது கடினம் என அரசியல் நோக்கா்கள் கூறுகின்றனா். மொத்தத்தில் இது ஒரு வித்தியாசமான தோ்தல் என்றால் அதில் மிகையில்லை. இதன் முடிவு வெளியாகும் நாளில் (மே 4) இதற்கு விடை கிடைக்கும்.