பதச் சேதம் | சொற் பொருள் |
மூல மந்திரம் ஓதல் இங்கு இலை ஈவது இங்கு இலை நேயம் இங்கு இலை மோனம் இங்கு இலை ஞானம் இங்கு இலை மடவார்கள்
| |
மோகம் உண்டு அதி தாகம் உண்டு அபசாரம் உண்டு அபராதம் உண்டு இடு மூகன் என்ற ஒரு பேரும் உண்டு அருள் பயிலாத
| இடு மூகன்: இடப்பட்ட பெயரான மூகன் (அர்ஜுனனுடைய தவத்தைச் சோதிக்க வேட உருக்கொண்டு வந்த சிவபிரானும் அர்ஜுனனும் கொன்ற பன்றி ‘மூகாசுரன்’. ஆகவே மூகன்=இழிந்தவன்); |
கோலமும் குண ஈன துன்பர்கள் வார்மையும் பலவாகி வெந்து எழு கோர கும்பியிலே விழுந்திட நினைவாகி
| வார்மை: ஒழுக்கம்; கும்பி: கும்பி பாகம் என்னும் நரகம் (பாவம் செய்தவர்களைச் சூளையில் சுடும் நரகம்); |
கூடி கொண்டு உழல்வேனை அன்போடு ஞான நெஞ்சினர் பால் இணங்கிடு கூர்மை தந்து இனி ஆள வந்து அருள் புரிவாயே
| கூர்மை தந்து: நுண்ணறிவைத் தந்து; |
பீலி வெந்து உயர் ஆலி வெந்து அசோகு வெந்து சமண் மூகர் நெஞ்சிடை பீதி கொண்டிட வாது கொண்டு அருள் எழுது ஏடு
| பீலி: மயிற்பீலி; ஆலி: (கமண்டலத்து) நீர்; அசோகு: அசோக மரத்துத் தளிர்; மூகர்: ஊமையர் (ஊமையராய்); |
பேணி அங்கு எதிர் ஆறு சென்றிட மாறனும் பிணி தீர வஞ்சகர் பீறு வெம் கழு ஏற வென்றிடு முருகோனே
| பேணி: பேணப்பட்டு, போற்றப்பட்டு; எதிர்ஆறு சென்றிட: ஆற்றின் ஓட்டத்தை எதிர்த்து ஏற; பீறு: கிழிக்கும்; வெம்கழு: கொடிய கழுமரம்; வென்றிடு முருகோனே: ஞானசம்பந்தராக வந்த முருகனே; |
ஆலம் உண்டவர் சோதி அம் க(ண்)ணர் பாகம் ஒன்றிய வாலை அந்தரி ஆதி அந்தமுமான சங்கரி குமரேசா
|
|
ஆரணம் பயில் ஞான புங்கவ சேவல் அம் கொடி ஆன பைங்கர ஆவினன்குடி வாழ்வு கொண்டு அருள் பெருமாளே.
| ஆரணம்: வேதம்; ஞான புங்கவ: ஞான முதல்வனே; பைங்கர: பசிய கரம், திருக்கரம்; |
மூல மந்திரம் ஓதல் இங்கிலை... மூலமந்திரமாகிய ‘சரவண பவ’ என்னும் ஆறெழுத்தை ஓதுவது இங்கே (என்னிடத்தில்) இல்லை;
ஈவது இங்கிலை நேயம் இங்கிலை மோனம் இங்கிலை ஞானம் இங்கிலை... ஒருவருக்கும் கொடுக்கும் குணம் எனக்கில்லை; அன்பு செலுத்துதல் என்பதும் என்னிடத்திலில்லை; மௌன நிலையில் இருப்பதும் என்னிடத்திலில்லை; ஞானம் என்பது இல்லை; (அதற்கு மாறாக),
மடவார்கள் மோகம் உண்டு அதி தாகம் உண்டு அபசாரம் உண்டு அபராதம் உண்டு இடு மூகன் என்றொரு பேரும் உண்டு... பெண்களின் மேலே கொண்டுள்ள மோகம் இருக்கிறது; அந்த மோகத்தாலே ஏற்படும் தாகமும் இருக்கிறது; அந்த தாகத்தாலே செய்த குற்றங்கள் இருக்கின்றன; அவற்றுக்கான தண்டனைகளும் காத்திருக்கின்றன; மற்றவர்கள் எனக்கிட்ட ‘கீழ்மகன்’ என்ற பெயரும் இருக்கிறது;
அருள் பயிலாத கோலமும் குண வீன துன்பர்கள் வார்மையும் பலவாகி.. (மற்றவர்களுக்கு) அருள்வதில் பழக்கம் இல்லாத கோலமும்; குணக்கேடர்களோடும் துன்பத்தைச் செய்பவர்களோடும் கூடியிருக்கும் ஒழுக்கமும் என பல (குற்றங்கள்) சேர்ந்து;
வெந்தெழு கோர கும்பியிலே விழுந்திட நினைவாகி கூடு கொண்(டு) உழல்வேனை... நெருப்பிலே வேகச் செய்கின்ற கோரமான ‘கும்பிபாகம்’ என்னும் நரகத்தில் விழுவதற்காகவே நினைவுகொண்டு, உடலாகிய கூட்டைச் சுமந்து திரிகின்ற என்னை;
அன்பொடு ஞான நெஞ்சினர்பால் இணங்கிடு கூர்மை தந்தினி யாள வந்தருள் புரிவாயே... அன்பும் ஞானமும் நிறைந்த உள்ளத்தவரான பெரியோரோடு சேர்ந்திருக்கின்ற புத்திக் கூர்மையைத் தந்து என்னை ஆள்வதற்காக என்னெதிரே தோன்றியருள வேண்டும்.
பீலி வெந்(து) உயர் ஆலி வெந்து அவ் அசோகு வெந்து... (பாண்டிய மன்னனுடைய ஜுரத்தால் அவனுடைய உடலில் தடவின) மயிற்பீலியும் பொசுங்கி; கமண்டலத்திலிருந்து தெளித்த நீரும் ஆவியாகி; (மேலே வீசப்பட்ட) அசோகத் தளிர்களும் கரிந்து;
அமண் மூகர் நெஞ்சிடை பீதி கொண்டிட... (அந்தக் காரணத்தால்) வாயடைத்து ஊமையரான சமணர்களுடைய நெஞ்சிலே கிலி பிறக்க;
வாது கொண்டு அருள் எழுது ஏடு பேணி அங்கு எதிர் ஆறு சென்றிட... அவர்களோடு வாதிட்டும்; ‘அந்தணர் வாழ்க’ என்று எழுதப்பட்ட ஏடு வைகையாற்று வெள்ளத்தில் யாவரும் போற்றுமாறு எதிரேறச் செய்தும்;
மாறனும்பிணி தீர வஞ்சகர் பீறு வெங்கழு வேற வென்றிடு முருகோனே... பாண்டிய மன்னனுடைய நோய் (திருநீற்றால்) தீரும்படியும்; வஞ்சரான சமணர்கள் உடலைக் கிழிக்கின்ற கழுமரத்தில் ஏறும்படியும் திருஞான சம்பந்தராக அவதரித்த முருகனே!
ஆல முண்டவர் சோதி அங்கணர் பாக மொன்றிய வாலை அந்தரி ஆதி யந்தமுமான சங்கரி குமரேசா... ஆலகாலத்தை உண்டவரும்; (சூரிய, சந்திர, அக்கினி என்னும்) மூன்று சுடர்களை மூன்று கண்களாகக் கொண்டவருமான சிவபெருமானுடை இடப்பாகத்தில் ஒன்றியவரும்; பாலையும்; காளியும்; முதலும் முடிவுமானவளுமான சங்கரியுடைய குமரனே!
ஆரணம்பயில் ஞான புங்கவ சேவலங்கொடியான பைங்கர ஆவினன்குடி வாழ்வு கொண்டருள் பெருமாளே... வேதங்கள் போற்றிப் பயில்கின்ற ஞான முதல்வனே! சேவற்கொடியை ஏந்திய திருக்கரத்தனே! திருவாவினன்குடி வாழ்வு பெறுமாறு வீற்றிருக்கின்ற பெருமாளே!
சுருக்க உரை
பாண்டியனுடைய உடலில் ஏற்பட்ட ஜுர வேகத்தால் அவன் உடலில் சமணர்கள் தடவிய மயிற்பீலி கரிந்து; அவர்கள் தெளித்த கமண்டலத்து நீர் ஆவியாகி; வீசிய அசோகத் தளிர்கள் எரிந்துபோக; அதன் காரணத்தால் அவர்கள் வாயடைத்து ஊமையாகவும்; அச்சம் பிறக்கவும்; அவர்களை வாதில் வென்றும்; எல்லோரும் போற்றும்படியாக ‘அந்தணர் வாழ்க’ என்று எழுதப்பட்ட ஓலை வைகையாற்று வெள்ளத்துக்கு எதிரேறும்படியும்; பாண்டியனுடைய நோய் தீரும்படியும்; சமணர்கள் உடலைக் கிழிக்கின்ற கழுவில் ஏறும்படியும் வென்ற திருஞான சம்பந்தராக அவதரித்த முருகனே! நஞ்சை உண்டவரும்; சூரிய, சந்திர அக்கினியாகிய முச்சுடர்களை முக்கண்களாகக் கொண்டவருமான சிவபெருமானுடைய இடப்பாகத்திலுள்ளவளும்; பாலையும்; காளியும்; முதலும் முடிவுமாக நிற்பவளுமான சங்கரி குமாரனே! வேதங்கள் போற்றிப் பயிலும் ஞான முதல்வனே! சேவற்கொடியை ஏந்தும் திருக்கரத்தனே! திருவாவினன்குடியில் வீற்றிருக்கும் பெருமாளே!
என்னிடத்திலே ஆறெழுத்து மூலமந்திரத்தை ஓதும் பழக்கமில்லை; யாருக்கும் கொடுக்கின்ற குணமில்லை; அன்பு செலுத்தியறியேன்; மௌன நிலையில் நின்றறியேன்; ஞானம் என்பதும் இல்லை; அதற்கு மாறாக பெண்களிடத்தில் மோகம் உண்டு; அந்த மோகத்தால் ஏற்பட்ட தாகம் உண்டு; அந்த தாகத்தால் செய்த குற்றங்களும் உண்டு; அந்தக் குற்றங்களுக்கான தண்டனையும் உண்டு; கீழ்மகன் என எனக்கு மற்றவர்கள் இட்ட பெயரும் உண்டு; உன்னுடைய திருவருளைப் பயிலாத கோலமும்; குணக்கேடர்களான பலரோடு சேர்தொழுகும் தீயொழுக்கமும் கலந்து; சுட்டெரிப்பதான கும்பிபாகம் என்னும் நரகத்தில் விழுவதையே எண்ணமாகக்கொண்டு இந்த உடலாகிய கூட்டைச் சுமந்து திரிகின்ற என்னை,
அன்பும் ஞானமும் உள்ளவர்களான பெரியோர்களோடு சேர்கின்ற நுண்ணறிவைத் தந்து ஆண்டுகொள்வதற்காக என்னெதிரில் தோன்றியருளவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தீக்காயமுற்ற பெண் உயிரிழப்பு

திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்! - டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு

சேலத்தில் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்

திருமயம் தொகுதியில் அடிப்படை வசதிகள் அனைத்தும் பூா்த்தி செய்யப்படும்! - அதிமுக வேட்பாளா் வைரமுத்து உறுதி
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

