ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

பகுதி - 355

திருச்செந்தூரில் வீற்றிருக்கும் பெருமாளே!

Updated On :5 செப்டம்பர் 2016, 6:30 pm

பதச் சேதம்

சொற் பொருள்

தொந்தி சரிய மயிரே வெளிர நிரை தந்தம் அசைய முதுகே வளைய இதழ் தொங்க ஒரு கை தடி மேல் வர மகளிர் நகை ஆடி

 

வெளிர: வெளுத்துப் போக; நிரை: வரிசை; தந்தம்: பல்; இதழ்: உதடு; நகையாடி: கேலியாகச் சிரித்து;

தொண்டு கிழவன் இவன் ஆர் என இருமல் கிண் கிண் என முன் உரையே குழற விழி துஞ்சு குருடு படவே செவிடு படு செவியாகி

 

தொண்டு: தொன்மை என்பது அடிச்சொல் எனவே வயதேறிய என்பது பொருள்;

வந்த பிணியும் அதிலே மிடையும் ஒரு பண்டிதனுமே உறு வேதனையும் இள மைந்தர் உடைமை கடன் ஏது என முடுகி துயர் மேவி

 

மிடையும்: மிகுதியாக, அடிக்கடி; பண்டிதன்: மருத்துவன்; முடுக: அவசரப்படுத்த;

மங்கை அழுது விழவே யம படர்கள் நின்று சருவ மலமே ஒழுக உயிர் மங்கு பொழுது கடிதே மயிலின் மிசை வர வேணும்

 

மங்கை: மனைவி; சருவ: போராட;

எந்தை வருக ரகு நாயக வருக மைந்த வருக மகனே இனி வருக என் கண் வருக எனது ஆருயிர் வருக அபிராம

 

அபிராம: அழகா

இங்கு வருக அரசே வருக முலை உண்க வருக மலர் சூடிட வருக என்று பரிவினோடு கோசலை புகல வரு(ம்) மாயன்

 

 

சிந்தை மகிழும் மருகா குறவர் இள வஞ்சி மருவும் அழகா அமரர் சிறை சிந்த அசுரர் கிளை வேரொடு அழிய அடு தீர

 

அடு தீர: போரிடும் தீரனே; இளவஞ்சி: இளங்கொடி;

திங்கள் அரவு நதி சூடிய பரமர் தந்த குமர அலையே கரை பொருத செந்தில் நகரில் இனிதே மருவி வளர் பெருமாளே.

 

 

தொந்தி சரிய மயிரே வெளிற நிரை தந்தம் அசைய... வயிறு தொந்தி விழுந்து சரியவும்; மயிர் வெளுத்துப் போகவும்; வரிசையான பற்கள் ஆடவும்;

முதுகே வளைய இதழ் தொங்க ஒருகை தடிமேல் வர... முதுகு கூன்போட்டு வளையவும்; உதடுகள் தொங்கிப் போகவும்; ஒரு கை ஊன்றுகோலின் மேலே பற்றியிருக்கவும்;

மகளிர் நகையாடி தொண்டு கிழவன் இவனாரென ... ‘இந்த வயதேறிய கிழவன் யார்’ என்று பெண்கள் கேலிச்சிரிப்போடு பேசவும்;

இருமல் கிண்கிணென முன் உரையே குழற... (ஆள் வருவதற்கு) முன்னால் இருமலோசை கிண்கிண்ணென ஒலிக்கவும்; சொற்கள் குழறிக் குழறி வரவும்;

விழிதுஞ்சு குருடு படவே செவிடுபடு செவியாகி... பார்வை மங்கி கண், குருட்டுத் தன்மையை அடையவும்;  காதுகள் கேட்க இயலாமல் செவிடாகவும்;

வந்த பிணியும் அதிலே மிடையும் ஒரு பண்டிதனும்... வந்து சேர்ந்திருக்கும் நோய்களும்; (அவற்றுக்காக) வந்துபோகின்ற ஒரு மருத்துவனும்;

மெய்உறு வேதனையும் ... உடல் படுகின்ற அவதிகளும்; 

இளமைந்தர் உடைமை கடனேது எனமுடுக ... இளைஞரான பிள்ளைகள் ‘எத்தனை சொத்து இருக்கிறது, எவ்வளவு கடன் இருக்கிறது’ என்று ஓயாமல் கேட்கவும்;

துயர்மேவி மங்கை யழுது விழவே யமபடர்கள்நின்று சருவ... மிகுந்த துயரத்தை அடைந்த மனைவி அழுதபடி தரையில் விழவும்; (உயிரைக் கவர்வதற்காக) யமதூதர்கள் போராடியபடி நிற்கவும்;

மலமே யொழுக உயிர் மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை வரவேணும்... கட்டுப்டுத்த முடியாமல் மலம் ஒழுகியபடி இருக்கவும்; உயிரின் ஒளி மங்குகின்ற இப்படிப்பட்ட சமயத்தில் நீ மயில்மேல் அமர்ந்த கோலத்தில் வரவேண்டும்.

எந்தை வருக ரகுநா யகவருக மைந்த வருக மகனே யினிவருக... அப்பனே வருக; ரகுநாயகனே வருக; குழந்தாய் வருக; மகனே உடனே வருக;

என்கண் வருக எனதா ருயிர்வருக அபிராம இங்கு வருக அரசே வருக... என் கண்ணே வருக; என் ஆருயிரே வருக; அழகனே இங்கே வருக; எனதரசே வருக;

முலையுண்க வருக மலர்சூ டிடவருக என்று பரிவி னொடுகோ சலைபுகல... பால்குடிப்பதற்கு வா, பூச்சூட்டலாம் வா என்றெல்லாம் அன்போடு கோசலை சொல்லிக் கூப்பிட,

வருமாயன் சிந்தை மகிழு மருகா ... வரும் மாயனான திருமால் மனம் மகிழும் மருகனே!

குறவரிள வஞ்சி மருவும் அழகா ... குறக்குலத்து இளங்கொடியான வள்ளியம்மையை அணைக்கும் அழகனே!

அமரர்சிறை சிந்த அசுரர் கிளை வேரொடுமடிய அடுதீரா ... தேவர்கள் சிறையிலிருந்து விடுபடும்படியும்; அசுரர்களுடைய கூட்டம் வேரோடு அழியும்படியும் போரிட்ட தீரனே!

திங்கள் அரவு நதிசூ டியபரமர் தந்த குமர... நிலவையும் பாம்பையும் கங்கை நதியையும் சடாமுடியில் தரித்த பரமர் தந்த குமரனே!

அலையே கரைபொருத செந்தி னகரில் இனிதே மருவிவளர் பெருமாளே.... கரையிலே அலைகள் மோதுகின்ற திருச்செந்தூரில் இனிதே வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

‘அப்பனே வா!  ரகுநாயகனே வா!  குழந்தாய் வா! மகனே இங்கு வா! என் கண்ணே வா! ஆருயிரே வா! அழகனே இங்கு வா! அரசே வா!  வந்து பால் அருந்து; பூச்சூட்டிக்கொள்’ என்றெல்லாம் கோசலை அன்புடன் அழைக்க வருகின்ற மாயனான திருமாலுடைய மருகனே!  குறக்குலத்து இளங்கொடியான வள்ளியை அணைக்கும் அழகனே!  தேவர்கள் சிறையிலிருந்து விடுபடும்படி அசுரர்களைக் கூட்டத்தோடு அழித்த தீரனே!  நிலவையும் பாம்பையும் கங்கை நதியையும் சடையிலே தரித்தவருடைய மகனே!  கரையிலே அலைகள் மோதுகின்ற கடல் சூழ்ந்த திருச்செந்தூரில் வீற்றிருக்கும் பெருமாளே!

வயிறு பருத்துத் தொந்தி விழுந்து சரியவும்; மயிர் வெளுக்கவும்; வரிசையான பற்கள் ஆடவும்; கூன் விழவும்; ஊன்றுகோலின்மேல் ஒருகை பற்றியபடி இருக்கவும்; பெண்கள் கேலிச் சிரிப்புடன் ‘யார் இந்தத் தொண்டுகிழவன்’ என்று பரிகசிக்கவும்; இருமலோசை கிண்கிண்னென, நான் வருவதற்கு முன்னாலேயே கேட்கவும்; கண்பார்வை மங்கிக் குருட்டுத்தன்மையை அடையவும்; காது கேட்கமுடியாமல் போகவும்; வந்திருக்கும் பிணிகளும் அவ்வப்போது வந்துபோகும் வைத்தியனும்; ‘என்ன சொத்து வைத்திருக்கிறாய், எத்தனை கடன் வைத்திருக்கிறாய்’ என்று நச்சரிக்கும் பிள்ளைகளும்; கதறியழுது தரையில் விழும் மனைவியும்; உயிரைப் பறிப்பதற்காக நின்று போராடும் யமதூதர்களும்; கட்டுப்படுத்தமுடியாமல் ஒழுகுகின்ற மலமுமாக உயிர் மங்கிக்கொண்டிருக்கும் வேளையில் நீ மயில்மேல் அமர்ந்தகோலத்தில் வந்தருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.