ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

பகுதி - 477

குளத்திலுள்ள கயல், கெண்டை மீன்களை

Updated On :11 பிப்ரவரி 2017, 6:30 pm

பதச் சேதம்

சொற் பொருள்

ஈளை சுரம் குளிர் வாதம் எனும் பல நோய்கள் வளைந்து அற இளையாதே

 

ஈளை: கோழை, கபம்; வாதம்: வாயு;

ஈடுபடும் சிறு கூடு புகுந்து இடு காடு பயின்று உயிர் இழவாதே

 

ஈடு: வலிமை; ஈடு படும்: வலிமை ழியும்;  சிறு கூடு: உடல்;

மூளை எலும்புகள் நாடி நரம்புகள் வேறு படும் தழல் முழுகாதே

 

வேறுபடும் தழல்: விரோதம் உள்ளதாகிய தீ;

மூலம் எனும் சிவ யோக பதம் தனில் வாழ்வு பெறும்படி மொழிவாயே

 

 

வாளை நெருங்கிய வாவியிலும் கயல் சேல்கள் மறிந்திட வலை பீறா

 

நெருங்கிய வாவி: அருகிலுள்ள குளம்; வலை பீறா: வலையைப் பீறிக் கொண்டு, கிழித்துக் கொண்டு;

வாகை துதைந்து அணி கேதகை மங்கிட மோதி வெகுண்டு இள மதி தோயும்

 

வாகை: வெற்றி; துதைந்து: புரண்டு--கொண்டாடி; அணி கேதகை: வரிசையான தாழைகள்;

பாளை நறும் கமழ் பூக வனம் தலை சாடி நெடும் கடல் கழி பாயும்

 

பூக வனம்: கமுகுத் தோப்பு—பாக்கு மரத் தோப்பு; கடல் கழி: கடலையடுத்த உப்பங்கழி;

பாகை வளம் பதி மேவி வளம் செறி தோகை விரும்பிய பெருமாளே.

 

பாகை வளம் பதி: பாகை என்னும் வளமான தலம்;

ஈளை சுரங்குளிர் வாத மெனும்பல நோய்கள் வளைந்தற இளையாதே... கபம், காய்ச்சல், குளிர்சுரம், வாயு என்று பலவிதமான நோய்களால் சூழப்பட்டு நான் மிகுதியாக மெலிவடையாமலும்;

ஈடுபடுஞ் சிறு கூடு புகுந்து இடுகாடு பயின்று உயிர் இழவாதே... வலிமையற்றுப் போய் வாடுகின்ற இந்த உடலாகிய கூட்டில் புகுந்துகொண்டு இடுகாடு---சுடுகாட்டை அடையும்படியாக உயிர் இழந்து போகாமலும்;

மூளை யெலும்புகள் நாடி நரம்புகள் வேறு படுந்தழல் முழுகாதே... மூளை, எலும்பு, நாடி, நரம்பு எல்லாமும் விரோதம் கொண்ட தீயில் முழுகி அழியாமலும்;

மூல மெனுஞ்சிவ யோக பதந்தனில் வாழ்வு பெறும்படி மொழிவாயே... மூலமாக விளங்குதான சிவயோகமாகிய பதவியை அடைந்து நான் வாழ்வுறும்படியாக உபதேசத்தை மொழிந்தருள வேண்டும். 

வாளை நெருங்கிய வாவியிலும் கயல் சேல்கள் மறிந்திட வலைபீறா... வாளை மீன்கள், தமக்கு அருகிலிருக்கின்ற குளங்களிலுள்ள கயல், கெண்டை மீன்களைத் துரத்தி, வலைகளைக் கிழித்துக் கொண்டு,

வாகை துதைந்து அணி கேதகை மங்கிட மோதி வெகுண்டு... தன் வெற்றியைக் கொண்டாடியபடி, (அருகிலே) வரிசையாக இருக்கும் தாழை (தாழம் பூ) மடல்கள் சிதையும்படியாக அவற்றின்மேலே மோதி வெகுள;

இள மதிதோயும் பாளை நறுங்கமழ் பூக வனம் தலைசாடி நெடுங்கடல் கழிபாயும்... பிறைச்சந்திரன் தோயும்படியாக உயர்ந்திருப்பதும்; பாளைகளைக் கொண்டதுமான பாக்கு மரத் தோப்பிலே, (மேற்படி கயல், கெண்டை மீன்களை மறித்து மோதி, கடலின் உப்பங்கழியிலே பாய்வதான,

பாகை வளம்பதி மேவி வளஞ்செறி தோகை விரும்பிய பெருமாளே.... வளம் நிறைந்த பாகை என்னும் தலத்திலே வீற்றிருப்பவனே!  வளமான தோகையை உடைய மயிலை—வள்ளியை—விரும்பிய பெருமாளே.

சுருக்க உரை

வாளை மீன், தனக்கு அருகிலிருக்கும் குளத்திலுள்ள கயல், கெண்டை மீன்களை விரட்டி அவற்றை ஓடச் செய்து, வலைகளைக் கிழித்துத் தாவி, வெற்றிக் களிப்பால் வரிசையாக இருக்கும் தாழை மடல்கள் சிதையும்படியாக அவற்றின் மேலே மோதி; பிறைச்சந்திரன் படியும்படியாக உயர்ந்திருக்கும் கமுகுத் தோப்பில் அந்த மரங்களின் உச்சியின்மேலே பாய்ந்து, அங்கிருந்து கடலின் உப்பங்கழிக்குப் பாய்கின்ற ‘பாகை’ என்னும் வளமான தலத்திலே வீற்றிருப்பவனே!  வள்ளியம்மையான மயிலை நேசிக்கின்ற பெருமாளே!

கபம், குளிர்ஜுரம், வாயு முதலான நோய்களால் பீடிக்கப்பட்ட இந்த உடல் வலுவிழந்துபோய் சுடுகாட்டை அடையும்படியாக வாட்டமடைந்து உயிரிழக்காமலும்; மூளை, எலும்பு, நரம்பு எல்லாவற்றையும் தீயானது விரோதம் கொண்டு சுட்டெரிக்காமலும் மூலப்பொருளான சிவயோக பதவியிலே நான் வாழ்வுபெறுமாறு உபதேசித்தருள்வாயாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.