ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பகுதி - 491

சிவபெருமானோடு காட்டிலே ஆடுபவளும்

Updated On :28 பிப்ரவரி 2017, 6:30 pm

பதச் சேதம்

சொற் பொருள்

அணி செவ்வியார் திரை சூழ் புவி தன(ம்) நிவ்வியே கரை ஏறிட அறிவில்லியாம் அடியேன் இடர் அது தீர

 

அணிசெவ்வியார்: அழகில் செம்மை வாய்ந்த பெண்கள்; திரைசூழ்புவி: கடல்சூழ்ந்த பூமி; தனம்: செல்வம்; நிவ்வியே: நீவியே, கடந்தே;

அருள் வல்லையோ நெடு நாள் இனம் மருள் இல்லிலே இடுமோ உனது அருள் இல்லையோ இனமானவை அறியேனே

 

அருள் வல்லையோ: வலிந்து அருள்தருவாயோ; நெடுநாள் இனம்: நீண்டகாலச் சொந்தமான; மருள் இல்லிலே: மயக்கம் தருவதாகிய பிறவியென்னும் வீட்டிலே; இடுமோ: விடுமோ; இனமானவை: ஏற்றவை;

குண வில் அதா மக மேரினை அணி செல்வி ஆய் அருணாசல குரு வல்ல மாதவமே பெறு குண சாத

 

குண வில்லதா: சீரான வில்லாக; மகமேரினை: மகா மேருவை; தரிசெல்வி: தரித்த செல்வி; ஆய்: தாய்; அருணாசல குரு: அண்ணாமலையாருக்குக் குரு; குண: நற்குண; சாத: ஜாத, பிறப்பு;

குடில் இல்லமே தரு நாள் எது மொழி நல்ல யோகவரே பணி குண வல்லவா சிவனே சிவ குரு நாதா

 

யோகவர்: யோகிகள்; பணி: வணங்கும்; சிவனே: அறுமுகச் சிவனே;

பணி கொள்ளி மா கண பூதம் ஒடு அமர் கள்ளி கானக நாடக பர மெல்லியார் பரமேசுரி தரு கோவே

 

பணிகொள்ளி: பாம்புகளை (ஆபரணமாகக்) கொண்டவள் (பணி: பாம்பு); கணபூதமொடு: பூதகணங்களோடு; அமர்: வீற்றிருக்கும்; கள்ளி: திருடி, உமை; கானக: காட்டில்; நாடக: நடனமாடும்; பர: மேலான; மெல்லியார்: மென்மை நிறைந்த;

படர் அல்லி மா மலர் பாணமது உடை வில்லி மா மதனார் அ(ன்)னை பரி செல்வியார் மருகா சுர முருகேசா

 

மாமதனார்: மன்மதனுடைய; அனை: அன்னையான இலக்குமி; பரிசெல்வியார்: பரிவுடைய செல்வமகள்; சுர: தேவர்களுடைய;

மணம் ஒல்லையாகி நகா கனதன வல்லி மோகனமோடு அமர் மகிழ் தில்லை மா நடம் ஆடினர் அருள் பாலா

 

மணம்: திருமணம்; ஒல்லை: விரைவில்; நகா: மலையுடைய (மகள்); கனதன: பருத்த கொங்கைகளையுடைய; மகிழ் தில்லை: விரும்புகின்ற சிதம்பரத்தில்; நடமாடினர்: நடராசர்;

மரு மல்லி மா வனம் நீடிய பொழில் மெல்லி கா வனம் மாடு அமை வடமுல்லை வாயிலின் மேவிய பெருமாளே.

 

மருமல்லி: மணமுள்ள மல்லிகை; மாவனம்: பெருங்காடு; நீடிய பொழில்: நீண்ட சோலைகள்; மாடு அமை: பக்கத்தில் அமைந்திருக்கும்;

அணிசெவ்வியார் திரை சூழ்புவி தன நிவ்வியே கரை யேறிட... செம்மையான அழகையுடைய பெண்கள்; கடல்சூழ்ந்த பூமி; செல்வம்—மண், பெண், பொன்—என்ற மூவாசைகளைக் கடந்து கரையேறுவதற்கான,

அறிவில்லியாம் அடியேன் இடரதுதீர அருள்வல்லையோ... அறிவில்லாதவனாகிய அடியேனுடைய துன்பங்கள் தீர்வதற்கான அருளை வலிந்து தருவாயோ (இல்லையெனில்), 

நெடு நாளினம் இருளில்லிலே யிடுமோ உனதருளில்லையோ இனமானவை யறியேனே.. நீண்ட காலமாக என்னைச் சூழ்ந்திருப்பதான பிறவி என்னும் இருப்பிடத்திலே கொண்டு விடப்படுவேனோ, எனக்கு எதுநேரும் என்பதனை அறியாமல் இருக்கிறேனே.

குணவில்லதா மக மேரினை அணிசெல்வியாய் அருணாசல குரு... தனக்கு உரிய வில்லா மகாமேரு மலையைத் தாங்கியவ அழகிய செல்வியாரான தாயு(டன் கூடிய); அருணாசலேஸ்வரருக்கு குருவாக இருப்பவனே!

(மேருவை சிவனார் தன் இடதுகரத்தால் எடுத்தார்.  அக்கரமோ தேவிக்கு உரியது.  எனவே அவளே மலையைத் தரித்தவளாயாகிறாள்.)

வல்ல மாதவ மேபெறு குணசாத குடிலில்லமே தரு நாளெது மொழி... வலியதும் பெரியதுமான தவநிலையை அடையும்படியான; நற்குணத்தோடு கூடிய பிறவியால் கிடைப்பதான உடல் என்னும் வீட்டை என்று எனக்குத் தரப் போகிறாய் என்று எனக்குச் சொல். 

நல்ல யோகவ ரேபணி குணவல்லவா சிவனேசிவ குருநாதா... நல்ல யோகிகள் பணிகின்ற குணசீலனே! (அறுமுகச்) சிவனே!  (ஐம்முகச்) சிவனாருக்குக் குருவானவவனே! 

பணிகொள்ளி மாகண பூதமொடமர்கள்ளி கானக நாடக பரமெல்லியார் பரமேசுரி தருகோவே... பாம்புகளை ஆபரணமாகப் பூண்டவளும்; பூதகணங்களோடு வீற்றிருக்கும் கள்ளியும்; சுடுகாட்டிலே சிவனோடு நடமாடுபவளும்; மேலானவளும்; மென்மை நிறைந்தவளுமான பரமேஸ்வரியார் பெற்ற அரசே! 

படரல்லி மாமலர் பாணமதுடைவில்லி மாமதனாரனை பரிசெல்வியார் மருகா சுர முருகேசா... நீரிலே படர்வதான அல்லி, தாமரை, நீலோத்பலம் போன்ற சிறந்த மலர்களை பாணங்களாகக் கெண்ட வில்லியான மன்மதனுடைய அன்னையும்; பரிவுடைய செல்வியுமான இலக்குமியாருடைய மருகனே!  தேவர்களுடைய முருகேசனே! 

மணமொல்லையாகி நகாகனதனவல்லி மோகனமோடமர் மகிழ்தில்லை மாநட மாடினர் அருள்பாலா... விரைவாக மணமுடிக்கப்பட்டவளும்; இமவான் பெற்றெடுத்தவளும்; பருத்த கொங்கைகளை உடையவளுமான உமையம்மையான மோகனவல்லியோடு அமர்ந்து மகிழ்கின்றவரும்; தில்லையிலே நடமாடியவருமான சிவனார் அருளிய பாலனே! 

மருமல்லி மாவன நீடிய பொழில் மெல்லி காவன மாடமை வடமுல்லைவாயிலின் மேவிய பெருமாளே... நறுமணம் வீசும் மல்லிகையானது காடு போல வளர்ந்திருப்பதான நீண்ட சோலைகளும்; மென்மையான பூக்களின் தோட்டங்களும் பக்கங்களிலே சூழ்ந்திருப்பதான வடமுல்லைவாயிலில் வீற்றிருக்கின்ற பெருமாளே! 

சுருக்க உரை

பாம்புகளை ஆபரணங்களாகப் பூண்டவளும்; பூதகணங்களோடு அமர்ந்திருக்கும் கள்ளியும்; சிவபெருமானோடு காட்டிலே ஆடுபவளும்; மென்மை நிறைந்தளுமான பரமேச்வரியார் பெற்ற அரசே!  நீரிலே படர்கின்ற அல்லி, தாமரை, நீலோத்பலம் போன்ற சிறந்த மலர்களை பாணங்களாகக் கொண்ட மன்மதனுடைய தாயும்; பரிவு நிறைந்தவளுமான இலக்குமியின் மருகனே!  தேவர்களுடைய முருகேசனே!  விரைவாக மணமுடிக்கப்பட்டவளும்; இமவானுடைய மகளும்; பருத்த கொங்கைகளை உடையவளும்; மோகனவல்லியுமான உமையம்மையோடு சிதம்பரத்தில் நடனமாடியவர் அருளிய பாலனே!  நறுமணம் கமழும் மல்லிகைக் காடுகளும்; மென்மையான பூக்களும் நிறைத் சோலைகளும் நீர் நிலைகளும் சூழந்திருக்கின்ற வடமுல்லை வாயிலில் வீற்றிருக்கின்ற பெருமாளே! 

மண், பெண், பொன்னாசைகளைக் கடந்து கடையேறுவதற்குத் தேவையான அறிவற்றவனான அடியேனுடைய துயர் தீர்வதற்குண்டான திருவருளை வலியத் தந்தாண்டுகொள்வாயோ (அல்லது) அடியேன் நெடுங்காலமாகக் கிடப்பதான இருள் நிறைந்த பிறவியென்னும் வசிப்பிடத்திலே கொண்டுவிடப்படுவேனோ, எனக்கு முடிவாக விளையப்போவது எது என்பதை அறியேனே.  (பிறவிப் பிணியால் பற்றப்படாதபடி உன்னுடைய திருவருளை வலியத் தந்தாண்டுகொள்ள வேண்டும்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.