பதச் சேதம் | சொற் பொருள் |
பொன் கோவைக்கே
| கோவைக்கு: வரிசைக்கு; பொய் போகத்தை: பொய்யான சிற்றின்பத்தை; பகர்வார்: விலை பேசுவார்; |
பொய்க்கே மெய்க்கேபித்தாகி போகித்து ஏகைக்கு பொருள் தேடி
| பொய்க்கே: பொய்யுரைகளுக்கும்; மெய்க்கே: உடலுக்கும்; போகித்து: அனுபவித்து; ஏகைக்கு: செல்வதற்காக; |
தெற்கு ஓடி காசிக்கு ஓடிகீழ் திக்கு ஓடிபச்சிமமான
| தெற்கு ஓடி: தெற்கு திசைக்கு ஓடி; காசிக்கு ஓடி: (வடக்கே) காசிக்கு ஓடி; கீழ் திக்கு: கிழக்கே; பச்சிமம்: மேற்கு; |
திக்கு ஓடி பாணிக்கு ஓடிதீவுக்கு ஓடிகெட்டிடலாமோ
| பாணி: நாடு (என்பது ஒரு பொருள்); தீவுக்கு: தீவுகளுக்கு; |
தற்கோலி பாவிப்பார் நல்சீரை சார தற்பரம்ஆனாய்
| தற்கோலி: (கோலுதல்—தியானித்தல்) தன்னைக் கோலி—நான் யார் என்ற விசாரணையில் ஆழ்ந்து; பாவிப்பார்: பாவனையில் வைப்பார், சிந்தனையில் நிறுத்துவார்; நற்சீரை: நல்ல கதியை; சார: அடைய; தற்பரம்: பரம்பொருள்; |
தப்பா முப்பாலை தேடி தேசத்தார் நிற்கதகையோடே
| தப்பா: தவறுதல் இல்லாத; முப்பாலை: அறம், பொருள் இன்பமாகிய மூன்றையும்; தகையோடே: அருளோடே; |
முன் கான பேதைக்காகபோய் முன் பால்வெற்பில் கணி ஆனாய்
| முன்: முன்னர்; கானப் பேதை: காட்டில் இருந்த வள்ளி; முற்பால்: (அவளுக்கு) முன்னாலே; வெற்பில்: மலையில்; கணி: வேங்கை மரம்; |
முத்தா முத்தீ அத்தாசுத்தா முத்தா முத்திபெருமாளே.
|
|
பொன் கோவைக்கே பல் கோவைக்கே பொய்ப் போகத்தைப் பகர்வார் தம்... பொன்னின் வரிசைக்காகவும்; (மற்ற) பலவிதமான வரிசைகளுக்காகவும் பொய்யான சிற்றின்பத்தை விலைகூறி விற்பவர்களுடைய,
பொய்க்கே மெய்க்கே பித்தாகி போகித்து ஏகைக்கு பொருள் தேடி... பொய் மொழிகளாலும் உடலாலும் பித்தேறிப்போய்; (அந்த இன்பத்தை) அனுபவித்துச் செல்வதற்கான பொருளைத் தேடிக்கொண்டு,
தெற்கு ஓடி காசிக்கு ஓடி கீழ் திக்கு ஓடி பச்சிமமான திக்கு ஓடி... தெற்கேயும்; வடக்கே காசி வரையிலும்; கிழக்கிலும்; மேற்கிலும் ஓடி (பல ஊர்களுக்கு) ஓடித் திரிந்து;
பாணிக்கு ஓடி தீவுக்கு ஓடிக் கெட்டிடலாமோ... பல நாடுகளுக்கும்; பல தீவுகளுக்கும் (கப்பலேறிச்) சென்று வீணாக அழிந்து போகலாமோ? (அப்படிப் போகாமல்),
தற்கோலி பாவிப்பார் நல் சீரைச் சார தற்பரம் ஆனாய்... தன்னுள் தான் ஆழ்ந்து தியானித்து உன்னையே சிந்தையில் வைப்பவர்கள் நல்ல கதியை அடைவதற்கான பரம்பொருளாக ஆனவனே!
தப்பா முப்பாலைத் தேடி தேசத்தார் நிற்கத் தகையோடே... தவறாத அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று நெறிகளைத் தேடிவருகின்ற மக்கள் ஒருபுறமாக நிற்க; அருளோடு,
முன் கானப் பேதைக்காகப் போய் முன் பால் வெற்பில் கணி ஆனாய்... முன்னர் காட்டிலிருந்த வள்ளியைத் தேடிச்சென்று* அவள் முன்னாலே வேங்கை மரமாக நின்றவனே!
(அறம் பொருள் இன்பத்தைத் தேடிவருபவர் ஒருபக்கமாக நிற்கவும்; நான்காவதான வீட்டுப் பேற்றை நாடிய வள்ளியைத் தானே வலியச் சென்று மணந்துகொண்டவனே என்பது உட்பொருள்)
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே.. முத்தைப் போன்றவனே! (ஆகவனீயம், காருகபத்தியம், தட்சிணாக்கினி எனப்படும்) மூன்று தீயால் வளர்க்கப்படும் வேள்விகளின் தலைவனே! சுத்தனே! முக்தி நிலையில் (பற்றற்று) நிற்பவனே! முக்தியைத் தருகின்ற பெருமாளே!
சுருக்க உரை
தன்னுள் தான் ஆழ்ந்து (நான் யார் என்னும் விசாரணையை மேற்கொண்டு) தியானித்து உள்ளே உன்னையே நிறுத்துபவர்கள் மேலான கதியை அடையும்படியாகப் பரம்பொருளாக நிற்பவனே! எப்போதும் மாறாதவையான அறம், பொருள், இன்பங்களைத் தேடிவரும் மக்கள் ஒருபுறத்தே இருக்க; காட்டிலிருந்த வள்ளியை அருளோடு தேடிச் சென்று அவள் முன்னால் வேங்கை மரமாக நின்றவனே! முத்தைப் போன்றவனே! மூன்று தீக்களால் வளக்கப்படும் வேள்விகளின் தலைவனே! சுத்தனே! பற்றற்ற நிலையில் நிற்பவனே! முக்தியைத் தருகின்ற பெருமாளே!
பொன்னுக்காகவும் பலவிதமான வரிசைகளுக்காகவும் பொய்யான சிற்றின்பத்தை விலைபேசுபவர்களுக்குக் கொடுப்பதற்காகப் பொருள்வேண்டி, நான் நான்கு திசைகளிலும் ஓடி; பல தேசங்களுக்கும் தீவுகளுக்கும் ஓடி வீணே அழியலாமோ? (அவ்வாறு அழியாமல் தன்னை உணர்ந்து, உன்னை தியானித்து மேம்பட அருள வேண்டும்.)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தீக்காயமுற்ற பெண் உயிரிழப்பு

திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்! - டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு

சேலத்தில் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்

திருமயம் தொகுதியில் அடிப்படை வசதிகள் அனைத்தும் பூா்த்தி செய்யப்படும்! - அதிமுக வேட்பாளா் வைரமுத்து உறுதி
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


