ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பதச் சேதம்

சொற் பொருள்

அரு வரை எடுத்த வீரன் நெரி பட விரல்கள் ஊணும் அரனிடம் இருக்கும் ஆயி அருள்வோனே

 

அருவரை: அரிய மலை—கைலாயம்; எடுத்த வீரன்: இராவணன்; ஊணும்: ஊன்றும்; அரன் இடம் இருக்கும் ஆயி: அரனுடைய இடது பாகத்தில் இருப்பவளான தாய்;

அலை கடல் அடைத்த ராமன் மிக மன மகிழ்ச்சி கூரும் அணி மயில் நடத்தும் ஆசை மருகோனே

 

அணிமயில்: அழகிய மயில்; ஆசை: திசை, திசைகளில்;

பருதியின் ஒளி கண் வீறும் அறுமுக நிரைத்த தோள் பனிரு கர மிகுத்த பார முருகா நின்

 

பருதி: பரிதி, சூரியன்; நிரைத்த தோள்: வரிசையான தோள்; பார முருகா: உயர்ந்த முருகா;

பத மலர் உளத்தில் நாளு நினைவுறு கருத்தர் தாள்கள் பணியவும் எனக்கு ஞானம் அருள்வாயே

 

கருத்தர்: கருத்திலே உடையவர்கள், அடியார்கள்;

சுருதிகள் உரைத்த வேதன் உரை மொழி தனக்குள் ஆதி சொலு என உரைத்த ஞான குருநாதா

 

சுருதிகள்: மறைகள்; ‘மொழி தனக்குள் ஆதி’: வேதத்தின் முதலாவதான பிரணவம் (சுருதியில் முற்பட்டது கற்பித்து இருவரும்—முத்தைத்தரு திருப்புகழ்);

சுரர் பதி தழைத்து வாழ அமர் சிறை அனைத்து மீள துணி பட அரக்கர் மாள விடும் வேலா

 

சுரர்பதி: தேவர் தலைவன், இந்திரன்; அமர்சிறை: இருப்பதான சிறை; துணிபட: வெட்டுப்பட;

மரு மலர் மணக்கும் வாச நிறை தரு தருக்கள் சூழும் வயல் புடை கிடக்கு நீல மலர் வாவி

 

மருமலர்: நறுமணமுள்ள பூக்கள்; வாச நிறைதரு தருக்கள்: நறுமணம் நிறைந்துள்ள மரங்கள்; புடைகிடக்கும்: அருகிலே இருக்கும்; வாவி: நீர்நிலை;

வளம் உறு தடத்தினோடு சரஸ்வதி நதி கண் வீறு வயிரவி வனத்தில் மேவு பெருமாளே.

 

நதிக்கண்: நதியில், நதிக்கு அருகில்; வீறு: விளங்குகின்ற;

அருவரை யெடுத்த வீரன் நெரிபட விரற்கள் ஊணும்... அரிய கயிலாய மலையைப் பெயர்த்தெடுத்த வீரனான ராவணன் நெரிபடும்படியாகத் தம் பாதத்து விரல்களை ஊன்றிய,

அரனிட மிருக்கு மாயி யருள்வோனே... சிவபெருமானுடைய இடது பாகத்திலே இருக்கின்ற தாயான உமையம்மை ஈன்றருளியவனே!

அலைகட லடைத்த ராமன் மிகமன மகிழ்ச்சி கூரும்... அலைகள் நிறைந்த கடலை சேது கட்டி அடைத்த ராமன் மனத்திலே மகிழ்ச்சியடையும்,

அணிமயில் நடத்தும் ஆசை மருகோனே... அழகிய மயில் வாகனத்தை எல்லாத் திசைகளிலும் செலுத்துகிற மருகனே!

பருதியி னொளிக்கண் வீறும் அறுமுக நிரைத்த தோள்பனிருகர... சூரியனுடைய ஒளியைத் தம்மகத்தே கொண்டிருக்கின்ற ஆறு முகங்களையும்; வரிசையான தோள்களையும்; பன்னிரண்டு கரங்களையும் உடைய,

மிகுத்த பார முருகா... மிகவும் சிறப்பு வாய்ந்த முருகனே!

நின்பதமல ருளத்தி னாளு நினைவுறு கருத்தர் தாள்கள் பணியவும்... உன் பாதத் தாமரைகளை உள்ளத்தில் அனுதினமும் நினைப்பவர்களும் கருத்தை உடையவர்களுமான அடியார்களுடைய பாதங்களில் பணிவதான,

எனக்கு ஞானம் அருள்வாயே... ஞானத்தை எனக்குத் தந்தருள வேண்டும்.

சுருதிகளுரைத்த வேதன் உரைமொழி தனக்குள் ஆதி சொலுவென வுரைத்த ஞானகுருநாதா... வேதங்களை ஓதுபவனான பிரமன் சொல்கின்றனவற்றுள் முதற்பொருளான (ஓம் என்னும்) பிரணவத்தின் பொருளைச் சொல் என்று கேட்ட சிவனாருக்கு அதை உரைத்த ஞானகுரு நாதனே!

சுரர்பதி தழைத்து வாழ அமர்சிறை யனைத்து மீள... தேவர்களின் தலைவனான இந்திரன் செழித்து வாழும்படியாகவும்; இருந்த சிறையிலிருந்து அனைத்து தேவர்களும் மீளும்படியாகவும்;

துணிபட அரக்கர் மாள விடும்வேலா... அரக்கர்கள் வெட்டுண்டு இறந்துபடும்படியாகவும் வேலை வீசியவனே!

மருமலர் மணக்கும் வாச நிறைதரு  தருக்கள் சூழும்... மணம் மிகுந்த மலர்களிந் நறுமணத்தால் நிறைந்திருக்கின்ற மரங்கள் சூழ்ந்திருக்கின்ற,

வயல்புடை கிடக்கு நீல மலர்வாவி வளமுறு தடத்தினோடு... வயல்களில் கிடக்கின்ற நீலோத்பல மலர்கள் மலர்ந்துள்ள நீர்நிலைகள், கரைகளோடு,

சரஸ்வதி நதிக்கண் வீறு வயிரவி வனத்தில் மேவு பெருமாளே... சரஸ்வதி ஆற்றிலே விளங்குவதான வயிரவனத்திலே வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

வேதங்களை ஓதுபவனான பிரமன் உரைக்கின்ற மொழிகளில் முதன்மையானதான பிரணவத்தின் பொருளைச் சொல் என்று கேட்ட இறையனாருக்கு அப்பொருளைச் சொன்ன ஞான குருநாதனே!  தேவர்களுடைய தலைவனான இந்திரன் செழித்து வாழும்படியாகவும்; சிறையிலிருந்த அனைத்துத் தேவர்களும் மீளும்படியாகவும்; அரக்கர்கள் வெட்டுண்டு வீழும்படியாகவும் வேலை எறிந்தவனே!  நறுமணம் கமழும் மலர்கள் நிறைந்துள்ள மரங்கள் சூழ்ந்துள்ள வயல்களின் அருகிலே உள்ள, நீலோத்பலம் மலர்ந்த நீர்நிலைகளைக் கொண்ட கரையையுடைய சரஸ்வதி நதியில் இருப்பதான வயிரவிவனத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே! 

அரியதான கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க முயன்ற இராவணம் நெரிபடும்படியாகத் தன் பாதத்தின் விரல்களை ஊன்றியவரான சிவனாரின் இடது பக்கத்திலிருக்கும் தாயான உமையாள் அருளியவனே!  அலைவீசும் கடலை சேதுகட்டி அடைத்தவனான இராமன் மனமகிழ்ச்சி கொள்ளும் மருகனே!  அழகிய மயிலை எல்லாத் திசைகளிலும் செலுத்துபவனே!  சூரியனுடைய ஒளியை உடையதாகிய ஆறுமுகங்களும்; வரிசையான பன்னிரு தோள்களும் பன்னிரு கரங்களும் கொண்ட பெருமைவாய்ந்த முருகனே!  உன்னுடைய திருவடித் தாமரையை உள்ளத்திலே ஆழப் பதித்திருக்கிற அடியார்களுடைய பாதங்களைப் பணிகின்ற ஞானத்தை அடியேனுக்குத் தந்தருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.