ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பகுதி - 501

தேவர்கள் வாழ்வுபெறுகின்ற சீகாழி

Updated On :10 மார்ச் 2017, 6:30 pm

பதச் சேதம்

சொற் பொருள்

கும்பகோணமோடு ஆரூர் சிதம்பரம் உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு கொன்றை வேணியர் மாயூரம் அம்பெறு சிவகாசி

 

கொன்றை வேணியர்: கொன்றையை சடையில் அணிந்தவர் (வேணி: சடாமுடி); அம்பெறு: அழகு அல்லது நீர் நிறைந்த;

கொந்து உலாவிய ராமேசுரம் தனி வந்து பூஜை செய் நால் வேத தந்திரர் கும்பு கூடிய வேளூர் பரங்கிரி தனில் வாழ்வே

 

கொந்து: கொத்து, மக்கள் கூட்டம்; தனிவந்து: ஒப்பற்ற நிலையில்(உள்ளோர்) வந்து; வேத தந்திரர்: வேதங்களில் வல்லவர்கள்; கும்பு: கும்பல், கூட்டம்; வேளூர்: புள்ளிருக்கு வேளூர், வைத்தீசுரன் கோவில்; பரங்கிரி: திருப்பரங்குன்றம்;

செம்புகேசுரம் ஆடானை இன்புறு செந்தில் ஏடகம் வாழ் சோலையங்கிரி தென்றல் மா கிரி நாடாள வந்தவ செகநாதம்

 

செம்புகேசுரம்: ஜம்புகேஸ்வரம் (திருவானைக்கா); ஆடானை: திருவாடானை; ஏடகம்: திருவேடகம்; சோலையங்கிரி: பழமுதிர்ச்சோலை; தென்றல் மா கிரி: பொதியமலை; செகநாதம்: பூரி ஜெகநாதம்;

செம் சொல் ஏரகம் மா ஆவினன்குடி குன்று தோறுடன் மூதூர் விரிஞ்சை நல் செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில் வரு தேவே

 

ஏரகம்: திருவேரகம், சுவாமிமலை; விரிஞ்சை: திருவிரிஞ்சை, விரிஞ்சிபுரம்; சோணாடு வஞ்சி: சோழ நாட்டுக் கருவூர்;

கம்பை மா அடி மீது ஏய சுந்தர கம்பு உலாவிய காவேரி சங்கமுகம் அம் சிரா மலை வாழ்தேவ தந்திர வயலூரா

 

கம்பை: கம்பா நதி (ஓடும்) காஞ்சி; மாவடி: மாமரத்தின் அடியில்;  ஏய: பொருந்திய; கம்பு: சங்கு; காவேரி சங்கமுகம்: காவேரி சங்கமம் ஆகும் காவிரிப்பூம் பட்டினம்; சிராமலை: திருச்சிராப்பள்ளி; தேவதந்திர: தேவசேனாபதியே;

கந்தம் மேவிய போரூர் நடம் புரி தென் சிவாயமும் மேயாய்  அகம் படு மணி மார்பா கண்டியூர் வரு சாமீ கடம்பு அணி மணி மார்பா

 

கந்தம்: நறுமணம்; சிவாயம்: திருவாட்போக்கி; மேயாய்: மேவியவனே, விளங்குபவனே; அகம்படு: அகத்தைப் படுத்தும், வீழ்த்தும், பாவத்தைப் போக்கும்; கண்டியூர்: திருக்கண்டியூர்; கடம்பு: கடப்ப மாலை;

எம்பிரானொடு வாதாடு மங்கையர் உம்பர் வாணி பொன் நீள் மால் சவுந்தரி எந்த நாள் தொறும் ஏர்பு ஆக நின்று உறு துதி ஓதும்

 

எம்பிரானொடு: சிவபெருமானோடு; வாதாடு மங்கையர்: காளியும் அவர் தோழியரும்; உம்பர்: மேலுலகு; வாணி: சரஸ்வதி; பொன் நீள்மால்: அழகிய திருமாலுக்கு உரிய; சவுந்தரி: அழகி, இலக்குமி; ஏர்பு ஆக: (உள்ள) எழுச்சியோடு;

இந்திராணி தன் மாதோடு நன் குற மங்கை மானையும் மாலாய் மணந்து உலகு எங்கும் மேவிய தேவாலயம் தோறு(ம்) பெருமாளே.

 

இந்திராணிதன் மாது: இந்திராணியின் மகளான தேவானை; மாலாய்: விரும்பி;

கும்ப கோணமொ டாரூர் சிதம்பரம் உம்பர் வாழ்வுறு சீகாழி... கும்பகோணத்தோடு திருவாரூர், சிதம்பரம், தேவர்கள் வாழ்வுறுவதான சீகாழி;

நின்றிடு கொன்றை வேணியர் மாயூரம் அம்பெறு சிவகாசி கொந்து உலாவிய ராமேசுரம்... கொன்றை மலரை நிலையாகக் கொண்ட சடாபாரம் தாங்கிய சிவனாருடைய மாயூரம்; அழகு நிறைந்த சிவகாசி; பக்தர் கூட்டங்கள் உலாவுகின்ற ராமேஸ்வரம்;

தனி வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர் கும்பு கூடிய வேளூர் பரங்கிரி தனில்வாழ்வே... ஒப்பற்ற நிலையில் நான்கு வேதங்களிலும் வல்லவர்களான மறையவர்கள் வந்து பூசிக்கின்ற, மக்கள் கூட்டம் நிறைந்த வேளூர்—வைத்தீஸ்வரன் கோவில்; திருப்பரங்குன்றம் ஆகிய தலங்களில் வீற்றிருக்கின்ற செல்வமே!

செம்பு கேசுரம் ஆடானை இன்புறு செந்தில் ஏடகம்... ஜம்புகேஸ்வரம் எனப்படும் திருவானைக்கா; திருவாடானை; நீ உவந்ததான திருச்செந்தில்; திருவேடகம்;

வாழ்சோலை யங்கிரி தென்றன் மாகிரி நாடாள வந்தவ செகநாத... நீ வீற்றிருக்கின்ற பழமுதிர்ச் சோலை மலை; தென்றலுக்குப் பிறப்பிடமான பொதியைப் பெருங்கிரி ஆகிய தலங்களையெல்லாம் ஆள்வதற்கு வந்தவனே!  ஜகந்நாதம் என்னும் பூரியில் ஜகன்னாதனாகக் காட்சி* தருபவனே!

(பூரியிலுள்ள ஜகந்நாதர், அருணகிரியாருக்கு முருகனாகவே காட்சிதந்தார் போலும் என்பது உரையாசிரியர் குகத்திரு செங்கல்வராய பிள்ளையவர்களின் குறிப்பு)

செஞ்சொல் ஏரக மாவாவினன்குடி குன்று தோறுடன் மூதூர் விரிஞ்சை... செம்மையான உபதேசத்தைத் தந்தைக்குச் சொன்னதான சுவாமிமலை; திருவாவினன்குடியான பழநி; தொன்மையான பதியாகிய திருவிரிஞ்சை;

நல் செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில் வருதேவே... சிவந்த பொன்னிறத்தோடு சோழநாட்டுத் தலைநகரான வஞ்சி எனப்படும் கருவூர் ஆகிய தலங்களில் வீற்றிருக்கும் தெய்வமே!

கம்பை மாவடி மீதேய சுந்தர கம்பு உலாவிய காவேரி சங்கமுகம்... கம்பா நதியின் கரையிலே உள்ளதான காஞ்சியில் மாமரத்தின் அடியில் வீற்றிருப்பவனே!  சங்குப் பூச்சிகள் நிறைந்த காவேரி (கடலோடு) சங்கமிக்கிற காவிரிப் பூம்பட்டினம்;

சிராமலை வாழ்தேவ தந்திர வயலூரா... திருச்சிராப்பள்ளி ஆகிய தலங்களில் வீற்றிருக்கின்ற தேவசேனாபதியே!  வயலூரை உடையவனே!

கந்த மேவிய போரூர் நடம்புரி தென்சிவாயமு மேயாய்... நறுமணம் கமழ்கின்ற திருப்போரூர்; நீ நடனம் செய்தருளிய சிவாயம் எனப்படும் திருவாட்போக்கி ஆகிய தலங்களில் வீற்றிருப்பவனே!

அகம்படு கண்டி யூர்வரு சாமீ டம்பணி மணிமார்பா... பாவங்களைத் தொலைக்கின்ற திருக்கண்டியூரி எழுந்தருளியுள்ள ஸ்வாமியே!  கடப்ப மலர்மாலையை அணிந்திருக்கின்ற அழகிய மார்பனே! 

எம்பிரானொடு வாதாடு மங்கையர் உம்பர் வாணி பொன் நீள்மால் சவுந்தரி... எம்பிரானாகிய சிவபெருமானோடு போட்டியிட்டுக்கொண்டு நடனமாடிய காளியும் அவள் தோழிகளும்; தேவலோகத்து வாணியும்; திருமாலுக்கு உரிய அழகியான இலக்குமியுமாகிய அனைவரும்,

எந்த நாள்தொறும் ஏர்பாக நின்று உறு துதியோதும் இந்தி ராணிதன் மாதோடு...  என்றென்றும் மனவெழுச்சியோடு துதிமொழிகளைக் கூறிப் போற்றுபவளும்; இந்திராணி—இந்திரன் மனைவியான சசி—யின் மகளான தேவானையையும்;

நன்குற மங்கை மானையு மாலாய்மணந்து உலகெங்கு மேவிய தேவாலயந்தொறு பெருமாளே... குறப் பெண்ணான வள்ளியாகிய மானையும் நேசத்தோடு வந்து திருமணம் செய்துகொண்டு உலகெங்கிலுமுள்ள எல்லா தேவாலயங்களிலும் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

கும்பகோணம்; திருவாரூர்; சிதம்பரம்; தேவர்கள் வாழ்வுபெறுகின்ற சீகாழி; கொன்றை மலரைத் தன் சடாமுடியிலே நிலையாகச் சூடிய சிவபிரானுக்குரிய மாயூரம்; நீர்வளம் நிறைந்த சிவகாசி; பக்தர் கூட்டங்கள் நிறைந்த ராமேஸ்வரம்; நான்கு வேதங்களிலும் வல்லவர்கள் ஒப்பற்ற நிலையில் வந்து பூசிக்கின்ற புள்ளிருக்குவேளூர் எனப்படும் வைத்தீஸ்வரன் கோவில்; திருப்பரங்குன்றம்; திருவானைக்கா; திருவாடானை; நீ உகந்ததான திருச்செந்தில்; திருவேடகம்; பழமுதிர்ச்சோலை; தென்றலுக்குப் பிறப்பிடமான பொதியை; நீ ஜகன்னாதனாகவே காட்சிதரும் பூரி; செம்மையான உபதேசத்தைச் சிவனாருக்கு அருளிய சுவாமிமலை; திருவாவினன்குடி; குன்றுதோறாடல்; பழம்பதியான திருவிரிஞ்சை; செம்பொன் மேனியனாக நீ காட்சிதரும் சோழர் தலைநகரா கருவூர்; கம்பா நதிக்கரையிலுள்ள காஞ்சியின் மாமரத்தடி; காவேரி கடலோடு சங்கமிகும் சங்குப்பூச்சிகள் நிறைந்த காவிரிப் பூம்பட்டினம்; திருச்சிராப்பள்ளி; தேவர்களுடைய சேனாபதியாக விளங்கும் நீ உறையும் வயலூர்; நறுமணம் கமழ்கின்ற திருப்போரூர்; நீ நடனமாடியருளிய திருவாட்போக்கி; பாவங்களைப் போக்குகின்ற திருக்கண்டியூர்

ஆகிய தலங்களில் எழுந்தருளியிருப்பவனே!  கடப்பமாலையை அணிந்திருக்கின்ற அழகிய மார்பனே!  சிவபெருமானோடு போட்டிபோட்டுக் கொண்டு நடனமாடிய காளியும்; அவள் தோழிகளும்; வாணியும்; திருமாலுக்குரிய இலக்குமியும் என்றென்றும் உள்ளத்தில் எழுச்சியோடு போற்றுபவளும்; இந்திராணி பெற்றவளுமான தேவானையையும்; குறமானாகிய வள்ளியையும் விருப்பத்தோடு மணமுடித்து உலகிலுள்ள எல்லா தேவாலயங்களிலும் எழுந்திருளியிருக்கின்ற பெருமாளே!

(இப்பாடல் முழுக்கவே துதி என்பதால் வேண்டுதல், கோரிக்கை என்று எதுவுமில்லை.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.