பதச் சேதம் | சொற் பொருள் |
எத்தனை கோடி கோடி விட்டு உடல் ஓடி ஆடி எத்தனை கோடி போனது அளவு ஏதோ
| கோடிகோடி விட்டு: கோடானு கோடியான உடல்களை விட்டு; |
இப்படி மோக போகம் இப்படி ஆகி ஆகி இப்படி ஆவது ஏது இனி மேல்(ஓ)
| இனிமேலோ என்ற சீரை இனிமேல், ஓ என்று பிரிக்கிறோம். இந்த ‘ஓ’வை இதைத்தொடரும் ‘சித்திடில்’ என்பதோடு கூட்டினால், ஓசித்திடில். அதாவது யோசித்திடில்; |
சித்திடில் சீசி சீ சி குத்திரமாய மாயை சிக்கினில் ஆயும் மாயும் அடியேனை
| குத்திரம்: வஞ்சகம், இழிவு (இங்கே இழிவு); குத்திரமாய: குத்திரம் ஆகிய, இழிவாகிய; சிக்கினிலாயும்: சிக்கினில் ஆகியும், அகப்பட்டும்; |
சித்தினில் ஆடலோடு முத்தமிழ் வாணர் ஓது சித்திர ஞான பாதம் அருள்வாயே
| சித்தினில்: அறிவு நிலையில்; முத்தமிழ் வாணர்: முத்தமிழ்ப் புலவர்கள்; சித்திர: அழகிய; |
நித்தமும் ஓதுவார்கள் சித்தமே வீடு அதாக நிர்த்தம் அது ஆடும் ஆறு முகவோனே
| வீடதாக: குடியிருக்கும் இடமாக; நிர்த்தமது ஆடும்: நடனம் புரிகின்ற; ஆறு |
நிட்கள ரூபர் பாதி பச்சு உருவான மூணு நெட்டிலை சூல பாணி அருள் பாலா
| நிட்கள: அருவமும்; ரூபர்: உருவமும் (ஆனவர்); பாதி பச்சு: உடலில் பாதியைப் பச்சை நிறமாகக் கொண்டவர்; மூணு நெட்டிலை: மூன்று நீண்ட இலைகளைக் கொண்ட (மூவிலை வேலான); சூலபாணி: திரிசூலத்தைக் கையில் ஏந்திய சிவனார்; |
பை தலை நீடும் ஆயிரத்தலை மீது பீறும் பத்திர பாத நீல மயில் வீரா
| பைத்தலை: படங்கொண்ட தலைகள்; பீறும்: கீறும், கிழிக்கும்; பத்திர பாதம்: இலையைப் போன்ற பாதம் (நொச்சி இலையைப் போன்ற பாதம்); |
பச்சு இள பூக பாளை செய் கயல் தாவு வேளூர் பற்றிய மூவர் தேவர் பெருமாளே.
| பச்சிள: பசிய, இளைய; பூக(ம்): கமுகு, பாக்கு; செய்: வயல்; மூவர்: அரி, அயன், அரன் மூவர்; |
எத்தனை கோடி கோடி விட்டுடல் ஓடி ஆடி எத்தனை கோடி போனது அளவேதோ... எத்தனைக் கோடிக்கணக்கான உடல்களை விட்டு; எத்தனை கோடிக்கணக்கான உடல்களை எடுத்து; அது ஓடியும் ஆடியும் திரிந்து, எத்தனைக் கோடிப் பிறப்புகள் கழிந்தனவோ? இதற்கொரு அளவும் உண்டோ?
இப்படி மோக போகம் இப்படி யாகி யாகி இப்படி யாவ தேது இனிமேல் யோசித்திடில்... இதுபோல மோகமும் போகமுமாகக் கலந்து; இப்படிப் பிறப்பும் இறப்பும் மீண்டும் பிறப்புமாகத் தொடர்வதால் என்னதான் பயன்? இதைப்பற்றி யோசித்தால்,
சீசி சீசி குத்திர மாய மாயை சிக்கினில் ஆயும் மாயும் அடியேனை... சீசீ சீசீ இந்த வாழ்க்கை மாயமானது. இந்தச் சிக்கலில் அகப்பட்டுக்கொண்டு மாய்கின்ற அடியேனுக்கு,
சித்தினில் ஆடலோடு முத்தமிழ் வாணர் ஓது சித்திர ஞான பாதம் அருள்வாயே... அறிவு என்ற நிலையில் நிறுத்தி இயல், இசை, நாடகத் தமிழில் வல்லவர்களான புலவர்கள் எடுத்துச்சொல்வதான உன்னுடைய அழகியதும் ஞானவடிவானதுமான பாதங்களைத் தந்தருள வேண்டும்.
நித்தமும் ஓதுவார்கள் சித்தமெ வீடதாக நிர்த்தமது ஆடும் ஆறுமுகவோனே... எப்போதும் உன்னைத் துதிப்பவர்களுடைய உள்ளங்களையே நீ குடியிருக்கும் வீடாகக் கொண்டு, அவற்றில் நடனமாடுபவனான ஆறுமுகனே!
நிட்கள ரூபர் பாதி பச்சுருவான மூணு நெட்டிலை சூல பாணி அருள்பாலா... உருவமாகவும் அருவமாகவும் இருப்பவரும்; பாதி உடலைப் பச்சை நிறமாகக் (இடதுபுறத்திலுள்ள சக்தி பச்சை நிறத்தவள்) கொண்டவரும்; நீண்ட மூன்று முனைகளைக் கொண்ட திரிசூலத்தைக் கையில் ஏந்தியவருமான சிவனாருடைய பாலனே!
பைத்தலை நீடும் ஆயிரத்தலை மீது பீறு பத்திர பாத நீல மயில் வீரா... படங்கொண்ட ஆயிரந்தலைகளைக் கொண்ட ஆதிசேஷனைக் கீறிக்கிழிப்பதும்; நொச்சி இலை* வடிவிலானதுமான பாதத்தை உடையதுமான நீலமயிலின் மேலே வருகின்ற வீரனே!
(* “ஆடும் பறவைநின் அடிகள் இரண்டும்
ஈர நொச்சியின் இலைகளே யாகும்!” என்பது கவிஞர் சுரதா மயிலைப் பற்றி இயற்றிய கவிதையில் வருவது. மயிலின் பாதத்துக்கு நொச்சியிலையை இவரும் உவமித்திருக்கிறார்)
பச்சிள பூக பாளை செய்க்கயல் தாவு வேளூர் பற்றிய மூவர் தேவர் பெருமாளே... பசியதும் இளையதுமான பாக்கு மரங்களின் பாளைகளின் மேலே, வயலிலிருக்கின்ற மீன்கள் தாவுகின்ற புள்ளிருக்குவேளூர் என்னும் வைத்தீசுரன் கோவிலில், மும்மூர்த்திகளும் தேவர்களும் போற்றுமாறு வீற்றிருக்கின்ற பெருமாளே!
சுருக்க உரை
எப்போதும் உன்னையே நினைத்துப் போற்றும் பக்தர்களுடைய உள்ளத்தையே நீ குடியிருக்கும் இடமாகக் கொண்டு அங்கேயே நடனம்புரிகின்ற ஆறுமுகனே! அருவமும் உருவமுமாக ஆனவரும்; இடது பாகத்தைப் பச்சை நிறமாகக் கொண்டவரும்; நீண்ட கூர்முனைகளைக் கொண்ட மூவிலை வேலான திரிசூலத்தைக் கையிலே ஏந்தபவருமான சிவனார் அருளிய பாலனே! ஆதிசேடனுடைய படங்கொண்ட ஆயிரம் தலைகளையும் கீறிக்கிழிப்பதும்; நொச்சி இலையைப் போல வடிவம் கொண்டதுமான நீல மயிலை வாகனமாகக் கொண்டவனே! பசிய, இளைய பாக்கு மரங்களின் பாளைகளின் மேலே வயல்களிலுள்ள கயல்மீன்கள் பாய்வதான புள்ளிருக்கு வேளூர் எனப்படும் வைத்தீசுரன் கோவிலில் மும்மூர்த்திகளும் தேவர்களும் போற்றுமாறு வீற்றிருக்கும் பெருமாளே!
இதுவரையிலே எத்தனையெத்தனைக் கோடிக்கணக்கான உடல்களை எடுத்திருப்பேனோ; எத்தையெத்தனைக் கோடிக்கணக்கான உடல்களை விட்டிருப்பேனோ; எத்தனையெத்தனைப் பிறவிகளை எடுத்திருப்பேனோ; அந்தப் பிறவிகளிலெல்லாம் எத்தனை ஆட்டங்கள் ஆடியிருப்பேனோ. மோகமும் போகமும் கலந்து; பிறந்து பிறந்து இறக்கும் இந்த நிலையிலே நான் கிடந்துழல்வது ஏன் என்று யோசித்தால் இழிவானதும் மாயமானதுமான இந்த வாழ்க்கையின் சிக்கலிலே அகப்பட்டுக்கொண்டு மாய்கின்ற அடியேனை,
அறிவின்பால் செலுத்தி; அதிலேயே நிறுத்தி; முத்தமிழ் வல்லவரான புலவர்கள் எடுத்துச் சொல்வதான உன்னுடைய அழகியதும் ஞானமயமானதுமான திருவடிகளைத் தந்தருள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

