/

பகுதி - 685

உயர்வும் தகுதியும் உள்ள மனத்தை

News image
Updated On :5 நவம்பர் 2017, 6:30 pm

பதச் சேதம்

சொற் பொருள்

மரு மல்லி ஆர் குழலின் மட மாதர்

 

மருமல்லி: மணம் மிக்க மல்லி; ஆர்குழல்: நிறைந்த கூந்தல்; மடமாதர்: இளம் பெண்கள்;

மருள் உள்ளி நாய் அடியன் அலையாமல்

 

மருள்: மயக்கம்; உள்ளி: நினைத்து,

இரு நல்லவாகும் உனது அடி பேண

 

இரு நல்லவாகும்: நல்ல இரண்டாகும் (உனது அடி);

இன வல்லமான மனது அருளாயோ

 

இன வல்லமான: உயர்ந்ததும் தக்கதுமான;

கரு நெலி மேனியர் அரி மருகோனே

 

கருநெலி: கரு நெல்லிக்கனி;

கன வள்ளியார் கணவ முருகேசா

 

கனவள்ளி: பெருமை, சிறப்பு மிக்க வள்ளி;

திருவல்லிதாயம் அதில் உறைவோனே

 

 

திகழ் வல்ல மாதவர்கள் பெருமாளே.

 

 

மருமல்லி யார்குழலின் மடமாதர்... மணம் கமழும் மல்லிகை மலர் நிறைந்திருக்கும் கூந்தலையுடைய இளம்பெண்களின்மேல்,

மருளுள்ளி நாயடியன்அலையாமல்... மயக்கம் ஏற்பட்டு நாயைப்போன்றவனான அடியேன் அலைந்து திரியாமல்,

இரு நல்லவாகும் உனதடிபேண... நல்லவையான உனத இரண்டு திருவடிகளையும் போற்றுகின்ற,

இனவல்ல மான மனது அருளாயோ... உயர்வும் தகுதியும் உள்ள மனத்தை அருள மாட்டாயோ (அருளவேண்டும்.)

கருநெல்லி மேனி அரி மருகோனே... கருநெல்லிக் கனியைப் போன்ற பச்சையும் கருமையும் கலந்த மேனியையுடைய திருமாலின் மருகா!

கனவள்ளியார்கணவ முருகேசா... சிறப்பு மிக்க வள்ளிதேவியின் மணாளா, முருகேசா!

திருவல்லிதாயம் அதில் உறைவோனே... திருவல்லிதாயத்தில் வீற்றிருப்பவனே!

திகழ்வல்ல மாதவர்கள் பெருமாளே.... விளங்கித் திகழ்கின்ற பெரிய தவமுடையயவர்கள் துதிக்கின்ற பெருமாளே!


சுருக்க உரை:

கருநெல்லியைப் போல பச்சையும் கருமையும் கலந்த மேனியனாகிய திருமாலின் மருகா! பெருமைமிக்க வள்ளியம்மையாரின் மணாளா!  திருவல்லிதாயத்தில் வீற்றிருப்பவனே!  சிறப்புமிக்க தவமுனிவர்கள் போற்றுகின்ற பெருமாளே!

மணம் மிகுந்த மல்லிகை நிறைந்த கூந்தலையுடைய இளம்பெண்களின்மேல் கொண்ட மயக்கத்தால் நாயை ஒத்த அடியேன் அலைந்து திரியாதபடி, மிக நல்லவையான உனது இரண்டு திருவடிகளையும் போற்றி நிற்பதற்கான உயர்வும் தகுதியும் உள்ள மனத்தை எனக்கு அளித்தருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.