பதச் சேதம் | சொற் பொருள் |
ஆனை வரி கோடு இள நீர் பார முலை சார் அசை பட்டு ஆடை மறைத்து ஆடும் மலர் குழலார்கள்
| கோடு: தந்தம்; இளநிர்: இளநீர் (குறுக்கல் விகாரம்); சாரசை: சார்ந்து அசைகின்ற; |
ஆர வட தோடு அலைய பேசி நகைத்து ஆசை பொருட்டு யாரையும் மெத்தாக மயக்கிடும் மோகர்
| ஆர வடம்: முத்து மாலை; |
சோனை மழை பாரம் விழி தோகை மயில் சாதியர் கை தூது விடுத்தே பொருளை பறி மாதர்
| சோனை மழை: சோனா மாரி, விடாது பெய்யும் மழை; கைத் தூது: தன்னிடம் உள்ளவர்களைத் தூதனுப்பி; |
தோதகம் உற்று ஏழ் நரகில் சேரும் அழற் காயனை உட் சோதி ஒளி பாதம் அளித்து அருள்வாயே
| தோதகம்: வஞ்சகம்; ஏழ் நரகில்: ஏழு நரகங்களில் (இவை கூடாசலம், கும்பிபாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து எனப்படும்); அழற் காயனை: (காயன்: உடலை உடையவன்) தீயில் சேரும் உடலைக் கொண்டவன்; |
தானதனத்தீ திமிலை பேரிகை கொட்ட சம் மலை சாய கடல் சூரை வதைத்திடுவோனே
| திமிலை: ஒருவகைப் பறை; பேரிகை: முரசு; சம் மலை: கிரெளஞ்’சம்—அல்லது சம்—முழுமையான—மலை—மலை முற்றும்’; |
தாள இயல் சோதி நிற காலின் எழ கோலி எடுத்து தாபரம் வைத்து ஆடுபவர்க்கு ஒரு சேயே
| சோதி நிற: ஒளிபொருந்திய; கோலி எடுத்து: வளைத்து எடுத்து; தாபரம்: பூமி; ஒரு சேயே: ஒப்பற்ற மகனே; |
தேனின் இரச கோவை இதழ் பூவை குற பாவை தனத்தே உருகி சேரும் அணி கதிர் வேலா
|
|
சீர் அருணை கோபுரம் உற்று ஆன புன தோகையும் மெய் தேவ மகட்கு ஓர் கருணை பெருமாளே.
| புனத் தோகை: வள்ளி; தேவமகள்: தேவானை; |
ஆனை வரிக் கோடு இள நீரப் பார முலைச் சார் அசை பட்டு ஆடை மறைத்து ஆடும் மலர்க் குழலார்கள்... வரிகளைக் கொண்ட யானையின் தந்தத்தையும் இளநீரையும் ஒத்த பருத்த மார்பகங்களை (அவற்றோடு) சேர்ந்து அசைகின்ற பட்டாடையால் மறைத்து ஆடுகின்ற மலர் சூடிய கூந்தலை உடையவர்களும்;
ஆர வடத் தோடு அலையப் பேசி நகைத்து ஆசை பொருட்டு யாரையும் மெத்தாக மயக்கிடும் மோகர்... (அணிந்திருக்கும்) முத்து மாலையும் தோடும் அசைந்தாடுமாறு பேசிச், சிரித்து, (பொருள்மீது உள்ள) ஆசையின் காரணத்தால் யாரையும் மோகத்தால் மிகவும் மயக்குபவர்களும்;
சோனை மழைப் பார விழித் தோகை மயில் சாதியர் கைத் தூது விடுத்தே பொருளைப் பறி மாதர் தோதகம் உற்று... அடர்ந்த மழையைப் பொழியும் கருமேகத்தைப் போன்ற கூந்தல் பாரத்தையும் அழகிய விழியையும் கொண்டவர்களும்; தோகைமயிலின் இனத்தைச் சேர்ந்தவர்களும்; தம்மிடத்தே உள்ள தூதர்களை அனுப்பிப் பொருளைப் பறித்துக்கொள்பவர்களுமான பெண்களின் வஞ்சனைக்கு ஆளாகி;
ஏழ் நரகில் சேரும் அழற் காயனை உட் சோதி ஒளிப் பாதம் அளித்து அருள்வாயே... ஏழு நரகங்களில் போய் விழுவதற்கு உரியவனும்; தீயால் எரிக்கப்படப் போகும் உடலைச் சுமப்பவனுமான என்னை ஜோதிக்கெல்லாம் ஜோதியாக விளங்கும் உன்னுடைய திருப்பாதங்களைத் தந்து ஆண்டுகொள்ள வேண்டும்.
தானதனத்தீ திமிலை பேரிகை கொட்ட சம் மலைச் சாய கடல் சூரை வதைத்திடுவோனே... தானதனத்தீ என்று ஒலிக்கும் பறையும் பேரிகையும் முழங்க, கிரெளஞ்ச மலை முற்றாகச் சாய; கடலில் ஒளிந்துகொண்ட சூரனை வதைத்தவனே!
தாள இயல் சோதி நிறக் காலின் எழக் கோலி எடுத்(து) தாபரம் வைத்து ஆடுபவர்க்கு ஒரு சேயே... தாளத்தின் தன்மை, தன்னுடைய ஒளிபொருந்திய திருவடியின் மூலமாக வெளிப்படுமாறு ஒருகாலை வளைத்து (தூக்கியெடுத்து) மற்றொரு காலை பூமியின் மீது பதித்து ஆடுகின்ற நடராஜருடைய ஒப்பற்ற மகனே!
தேனின் இரசக் கோவை இதழ்ப் பூவை குறப் பாவை தனத்தே உருகிச் சேரும் அணிக் கதிர் வேலா... தேனின் சுவையை உடையதும் கொவ்வைப் பழத்தைப் போன்றதுமான உதடுகளைக் கொண்டவளும்; நாகணவாய்ப் புள்ளை ஒத்தவளும்; குறமகளுமான வள்ளியின் மார்பின்மீது உருகி அவளோடு சேர்கின்றவனே! அழகியதும் ஒளிவீசுவதுமான வேலை ஏந்தியவனே!
சீர் அருணைக் கோபுரம் உற்று ஆன புனத் தோகையும் மெய் தேவ மகட்கு ஓர் கருணைப் பெருமாளே.... அழகிய திருவண்ணாமலைக் கோபுரத்தில் இருந்துகொண்டு புனமயிலான வள்ளியிடத்திலும் மெய்யன்பு பூண்ட தேவானையிடத்திலும் ஒப்பற்ற கருணையைக் கொண்டுவிளங்கும் பெருமாளே!
சுருக்க உரை
பறைகளும் பேரிகைகளும் முழங்கக் கிரெளஞ்ச மலை முற்றாக அழித்து; கடலுக்குள் ஒளிந்துகொண்ட சூரனை வதைத்தவனே! தன்னுடைய ஒளிமிகுந்த பாதங்களின் அசைவால் தாளத்தின் இயல்பை வெளிப்படுத்தி; ஒரு பாதத்தைத் தூக்கியும் மற்றொன்றை பூமியில் ஊன்றியும் ஆடுகின்ற நடராஜரின் ஒப்பற்ற மகனே! தேனின் சுவையையும் கொவ்வைப் பழத்தின் நிறத்தையும் கொண்டிருக்கும் உதடுகளைக் கொண்டவளும் மைனாவை ஒத்தவளுமான வள்ளியின் தனத்தில் உருக்கம்கொண்டு சேர்பவனே! ஒளிபொருந்திய வேலை ஏந்தியவனே! திருவருணைக் கோபுரத்தில் வீற்றிருப்பவனே! புனமயிலான வள்ளியிடத்திலும் மெய்யன்பு பூண்ட தேவானையிடத்திலும் ஒப்பற்ற கருணையைக் கொண்டு விளங்குகின்ற பெருமாளே!
வரிகளைக் கொண்ட யானைத் தந்தத்தையும் இளநீரையும் போன்ற மார்பகங்களோடு சேர்ந்து அசைகின்ற பட்டாடையால் அவற்றை மறைத்துக்கொண்டு ஆடுகின்ற மலர்க்கூந்தலை உடையவர்களும்; முத்து மாலையும் தோடும் அசையும்படியாகச் சிரித்துப் பேசி, தங்களுடைய பொருளாசைக்காக யாரையும் மயக்கும் வஞ்சகம் உடையவர்களும்; அடர்ந்த மழையைப் பொழியும் கருமுகிலைப் போன்ற கூந்தலையும் விழிகளையும் கொண்டவர்களும்; தோகை மயிலின் இனத்தவர்களும்; தம்மிடத்திலுள்ள தூதர்களை அனுப்பிவைத்துக் கைப்பொருளைப் பறித்துக்கொள்பவர்களுமான பெண்களின் வஞ்சகத்துக்கு ஆளாகி ஏழ்நரகில் வீழாதபடி ஜோதியில் ஜோதியான உன்னுடைய திருவடிகளைத் தந்து அடியேனை ஆண்டுகொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


