ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

பி.இ. மாணவர்களிடம் இன்பிளான்ட் பயிற்சிக்கு கட்டாய கட்டணம்

பொறியியல் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இன்பிளான்ட் (தொழில்ரீதியான வளாக) பயிற்சி அளிப்பதற்காக அரசு சார்ந்த நிறுவனமான பி.எஸ்.என்.எல்.  கட்டாயக் கட்டணம் வசூலிக்கிறது. தமிழகம் முழுவதும் பொறியியல் பிரிவில

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 11:51 am

ச. குமரன்

பொறியியல் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இன்பிளான்ட் (தொழில்ரீதியான வளாக) பயிற்சி அளிப்பதற்காக அரசு சார்ந்த நிறுவனமான பி.எஸ்.என்.எல்.  கட்டாயக் கட்டணம் வசூலிக்கிறது.

தமிழகம் முழுவதும் பொறியியல் பிரிவில் (பி.இ.) படிக்கும் மாணவர்கள் 2-ம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை ஏதேனும் ஒராண்டில் தங்களது பாடப் பிரிவு சார்ந்த தொழில்ரீதியான வளாகப் பயிற்சி பெறுகின்றனர்.

தங்களது படிப்பு முடிந்தவுடன் வேலையில் சேருவதற்கு, போதிய தொழில் முன் அனுபவத்தைப் பெற இந்தக் குறுகிய காலப் பயிற்சி பெறுவது மிகவும் உதவும் என்பதால், மாணவர்கள் இதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இதற்கு மாணவர்கள் பயிலும் கல்லூரிகளின் நிர்வாகமே, அத்தாட்சியாக சான்று (போனஃபைட் சர்டிபிகேட்) அளிக்க வேண்டும். இந்தச் சான்றுடன், மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தை தாங்கள் தொழிற் பயிற்சி பெற விரும்பும் நிறுவனத்துக்கு, அனுப்ப வேண்டும்.

இதில் பெரும்பாலான கல்லூரி மாணவர்களுக்கு ஒட்டு மொத்தமாகவும், தொழில் வளாகப் பயிற்சி பெற அனுமதிக்கும் சான்றிதழ்களை  கல்லூரி நிர்வாகங்கள் வழங்குகின்றன.

இந்த விண்ணப்பங்களைப் பரிசீலித்து, அந்த நிறுவனங்களின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தேர்வு செய்து மாணவர்களை தொழில் வளாகப் பயிற்சிக்கு அழைப்பது வழக்கம்.

எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ்,

தகவல் தொழில் நுட்பம், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜீனியரிங் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் படிக்கும் பி.இ. மாணவர்கள் ஆண்டுதோறும் 4 மற்றும் 6-வது பருவமுறை தேர்வுகள் முடிந்த பின் விடுமுறையில், இந்தப் பயிற்சி பெற பி.எஸ்.என்.எல்., ரயில் நெட், பெல், மின் வாரியம், எல்காட் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கு படையெடுக்கின்றனர். மேலும் பல மாணவர்கள் தனியார் தொழில் நிறுவனங்களை நாடிச் செல்கின்றனர். இந்த நிறுவனங்களில் ஒரு வாரம் (7 வேலை நாள்கள்) மட்டுமே மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பெரும்பாலான நிறுவனங்கள் இதற்காக தனியாக கட்டணம் வசூலிப்பது இல்லை.

ஆனால்,  இன்பிளான்ட் பயிற்சி பெற விரும்பும் சென்னை பகுதி மாணவர்கள் கட்டாயமாக மீனம்பாக்கம் பிஎஸ்என்எல் அலுவலகம் சென்று, தலா ரூ. 1000 கட்டணம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், ஏழை எளிய மாணவர்கள் வேறு வழியின்றி, இந்த கட்டாயக் கட்டணத்தை  பிஎஸ்என்எல் நிறுவனத்துக்குச் செலுத்தி வருகின்றனர். இந்தக் கட்டணத்தைச் செலுத்தாமல் எந்த ஒரு மாணவருக்கும் பயிற்சி வழங்க பிஎஸ்என்எல் அதிகாரிகள் அனுமதிப்பது இல்லை.

ஏழைகளின் குழந்தைகளும் உயர் கல்வி வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு தாராளமாக கல்விக் கடனுதவிகளை வழங்குமாறு வங்கிகளை அவ்வப்போது வலியுறுத்துகிறது. முதல் தலைமுறை உயர் கல்வி பெறும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் ரூ. 20 ஆயிரம் வரை சலுகையை வழங்கி மாநில அரசு அறிவித்துள்ளது.

ஆனால், 3-வது தலைமுறை (3-ஜி) செல் போன் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கும் பிஎஸ்என்எல் நிறுவனம், வருங்கால இளைய தலைமுறை மாணவர்களின் நலனில் அக்கறை காட்டாமல், கட்டாயக் கட்டண வசூலில் ஈடுபடுவது வேதனையளிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.