வடலூர் ராமலிங்க வள்ளலாருக்கும் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலருக்கும் நடந்த அருட்பா மருட்பா வாக்குவாதங்கள் முழுவதையும் உள்ளது உள்ளபடி தொகுத்து "அருட்பா மருட்பா கண்டனத் திரட்டு' என்ற பெயரில் ஒரு நூலை உருவாக்கியிருக்கிறார் ப. சரவணன் (ஏற்கெனவே இதுதொடர்பாக ஒரு சிறு நூல் வெளியிட்டுள்ளார்.)
காலச்சுவடு வெளியிட்டுள்ள அந் நூலின் அறிமுக விழாவை காலச்சுவடு - இலக்கிய வீதி இணைந்து கடந்த சனிக்கிழமை சென்னையில் நடத்தின.
இலக்கியவீதி இனியவனின் வரவேற்புரையைத் தொடர்ந்து பேசிய பேராசிரியர் ஆ. இரா.வேங்கடாசலபதி, "கடந்த பத்தாண்டுகளாக தமிழ்ச் சூழலில் புத்தகப் பெருக்கம் அதிகமாகி உள்ளது. அந்நூலின் இன்றைய பயன்பாடு என்ன என்பதைப் பற்றி சிந்திப்பதில்லை. பொதுவாகவே சில எழுத்தாளர்களுக்கும் அறிஞர்களுக்கும் தமது பெயரை அல்லது படைப்பை அச்சில் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் அதாவது அச்சுக்காமம் அதிகம் உள்ளது. அதை வென்றால்தான் நாம் வளர முடியும். இந் நூலைப் போன்ற அசலான தரவுகள் தமிழுலக்கு அவசியம் தேவை' என்றார்.
அடுத்துப் பேசிய பேராசிரியர் சி. சுப்பிரமணியம், "மரபுகளை மீறும்போது எதிர்ப்பு வருவது இயற்கை. இந்த எதிர்ப்புதான் வள்ளலாருக்கு வந்தது. அவரது பாடல்களுக்கு வள்ளலார் திரட்டு என்று பெயர் வைத்ததை கதிரைவேற்பிள்ளை ஏற்கவில்லை. ராமலிங்கம் பிள்ளை பாடல்கள் என்று பெயர் வைக்க வேண்டும் என்பது அவரது கருத்து. வள்ளலார் தண்ணீரில் விளக்கெரித்ததாகக் கூறப்படும் தகவலில் உண்மையில்லை. அதுபோலவே கடைவிரித்தேன் கொள்வாரில்லை, கட்டிவிட்டேன் என்ற தொடரையும் வள்ளலார் எந்த இடத்திலும் குறிப்பிடவே இல்லை. அவர் அப்படிச் சொல்பவரும் அல்ல. அவர் ஒரு நம்பிக்கைவாதி. காலம் கடந்தும் வாழ்வதே இலக்கியம் என்று கொண்டால் வள்ளலாரின் அருட்பாவே இலக்கியம்' என்று கூறினார்.
அடுத்து பேராசிரியர் பொற்கோ "வள்ளலாரைப் பற்றி அறிஞர்களும் பேராசிரியர்களும் பேச தயங்கியபோது கிராமத்து பாமர மக்களே அவரது பாடல்கள் பாடியும் பஜனை செய்தும் தமிழ்நாடு முழுவதும் பரப்பினார்கள்.தொடக்கத்தில் கொள்கைப் போராக இருந்த இந்த அருட்பா மருட்பா வாதம் பின்னர் தனிமனித போராக மாறியது. அதன் பின்னர் அதைவிட மோசமாக மாறிவிட்டது. மறைமலையடிகளே இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தார்.ஆறுமுக நாவலர் சிறந்த அறிஞர் மறுப்பதற்கில்லை. ஆனால் வள்ளலார் சான்றோர், இனியும் தொடர்ந்து வரும் ஆய்வுகள் வள்ளலாரை துலக்கமாக உலகுக்கு உணர்த்தும்' என்று குறிப்பிட்டார்.
பேராசிரியர் வ.ஜெயதேவன், நாவலர் வள்ளலாரை எதிர்க்கக் காரணம் சைவ சமயம் சிதைந்துவிடுமோ என அஞ்சியதே ஆகும். வள்ளலார் உருவத்தை ஆலயங்களில் வைத்து வணங்க வேண்டும் என்றும் அவரது பாடல்களை தேவாரம் திருவாசம் போல் ஓத வேண்டும் என்றும் வள்ளலார் அன்பர்கள் வற்புறுத்த தொடங்கியதால் எதிர்ப்பு வலுத்தது. இந்த அருட்பா மருட்பா விவாதத்தில் வள்ளலார் வென்றாரா நாவலர் வென்றாரா என்பது முக்கியமல்ல. தமிழ் வென்றது- அதுதான் உண்மை' என்று கூறினார்.
பேராசிரியர் இராமசாமி தமது உரையில் "இந்த கண்டனத் திரட்டில் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் நான்கும் நீக்கமற நிறைந்துள்ளன. முத்தமிழோடு வசைத் தமிழ் என்ற ஒன்றையும் சேர்க்கலாம் என்று தோன்றுகிறது. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடியவரைப் பற்றி இத்தனை வசைகளா?' என்று கூறினார்.
இறுதியாகப் பேசிய ஊரன் அடிகள் தமது உரையில் "ஆறுமுக நாவலர் வள்ளலாரைவிட ஒரு வயது மூத்தவர். வள்ளலாரைவிட ஆறு ஆண்டுகள் அதிகமாக வாழ்ந்தவர். 1849-ல் திருவாவடுதுறை மடம் அவருக்கு நாவலர் பட்டம் தந்தது. வள்ளலார் கருத்துகளை முதலில் புரிந்து பாராட்டியவர் அழகரடிகளார்தான்.
சைவ உலகில் பக்தி இலக்கியங்கள் திருவாசகம், திருமந்திரம், திருப்புகழ் என்றே தொடக்க காலத்தில் வழங்கப்பட்டன. பின்னர் வெளிவந்தவை பிரபந்த திரட்டு என்ற பெயர் பெற்றன. அதற்குப் பிறகு வெளிவந்தவை பாடல் திரட்டு என்று குறிப்பிடப்பட்டது. அந்த நிலையில் வள்ளலாரின் பாடல்கள் திருவருட்பா என்று அழைக்கப்படுவதை நாவலர் போன்ற சைவ அறிஞர்களால் ஏற்க முடியவில்லை. நாவலர் பஞ்ச புராணத்தைத் தொகுத்து அருட்பா என்ற பெயரில் வெளியிட்டார். அன்றைய தருமபுர ஆதீனகர்த்தர் காசியிலுள்ள துண்டி விநாயகர் மீது துண்டி விநாயகர் திருவருட்பா என்று ஒரு நூல் எழுதினார். ஆனாலும் வள்ளலாரின் அருட்பாவே இன்றுவரை நிலை பெற்றுள்ளது.
அக்காலத்தில் நாவலர் சென்னையில் சுக்கிரவார சங்கம் என்ற சங்கத்தைத் தொடங்கினார். அந்தக் கூட்டத்தில்தான் முதன்முதலாக வள்ளலாரை குறைகூறி பேசினார். அது மெல்ல மெல்ல வளர்ந்து ஒரு பெரிய சொற்போர் நிகழ காரணமாயிற்று. ஒருமுறை சிதம்பரத்தில் பேசிய வள்ளலார், நாவலர் பற்றிக் குறிப்பிட்டு அவர் நா இலர் அதாவது நாக்கு இல்லாதவர் என்றும் நா அலர்.. நாவால் தூற்றுபவர் என்றும் பேசியிருக்கிறார். மற்றபடி பெரும்பாலும் வள்ளலார் நாவலரின் கண்டனத்தை புறக்கணித்தே வந்துள்ளார்.
ஆனால் வள்ளலாரின் அன்பர்கள் நாவலர் மீதும் அவரது சீடர்கள் மீதும் கடுங்கோபம் கொண்டனர். நாவலரின் சீடரான கதிரைவேற்பிள்ளை, வள்ளலார் குறித்து கடுமையாகப் பேசியதைப் பொறுக்க முடியாத வள்ளலார் அன்பர்கள் கதிரைவேற் பிள்ளை இறந்துவிட்டதாகக் கூறி கருமாதி நோட்டீஸ் அச்சடித்து விநியோகித்தார்கள். அத்தோடு விடவில்லை. அடுத்த ஆண்டு அதே நாளில் தலை திவசம் என்றும் நோட்டீஸ் அடித்தார்கள். ஆனால் அந்த சமயத்தில் உண்மையிலேயே கதிரைவேற்பிள்ளை இறந்து போய்விட்டார். இப்படி பல நிகழ்ச்சிகள் இந்த நூலைப் புரட்டும்போது என் நினைவுக்கு வந்தன. இந்த நூல் சைவ அன்பர்கள், வள்ளலார் அன்பர்கள், தமிழ் ஆராய்ச்சியாளர்கள் அனைவரிடமும் இருக்க வேண்டியது அவசியம்' என்று குறிப்பிட்டார். பதிப்பாசிரியர் ப. சரவணன் ஏற்புரைக்குப் பின் எழுத்தாளர் பெருமாள் முருகன் நன்றியுரை வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லக்னோவில் விஐடி முன்னாள் மாணவா் சங்கக் கிளை தொடக்கம்

ஆன்லைன் பகுதிநேர வேலை: தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ.11.8 லட்சம் மோசடி
திமுகவின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் : பிரேமலதா விஜயகாந்த்

புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


