புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

எதிர்பாராதது!

ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பு. அங்கு ஒரு வீட்டில் நடுத்தர வயதுடைய மாற்றுத் திறனாளியான ஒருவர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி பைனாகுலர் வழியாக அந்தக் குடியிருப்பின் மற்ற பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளை

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 8:34 am

ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பு. அங்கு ஒரு வீட்டில் நடுத்தர வயதுடைய மாற்றுத் திறனாளியான ஒருவர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி பைனாகுலர் வழியாக அந்தக் குடியிருப்பின் மற்ற பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனிக்கிறார். அவர் கண்ணில்படுகிற சம்பவங்களை வைத்து அந்தக் குடியிருப்பில் ஒரு கொலை நடப்பதாக எண்ணுகிறார். அந்தக் கொலையால் தனக்கு ஆபத்து வரும் என்றும் அஞ்சுகிறார்.

அவர் நினைத்ததுபோலவே அந்தக் கொலையாளி ஒரு மழை இரவில் மழைக் கோட்டு, தொப்பி அணிந்து, கையில் கத்தியுடன் அவர் வீட்டுக்குள் நுழைய, அவர் சக்கர நாற்காலியுடன் தப்பிக்க முயற்சி செய்ய, அவன் அவரைப் பிடித்து கத்தியை அவர் நெஞ்சுக்கு நேராக உயர்த்த, தன்னையறியாமல் எழுந்து நின்றுவிடுகிறார் அவர். கொலைகாரன் கத்தியைக் கீழே போட்டுவிட்டு அவரை மகிழ்ச்சியோடு கட்டிப் பிடிக்கிறான். பிறகுதான் புரிகிறது அவரை எழுந்து நடக்க வைப்பதற்காக அந்தக் குடியிருப்பிலுள்ள அவரது நலம் விரும்பிகள் நடத்திய நாடகம்தான் அந்தக் கொலை சம்பவம் என்பது.

என்ன இந்தக் கதையை எங்கோ கேட்டதுபோல் இருக்கிறதா? ஆம். ஆல்பர்ட் ஹிட்ச்காக் எழுதிய கதைதான் இது. எங்கேயோ பார்த்ததுபோலவும் இருக்கிறதா? ஆம். சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு "ரியர் விண்டோ' என்கிற பெயரில் திரைப்படமாகவும் வெளிவந்த கதைதான் இது.

மேற்படி கதையை தமிழுக்கேற்றபடி சில மாற்றங்கள் செய்து "எதிர்பாராதது' என்கிற பெயரில் நாடகமாக்கியுள்ளார் இயக்குநர் வெங்கட். தென்னக பண்பாட்டு மையமும் பிரம்ம கான சபாவும் இணைந்து இந்த நாடகத்தை கடந்த சனிக்கிழமை சென்னை வாணி மஹாலில் அரங்கேற்றின.

சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி மகேஷ் பாடல்களின் ரசிகராக வலம் வரும் ஜெகன் பாத்திரத்தை ஏற்று நடிக்கும் சுந்தர்ராஜனின் நடிப்பு அபாரம். வசன உச்சரிப்பு, டைமிங், மாடுலேஷன் எல்லாமே சிறப்பு. அவரது நண்பர் வில்லியம்ஸôக வரும் சிவாஜி சதுர்வேதியும் இயல்பாக நடித்திருக்கிறார். இவர்களுடைய நட்பு அழகாகவும் நேர்த்தியாகவும் அமைந்துள்ளது. யாரந்த பல்பிர் சிங்? அந்தக் கால நாகேஷ் போல துறுதுறு. ரக்ஷாவாக வரும் சந்தியா தேவைக்கு அதிகமாகவே நடிக்கிறார். சற்று குறைத்தால் இன்னும் ரசிக்கலாம். கேசவ்வாக வருபவருக்கு அதிக வேலையில்லையென்றாலும் குறை சொல்ல முடியாதபடி நடித்திருக்கிறார்.

கே.பாலசந்தரைத் தொடர்ந்து வெங்கட்டும் (இவரும் கே.பி.யுடன் பணிபுரிந்திருக்கிறார்) "ஓரங்க' என்கிற உத்தியை கையாண்ட போதிலும் மேடையின் ஒரு ஓரத்தில் மற்ற குடியிருப்புகளையும் அடிக்கடி காட்டிப் புதுமை செய்திருக்கிறார்.

குருபிரசாத்தின் இசையமைப்பு இதுபோன்ற கதைகளுக்கு ஏற்றாற்போல் இருக்கிறது என்றாலும் சில இடங்களில் அளவுக்கு மீறும்போது இசை இரைச்சலாகிவிடுகிறது. குறிப்பாக ரக்ஷா அறிமுகக் காட்சியிலும் இடிமழைக் காட்சியிலும். (காட்சிப்படி டேப் ரிக்கார்டரில் ஓடிக் கொண்டிருக்கும் பாடலின் சத்தம் பாத்திரங்கள் பேச ஆரம்பித்ததும் தானாக குறைவது எப்படியே?)

சர்தார்ஜிக்களின் முட்டாள்தனத்தைப் பற்றிய ஜோக் ஒரு காலத்தில் பிரபலம். இப்போது சர்தாஜிக்கள் நல்லவர்கள், புத்திசாலிகள் என்று சொல்லுவதுதான் பேஷன். சர்தாஜி பிச்சையெடுக்க மாட்டார்கள் என்பது சமீபத்தில் ஒரு திரைபப்படத்தில் அழுத்தமாக சொல்லப்பட்ட செய்திதான். மேலும் இதில் பல்பிர் சிங்காக வருபவர் மருந்துக்குக்கூட சர்தார்ஜி பேசும் பாஷையைப் பேசவில்லை. மாறாக "ஒங்க கைல ஒரு விஷயம் சொல்லணும்', "யாருனா தட்டி கேக்கணும்ல' என்கிற ரேஞ்சுக்கு சென்னை செந்தமிழ் பேசுகிறார்.

வசனம் பல இடங்களில் அருமை. சில இடங்களில் கூர்மை. ஜெகன் மாப்பிள்ளை பற்றி கேட்க ரக்ஷா நடனத்தைப் பற்றி கூறுவது, ஜெகன் சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு வர முடியாத காரணத்தைக் கூறுவது, நான் பிறந்தபோதே காலில் சக்கரம் கட்டிட்டு பிறந்ததா எங்க அம்மா சொல்லுவாங்க.. என்று ஜெகன் கூறுவது இப்படி பல இடங்கள். இருந்தாலும் ஜெகன் விபத்தில் சிக்குவதற்கு ஒருவகையில் தானே காரணம் என்ற குற்ற உணர்த்தியுடன் இருக்கு ரக்ஷா அவரிடம் வாய்தவறிக்கூட "வாக்கிங் போறீங்களா?' என்று கேட்பாரா?

மற்றொரு விஷயம். ஜெகனும் வில்லியம்ஸýம் 2005 ஆகஸ்ட் முதல் தேதி நண்பர்கள் தினத்தன்று தங்கள் வாழ்வில் முக்கியமான சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறுகின்றனர். நண்பர்கள் தினம் ஆகஸ்ட் முதல் தேதி வருவது அல்ல. ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமையே நண்பர்கள் தினம். இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை வந்தது. ஆனால் 2005- ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல்தேதி ஞாயிற்றுக்கிழமை அல்ல. அன்று வேறு கிழமை (திங்கள்). அந்த ஆண்டு ஆகஸ்ட் ஏழாம் தேதிதான் முதல் ஞாயிற்றுக்கிழமையும் நண்பர்கள் தினமும்.

ஆங்கில கதை என்கிற அன்னியத் தன்மை சிறிதும் வந்துவிடாதபடி சாதுர்யமாகத் தமிழாக்கியுள்ளார் வெங்கட். பாராட்டுகள்.

பழைய தமிழ் நாடகங்களையே மீண்டும் தமிழ் நாடகங்களாக ரீமேக் செய்ய வேண்டிய அவசர சிகிச்சை பிரிவில் தமிழ் நாடக உலகம் இருக்கும் இன்றைய சூழலில் இந்த எதிர்பாராதது உண்மையிலேயே இனிய எதிர்பாராததுதான். மேலும் தொடர்ந்து பல எதிர்பாராதவைகளை வெங்கட்டிடம் எதிர்பார்ப்போம்.

வாழ்த்துகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.