சென்னையில் இசை விழா தொடங்கி ஒரு வாரத்திற்கு மேலாகியும் தமிழிசைக்கான தனிப்பட்ட நிகழ்ச்சி எதுவும் நடைபெறவில்லையே என்று வருந்திய ரசிகர்களின் வருத்தத்தைப் போக்கும்விதமாக அமைந்தது கடந்த புதன்கிழமை மயிலாப்பூர் ஆர்.கே. கன்வர்ஷன் மையத்தில் நடைபெற்ற சங்கீதா சிவகுமாரின் இசை நிகழ்ச்சி. அன்று அவர் எடுத்துக்கொண்ட தலைப்பு "தமிழிசை மூவர்'. அருணாசல கவிராயர், முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகியோரது பாடல்கள் மட்டுமே.
அருணாசல கவிராயரின் ராம நாடகக் கீர்த்தனையான "ராமனுக்கு மன்னன்முடி தரித்தாலே' என்னும் ஹிந்தோள ராக கீர்த்தனையுடன் நிகழ்ச்சியைத் தொடங்கினார் சங்கீதா. அனுபவித்துப் பாடினார். குறிப்பாக,
பரசுராமன் கர்வம் தீத்தவன்டி...
நம்மையெல்லாம் காத்தவன்டி...
பட்டம் கட்ட ஏத்தவன்டி...
நாலு பேரில் மூத்தவன்டி...
- என்கிற வரிகளைப் பாடிய விதம் அருமை. ஆனால் முடிக்கும்போது ஏனோ "தரித்தாலே' என்று மூன்று முறை முடித்தார். மற்ற மொழிப் பாடல்களுக்கு எப்படியோ தமிழ்ப் பாடல்களுக்கு இது பொருந்தவில்லை. அடுத்த வரியான "நன்மையுண் டொருக்காலே' என்பதையும் பாடி முடிப்பதே சரி.
தொடர்ந்து மாரிமுத்தாப் பிள்ளையின் இரண்டு பாடல்கள். முதலாவது "ஏதுக்கித்தனை மோடி' (சுருட்டி) அலட்டாமல் அழகாகப் பாடினார். இரண்டாவதாக, "காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே' (யதுகுல காம்போதி). தில்லை கனகசபையையே கொண்டுவந்து நம் மனக்கண் முன் நிறுத்திவிட்டார். அத்தனை உருக்கம். ஆஹா... ஆனால் இப்பாடலில் வரும் "வேலைத் தூக்கும் பிள்ளைதனைப் பெற்ற தெய்வமே' என்பது சற்று நீட்டிப் பாடும்போது "பிள்ளைதனைப் பேற்ற தெய்வமே...' என்று நெடிலாக மாறி பொருளற்றுப் போய்விடுகிறது. கவனிக்கவும்.
நான்காவதாக, முத்துத்தாண்டவரின் "ஆல் டைம் கிரேட்' பாடலான "சேவிக்க வேண்டுமய்யா' (ஆந்தோளிகா). உற்சாகமான இந்தப் பாடலை இரட்டிப்பு உற்சாகத்தோடு பாடி பலமான கைதட்டலைப் பெற்றார். ஆனால் இதிலும் "பாங்காகவே பிரதட்சிணமும் செய்து' என்கிற வரியைப் பாடும்போது, "பிர தட்சிணமும் செய்து' என்று பிரித்துப் பாடும்போது பொருள் மாறுபட்டுப் போகிறது.
அடுத்ததாக அருமையான ஒரு பைரவி ராக ஆலாபனையை முடித்து அருணாசல கவிராயரின் சூப்பர் ஹிட் அயிட்டமான "யாரோ இவர் யாரோ'வை எடுத்து அற்புதமாகப் பாடினார். குறிப்பாக
"அந்த நாளில் தொந்தம் போலே உருகிறார்...
இந்த நாளில் வந்து சேவை தருகிறார்...'
- என்ற வரிகளைப் பாடி முடித்து "யாரோ' இப்பாடலில் வரும் "சந்திர பிம்ப முக மலராலே' என்ற வரியை எடுத்துக் கொண்டு விரிவாக ஸ்வரம் பாடினார்.
தொடர்ந்து "இத்தனை துலாம்பரமாய் நீயும் திரிந்தால் என்ன சொல்லுவார்களடி ஊரார்' என்கிற முத்துத்தாண்டவரின் தன்யாசி ராகப் பாடலைப் பாடிவிட்டு (திரிந்தால் என்பது "தீரிந்தால்' என்று ஆனதை விட்டுவிடலாம்) இறுதியாக "தெருவில் வாரானோ என்னைச் சற்று திரும்பிப் பாரானோ' என்கிற முத்துத் தாண்டவரின் கமாஸ் ராகப் பாடலை அழகாகப் பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தார் சங்கீதா சிவகுமார்.
இந்த நிகழ்ச்சிக்கு அரங்கம் நிறைய ரசிகர்கள் வந்திருந்தது நல்ல சகுனமாகப்பட்டது. அதுமட்டுமல்ல "இந்த வருடம் என் கச்சேரிகளை குறைத்துக் கொண்டு மற்ற கலைஞர்களின் கச்சேரிகளைக் கேட்டு ரசிக்கப் போகிறேன்' என்று அண்மையில் கூறிய டி.எம். கிருஷ்ணா இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தது மட்டுமல்ல ஒவ்வொரு பாட்டு முடிவிலும் பலமாக கைதட்டி ரசித்தது சங்கீதாவுக்கு பெரும் உற்சாகத்தைத் தந்திருக்கும் என்பதில் ஐயமில்லை!
ஒரு வேண்டுகோள்: மற்ற கச்சேரிகளுக்கும் டி.எம்.கிருஷ்ணா இதுபோலவே சென்று உற்சாகப்படுத்த வேண்டும்.
ஒரு தகவல்: சங்கீதா சிவகுமார் திருமதி டி.எம்.கிருஷ்ணா என்பது குறிப்பிடத்தக்கது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லக்னோவில் விஐடி முன்னாள் மாணவா் சங்கக் கிளை தொடக்கம்

ஆன்லைன் பகுதிநேர வேலை: தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ.11.8 லட்சம் மோசடி
திமுகவின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் : பிரேமலதா விஜயகாந்த்

புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


