புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

"கோப்பைகளை மாற்றிவிடாதீர்கள்!'

எழுத்தாளர்கள் ஞாநியும் பாஸ்கர் சக்தியும் இணைந்து நடத்திவரும் "கேணி' என்கிற அமைப்பின் மாதாந்திர கூட்டத்தில் இம்மாதம் கலந்துகொண்டு உரையாற்றியவர் எழுத்தாளர் வண்ணதாசன். அவரது பேச்சிலிருந்து... ""எனக்குப்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:32 am

எழுத்தாளர்கள் ஞாநியும் பாஸ்கர் சக்தியும் இணைந்து நடத்திவரும் "கேணி' என்கிற அமைப்பின் மாதாந்திர கூட்டத்தில் இம்மாதம் கலந்துகொண்டு உரையாற்றியவர் எழுத்தாளர் வண்ணதாசன். அவரது பேச்சிலிருந்து...

""எனக்குப் பேசத் தெரியாது. பேச்சுக்கும் எனக்கும் வெகு தூரம். எழுத்துக்கும் எனக்கும் வெகு நெருக்கம். திருநெல்வேலியிலிருக்கும் எனது வீட்டிற்கும் சென்னையிலிருக்கும் இந்த இடத்திற்கும் எவ்வளவு தூரம்? ஆனால் உண்மையில் தூரமில்லை. இலக்கியம் தூரத்தைக் குறைக்கிறது அல்லது நெருக்கத்தை அதிகரிக்கிறது.

எனது கதைகள் மூலமாக நான் உங்களைத் தொட்டிருக்கிறேன். எனது கதைகள் தொடர்ந்து அதனைச் செய்யும். வாழ்க்கையிலிருந்து நான் பெற்றுக் கொண்டவற்றையெல்லாம் உங்களுக்குத் தருகிறேன். உங்களிடமிருந்தும் பெற்றுக் கொள்கிறேன். பெறுவதையெல்லாம் தருவதற்கே நான் முயற்சி செய்கிறேன்.

சென்ற வாரம் ஒரு நண்பர் என்னை திருவண்ணாமலை ரமணாசிரமத்திற்குக் கூட்டிச் சென்றார். அங்கு பல முதியவர்கள் தியானத்தில் இருப்பதைப் பார்த்தேன். வயோதிகத்திற்கு ஓர் அழகு வந்துவிடுகிறது. அதுவும் தியானம் செய்யும் முதியவர்கள் கூடுதல் அழகாக இருக்கிறார்கள்.

ஒரு முதியவர். அவர் திபேத் நாட்டினராக இருக்கலாம். கையில் ஒரு நாகலிங்கப் பூவைப் பிடித்தபடி அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒன்றை மட்டுமே பார்ப்பவன் எல்லாவற்றையும் பார்ப்பவனாக இருப்பான். அல்லது எதையுமே பார்க்காதவனாக இருப்பான். அந்த நாகலிங்கப் பூவை அவர் எனக்குத் தரவேண்டும் என்று நான் விரும்பினேன். சற்று நேரம் கழித்து நான் அவரைப் பார்த்தபோது அவர் கையில் அந்த பூ இல்லை. யாரிடமாவது அவர் கொடுத்திருக்கலாம். இதுதான் இலக்கியம் என்று எனக்குப்படுகிறது. பெறுதலும் அடைதலும் அந்தப் பூவைப் போன்றது. உதிர்ந்த பூவும் பூதான் என்று எனக்கு சொல்லத் தோன்றுகிறது.

உங்கள் வீட்டில் பல ஜன்னல்கள் இருந்தாலும் வெளிச்சம் வேண்டுமென்றால் உங்களுக்குப் பிடித்த ஏதோ ஒரு ஜன்னலைத்தான் நீங்கள் திறக்கிறீர்கள்.

இரு தினங்களுக்கு முன்பு சென்னை, முகப்பேரிலுள்ள சேறும் சகதியும் நிறைந்த ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அந்தச் சாலையில் இருந்த பன்னீர் மரங்கள் பூக்களை சொரிந்து கொண்டே இருந்தன. அந்தப் பகுதி முழுவதும் பன்னீர்ப் பூ வாசம். அப்போது யூனிஃபார்ம் போட்ட ஒரு பள்ளிக்கூட சிறுமியை சைக்கிள் கேரியரில் உட்காரவைத்துக்கொண்டு அவளுடைய தாய் அவசர அவசரமாக தள்ளிக் கொண்டு போகிறாள். அப்போது அந்தப் பெண்மணி "யப்பா.. எவ்ளோ பூ' என்று கூறுகிறாள். இதுதான் வாழ்க்கை. இதுதான் இலக்கியம். அவள் யாரிடம் அதைக் கூறினாள்? என்னிடமா? தன் மகளிடமா? இல்லை தன்னிடமேவா? பகிர்ந்துகொள்ள நிறைய சுமந்து கொண்டிருப்பவர்கள் என்னோடு அல்லது என்னைப் போன்ற எழுத்தாளர்களோடு நிறையப் பகிர்ந்து கொள்வார்கள்.

ஒரு கருத்தை சிறுகதையாக சொல்வதா அல்லது கவிதையாக சொல்வதா என்பது பற்றி எழுத்தாளனுக்கு முன் தீர்மானம் எதுவும் இருக்கமுடியாது என்று நினைக்கிறேன். முதல் வரிதான் அதனைத் தீர்மானிக்கும்.

எந்த தத்துவத்தையும் கோட்பாட்டையும் எளிமையாகக் கூறமுடியும். மொழி என்பது புழங்க புழங்கத்தான் கூர்மையடையும். நாம் ஒருவரை அழைக்கும்போது அவரது உறவைச் சொல்லி அழைக்கவேண்டும். வாங்க என்று மட்டும் சொல்லாமல், வாங்க மாமா, வாங்க சித்தப்பா, வாங்க அத்தை, வாங்க மதனி... இப்படி. மற்றொன்று, நாம் முதியவர்களை இயன்றவரை தொட்டுப் பேசவேண்டும். அந்த தொடுகை அவர்களுக்குப் பெரிய நம்பிக்கையையும் அளவற்ற மகிழ்ச்சியையும் கொடுக்கும்.

முதன்முதலில் என்னை பாதித்த எழுத்தாளர் ஜெயகாந்தன்தான். பாரதியார், புதுமைப்பித்தன் இவர்களெல்லாம் எனது 35-ஆவது வயதில்தான் என்னிடம் வந்து சேர்ந்தார்கள். எனது 15 அல்லது 16-ஆவது வயதிலேயே நான் "காஞ்சனை', "கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்' போன்ற கதைகளைப் படித்திருந்தாலும் நான் புதுமைப்பித்தனை உணர்ந்து கொண்டது பின்னால்தான்.

ஒரே விஷயத்தைப் பற்றி இரண்டு எழுத்தாளர்கள் எழுதும்போது அது வேறு வேறு விதமாகத்தான் அமையும். நான் சுடலைமாடன் தெருவிலிருந்து பார்த்த திருநெல்வேலி அதே சுடலைமாடன் தெருவிலிருந்து பார்க்கும் கலாப்ரியாவுக்கு வேறு மாதிரியாக இருக்கும். எங்கள் இருவரது படைப்புகளையும் படிப்பவர்கள் இதனை உணரமுடியும்.

உங்களை நான் கேட்டுக்கொள்வது ஒன்றுதான். எழுத்தாளனின் ஒரு சொல்லை எடுத்து அவனுக்கு எதிராக ஒருபோதும் திருப்பாதீர்கள்.

அண்மையில் நான் படித்த ஒரு கவிதை என் நினைவுக்கு வருகிறது. கவிஞனின் பெயர் நினைவில்லை. கவிதை இதுதான்:

நுரைகள் நிரம்பிய

இந்த இளம் சூடான சாராயத்தை

நான் உங்களுக்குத் தருகிறேன்.

தயவுசெய்து

நீங்கள் கோப்பைகளை மாற்றிவிடாதீர்கள்.

ஏனெனில்

எனது கோப்பைகள் எனக்கு முக்கியம்

எனது இளம் சூடு எனக்கு முக்கியம்

எனது நுரைகள் எனக்கு முக்கியம்!

- அந்த கவிஞனின் கருத்தையே நானும் வழிமொழிகிறேன். நன்றி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.