சாகித்திய அகாதெமி போன்று மரபை கட்டிக் காக்கும் ஒரு நிறுவனம், கவிதையின் நவீன வடிவமான ஹைகூ கவிதை வாசிப்பை நடத்தியிருப்பது ஒரு வியப்பான விஷயம்தான். அண்மையில் கன்னிமரா நூலக அரங்கில் நடந்த அந்நிகழ்ச்சியில் பிரபலமானவர்களும், பிரபலமாகிக் கொண்டிருப்பவர்களுமாக பதினோரு கவிஞர்கள் கலந்து கொண்டனர்.
சாகித்திய அகாதெமி பெங்களூர் பிரிவின் பொறுப்பு அலுவலரான பொன்னுத்துரை தமது வரவேற்புரையின்போது ஜப்பானிய ஹைகூ இந்தியாவில் அறிமுகமான விவரங்களை சுவைபடக் கூறினார். (ரவீந்திரநாத் தாகூர் ஜப்பானிய ஹைகூக்களை வங்காள மொழியில் மொழி பெயர்த்துள்ளார்) அகாதெமியின் பொதுக்குழு உறுப்பினர் இராம.குருநாதன் தமது தலைமையுரையின் போது ஹைகூ கவிஞர்களைப் பற்றி சிறு அறிமுகம் செய்ததோடு தமக்குப் பிடித்த சில ஹைகூ கவிதைகளையும் கூறினார். (அசுத்தம் சோறு போட்டது துப்புரவுத் தொழிலாளிக்கு')
பொதுவாக அன்று படிக்கப்பட்ட கவிதைகள் அனுபவப் பகிர்வு, முரண், சிந்தனை தெறிப்பு, தொழில் நுட்பம் எனப் பல்வாறாக அமைந்திருந்தன. தனது பேரன் தன்னிடம் கேட்ட ஒரு கேள்வியால் கவிஞர் அமுதோனுக்குத் தோன்றிய,
பெருமழை இரவு
படுக்கையில் பெயரன் கேட்டான்
"தாத்தா காக்கா எங்க தூங்கும்?'
-என்ற கவிதையும் சரி, ஆலையில் பணிமுடிந்து வீட்டுக்கு வரும்போது தன் வீடு பற்றி எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும் பாரதி வசந்தனுக்குத் தோன்றிய,
நெருப்பின் வசந்தம்
எத்தனை அழகு
பற்றி எரியும் என் வீடு
-என்ற கவிதையும் சரி நேரடித் தன்மை கொண்ட நிஜக் கவிதைகள்.
சிலர் தமது கவிதைகளில் முரண் வரவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள்.
பூக்கள் மலர மலர
வாடிப் போகின்றது
பூக்காரி முகம்
காந்திமகான் எளிமைதான்
காட்சியளிப்பதோ
ஐநூறு ரூபாய் நோட்டில்
(வா.மு.சே.ஆண்டவர்)
சாக்கடைத் தொழிலாளி மரணம்
வீதியெங்கும்
ரோஜாக்கள்
(உதயக்கண்ணன்)
கல்யாணக் கூட்டம்
முதிர்கன்னியின் தலையிலும்
கொஞ்சம் அட்சதைகள்
(முருகேஷ்)
- போன்றவை அந்த ரகம். சில கவிதைகள் கேட்டவுடனேயே "அடடே..' என்று எண்ண வைத்து சிந்தனையைத் தூண்டவும் செய்தன.
பிணம் சுமந்த பாடை
கதறும் கோழிக்குஞ்சு
ஓங்கி ஒலிக்கும் பறை
(கன்னிக்கோவில் ராஜா)
அரளி மரத்தடி
புதைந்தழிந்தது
சாதி மீறிய காதல்
(மயிலாடுதுறை இளையபாரதி)
விபத்தில் கையிழந்தவன்
நினைவில் ஈரமாய்
விரல் சூப்பிய நாட்கள்
(முருகேஷ்)
கோயில் குருக்கள்
மரண பயத்தைக் காட்டினார்
விபூதி
(ராஜ்ஜா)
ஆகியவற்றை அந்த வகையில் சேர்க்கலாம். ஒரு சில கவிதைகளில் கவிதைக்கான உயிரோட்டம் குறைவாக இருந்தாலும் செய் நேர்த்தி சிறப்பாக அமைந்து கவனத்தை கவர்ந்தன.
கடிகார முள் நகர்வில்
கத்தரிக்கப்படுகிறது
காலத்தின் சிறகு
(வா.மு.சே.ஆண்டவர்)
ஒட்டடை
ஊஞ்சல் ஆடியது ஓர் உயிர்
ஊசல் ஆடியது ஓர் உயிர்
(ராஜ்ஜா)
-போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றோடெல்லாம் சேராமல் துணுக்குத்தனமாக போய்விட்ட சில கவிதைகளும் இல்லாமல் இல்லை. மாதிரிக்குச் சில,
பிள்ளையாரிடம்
பக்தன் வரம் கேட்டான்
தொப்பை குறைய
(ஆசுரா)
தங்கமின்றி
தங்கிப்போனவள்
முதிர்கன்னி
(மரிய தெரஸô)
மூட நம்பிக்கையை
மாற்றிப் போட்ட பூகம்பம்
பெரியார்
(கஸ்தூரி ராஜா)
சந்தேகமே இல்லை
பழனிமுருகன் தமிழர் கடவுள்தான்
கோவணத்துடன் நிற்கிறானே
(பாரதி வசந்தன்)
வா.மு.சே.ஆண்டவர் தமது கவிதையை, படிப்பதற்கு முன் "ஹைகூ என்கிற வடிவம் ஜப்பானிலிருந்து வந்ததுதான் என்றாலும் அதன் பாடுபொருளாக நம்முடைய மரபு சார்ந்த விஷயங்களை இடம்பெறச் செய்யும்போதுதான் அது வெற்றியடைய முடியும்' என்று கூறினார். அது மிகவும் சரியே. உதாரணத்திற்கு அன்று அமுதேன் படித்த ஒரு கவிதையைக் கூறலாம்.
ஒரு வேளை பாட்டிதானோ
வீட்டுக்குள் உரிமையாய்
வந்து போகும் காகம்
அதேநேரத்தில் மரபு என்கிற பெயரில் மீண்டும் சில குறிப்பிட்ட செய்திகளையே சொல்லிக் கொண்டிருப்பதும் கவிதையை மேலெடுத்துச் செல்ல உதவாது. குறைந்தபட்சம் கீழ்கண்ட மூன்று விஷயங்களையேனும் பாடுபொருளாக இனியும் எடுக்காமல் இருப்பது கவிஞர்கள் கவிதைக்கு ஆற்றும் பெருந்தொண்டு. முதலாவது "முதிர் கன்னியும் திருமண வீடும்', இரண்டாவது "குழந்தையும் பொம்மையும்', மூன்றாவது "பிச்சைக்காரனும் சில்லரைக் காசும்'.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அறிமுக உரை ஆற்றவேண்டிய இரா.மோகன் (அகாதெமியின் பொதுக்குழு உறுப்பினர்) இறுதியில் சற்று துரித கதியில் உரையாற்றி முடித்தார்.
தேர்ந்த வாசகர்கள் சேர்ந்த அரங்காக இருந்ததால் ஒவ்வொரு கவிஞரையும் கை தட்டி ஊக்கப்படுத்தியது நல்ல சகுனமாகப்பட்டது.
எல்லாம் சரி, தமிழ்நாட்டில் தமிழ்க் கவிஞர்கள் தமிழ்க் கவிதை படிக்கும் விழாவில் தமிழில் ஒரு பேனர் வைக்க வேண்டாமோ இந்த சாகித்திய அகாதெமிக்காரர்கள்? மேடையின் பின்புறம் (இந்த நிகழ்ச்சிக்காகவே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த) பதாகையில் நஹட்ண்ற்ஹ்ஹ அந்ஹக்ங்ம்ண்- பஹம்ண்ப் ஏஹண்ந்ன் டர்ங்ற்ழ்ஹ் தங்ஸ்ரீண்ற்ஹப் 4ற்ட் ஒன்ப்ஹ் 2010 என்று எழுதப்பட்ட வார்த்தைகளைப் பார்த்ததும் மனம் கனத்தது.
எங்கும் எதிலும் தமிழ் என்பது சாகித்திய அகாதெமிக்கு பொருந்தாது போலும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லக்னோவில் விஐடி முன்னாள் மாணவா் சங்கக் கிளை தொடக்கம்

ஆன்லைன் பகுதிநேர வேலை: தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ.11.8 லட்சம் மோசடி
திமுகவின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் : பிரேமலதா விஜயகாந்த்

புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


