புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

மரபு மாறாத புதுமை!

ஓர் இசைக்கலைஞர், ஒரே ஓர் இசைக் கருவி, ஓர் ஆல்பம். இசைத்துறையில் இந்த முயற்சி புதிதுதான். "மிஸ்டீரியஸ் டூயாலிடி- ஜஸ்ட் மீ' என்கிற அந்த வீணை ஆல்பத்தை உருவாக்கியிருப்பவர் பிரபல வீணைக் கலைஞர் ஜெயந்தி குமர

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 4:46 pm

ஓர் இசைக்கலைஞர், ஒரே ஓர் இசைக் கருவி, ஓர் ஆல்பம். இசைத்துறையில் இந்த முயற்சி புதிதுதான். "மிஸ்டீரியஸ் டூயாலிடி- ஜஸ்ட் மீ' என்கிற அந்த வீணை ஆல்பத்தை உருவாக்கியிருப்பவர் பிரபல வீணைக் கலைஞர் ஜெயந்தி குமரேஷ்.

கடந்த செவ்வாய்க்கிழமை சென்னையில் நடைபெற்ற அதன் வெளியீட்டு விழாவில் மியூசிக் அகாதெமி தலைவர் என். முரளி, பரதநாட்டியக் கலைஞர் அலர்மேல்வள்ளி, கர்னாடக இசைப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் வி.வி. சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடக்கத்தில் இறைவணக்கம் பாடிய அபிஷேக் ரகுராம் நிகழ்ச்சிக்குப் பொருத்தமாக "கண் கலங்குதே மனம் உருகுதே நாதமான உன்னை நாளும் என்னுள் காண' என்று இறைவனை நாத வடிவமாக வணங்கும் பாடலை சாரங்கா ராகத்தில் அழகாகப் பாடினார் (குமரேஷ் இயற்றிய பாடலாம்).

முதலில் பேசிய வி.வி. சுந்தரம் நான் கச்சேரிகள் கேட்கப் போகும்போது பாடகர் பாட ஆரம்பித்ததும் ராக ஆலாபனையைக் கேட்டுவிட்டு இது எந்தக் கீர்த்தனையாக இருக்கும் என்று யோசிப்பேன். பாடகர் கீர்த்தனையைப் பாட ஆரம்பித்ததும் மற்ற பாடகர்கள் இந்த கீர்த்தனையை எப்படிப் பாடியிருக்கிறார்கள், இவர் எப்படி சிறப்பாகப் பாடுகிறார் என்று கவனிப்பேன். ஆனால் ஆல்பத்தில் கீர்த்தனை என்று எதுவும் இல்லை. எல்லாமே இசைக் கோலங்கள்தான். இருந்தாலும் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறது. ஜெயந்தியின் திறமைக்கு இது ஒரு சான்று. இசைத்துறையில் அவரது உழைப்பு அபாரமானது. அவருடைய குரு எஸ். பாலசந்தர் போன்ற துணிச்சலான முயற்சியும் மற்றொரு குருவான லால்குடியாரின் லயமும் அவரிடம் ஒரு சேர அமைந்திருக்கிறது. மரபிலிருந்து மாறாத புதுமைகளை ஜெயந்தி செய்வார். அதற்கு இது ஒரு ஆரம்பம்' என்றார்.

பாம்பே ஜெயஸ்ரீ பேசும்போது, "பாடலோ, கீர்த்தனையோ இல்லை, பக்கவாத்தியம் எதுவும் இல்லை முழுக்க முழுக்க வீணை மட்டுமே. இப்படி ஓர் ஆல்பத்தை உருவாக்க மிகுந்த துணிவும் தேர்ந்த ஞானமும் வேண்டும். ஜெயந்திக்கு அந்த இரண்டும் இருப்பதால் இதனை இத்தனைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். எனக்கு இந்த நேரத்தில் ஆதிசங்கரரின் செüந்தர்ய லஹரி நினைவுக்கு வருகிறது. அதில் சரஸ்வதி வீணை வாசிப்பதை அம்பாள் ரசிப்பதாகக் குறிப்பிட்டிருப்பார். அதுபோல இந்த ஆல்பமும் கிராமம், நகரம், மாநகரங்களில் உள்ள ரசிகர்களால் ரசிக்கப்பட்டால் போதாது, உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்களால் ரசிக்கப்பட வேண்டும் என்று மனப்பூர்வமாக ஆசைப்படுகிறேன்' என்றார்.

என்.முரளி பேசும்போது "வீணையின் இசையை ஆத்மாவின் குரல் என்று சொல்லலாம். அதன் பெருமையை உலகுக்கு உணர்த்திட இதுபோன்ற ஆல்பங்களே சிறந்த வழியாகும். இத்தகைய புதிய முயற்சிகளில் தேர்ந்த கலைஞர்கள் தொடர்ந்து ஈடுபடவேண்டும். அப்போதுதான் ரசிகர்களுக்குப் புதுப்புது இசை அனுபவங்கள் கிடைக்கும்' என்றார்.

அலர்மேல்வள்ளி பேசும்போது "ஜெயந்தி அன்று என்னிடம் நடன மாணவியாக இருந்தார். இன்று எனக்கு நல்ல தோழியாக இருக்கிறார். என்னுடைய நடனப் பயிற்சியில் சோர்வோ, களைப்போ ஏற்படும்போது அதைப் போக்குவதற்கு நான் நாடுவது ஜெயந்தியின் வீணை இசையைத்தான். அவருடைய வாசிப்பு என்பது இசை வடிவமாக மட்டுமல்லாமல் கவிதையாகவும் நாட்டியமாகவும்கூட இருக்கிறது. இந்த ஆல்பத்தைக் கேட்கும்போது நம் மனக்கண்ணில் பலவித காட்சிகள் மாறி மாறி வருவதைத் தவிர்க்க முடியவில்லை. கடவுள் தெரிகிறார், காதலர்கள் தெரிகிறார்கள்' கடல் தெரிகிறது, புல்வெளி தெரிகிறது, சூரிய ஒளி தெரிகிறது. இப்படிக் கணத்துக்கு கணம் மாறிக் கொண்டே இருக்கிறது அந்த அற்புத உலகம். வீணையை உலகம் முழுக்க கொண்டாட வேண்டும் என்கிற ஜெயந்தியின் ஆசை இந்த ஆல்பத்தின் மூலம் நிறைவேறியிருக்கிறது' என்றார்.

ஜெயந்தி குமரேஷ் தனது ஆல்பத்தைப் பற்றி கூறும்போது, "வீணை என்பது நமது தேசிய இசைக்கருவி, அதன் அருமையை உலகம் உணர்வதற்கும் அந்த இசை உலகம் முழுக்க பரவுவதற்கும் நான் இந்த ஆல்பத்தின் மூலம் முயற்சி செய்திருக்கிறேன். அதனால்தான் நான் இதில் எந்தப் பாடலையோ, கீர்த்தனையோ பயன்படுத்தவில்லை. மதம், மொழி இவற்றையெல்லாம் கடக்கும்போதுதான் இசை பல புதிய உயரங்களைத் தொடமுடியும் என்று நினைக்கிறேன். அதனால்தான் எல்லா இசை வடிவங்களுக்கும் பொருந்தக்கூடிய ராகங்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தியிருக்கிறேன். உதாரணமாக சங்கராபரணம். இது அந்த ராகத்துக்கு கர்னாடக சங்கீதத்தில் வழங்கும் பெயர். இதையே இந்துஸ்தானியில் பிலாவல் என்று கூறுவார்கள்.மேற்கத்திய இசையில் மேஜர் ஸ்கேலில் வரும். எனவே ஒரு பொதுவான இசைத் தன்மையை உருவாக்க எண்ணினேன்.

எஸ். பாலசந்தர் சார், லால்குடி சார் இவர்களிடம் நான் கற்றுக் கொண்டிருந்தாலும் நான் அதிகமாக இசை பயின்றது என்னுடைய உறவினரும் மிகப் பெரிய இசைக் கலைஞருமான பத்மாவதி அனந்த கோபாலனிடம்தான். அவர் மரபுகளை மிகவும் போற்றுபவர். பாட்டோ, பக்கவாத்தியமோ இல்லாமல் வெறும் வீணையிசை மட்டுமே உள்ள இந்த ஆல்பத்தைப் பற்றி அவர் என்ன கூறுவாரோ என்று நான் பயந்தேன்.

ஆனால் அவர் கேட்டுவிட்டு, "நம் வீணையிசையை உலகத் தரத்துக்கு இந்த ஆல்பம் எடுத்துச் செல்லும்' என்று கூறினார். அப்போது நான் அடைந்த மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகள் இல்லை.

இந்த ஆல்பம் எனது பல வருட கனவு. இரண்டு வருட உழைப்பு. இதில் பாட்டுத்தான் இல்லையே தவிர நான்கு இசைக் கோவைகள் இருக்கின்றன. நொடிக்கு நொடி மாறுபடும் மனித மனத்தின் உணர்ச்சி மாற்றங்களை இசை வடிவில் கொடுத்திருக்கிறேன். இதனை வீணையில் ஒரு சிம்பனி என்று கூறலாம். என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் வீணையிசைக்கு என்னுடைய சிறிய அஞ்சலி இந்த ஆல்பம்' என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.