பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

உயிரை வென்ற தாய்ப்பாசம்..!

கே.கே.நகர் ஸ்ரீராம பக்த ஜன சமாஜத்தின் சார்பில் தேச மங்கையர்க்கரசியின் "பாரதம்' என்ற தலைப்பிலான தொடர்சொற்பொழிவு பத்மா சேஷாத்ரி பள்ளி வளாகத்தில் இந்த வாரம் நடைபெற்றது. திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகள

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 10:59 pm IST

கே.கே.நகர் ஸ்ரீராம பக்த ஜன சமாஜத்தின் சார்பில் தேச மங்கையர்க்கரசியின் "பாரதம்' என்ற தலைப்பிலான தொடர்சொற்பொழிவு பத்மா சேஷாத்ரி பள்ளி வளாகத்தில் இந்த வாரம் நடைபெற்றது. திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் மங்கையர்கரசியின் சொற்பொழிவில் கிடைத்த அரிய கருத்துகளின் தொகுப்பு:

பாரதம் படிக்கும் இடங்களெல்லாம் மகாலட்சுமி வீற்றிருந்து வாசம் செய்கிறாள். பாரதத்தைப் படிப்பவர்களுக்கு வெற்றி கிட்டுவது நிச்சயம். கிராமங்களிலெல்லாம் மழை பெய்யாமல் பொய்த்து விடும் காலங்களில் பாரதம் படிப்பது வழக்கம். அது போலவே நோய் உள்ளவர்களும், திருமணம் ஆகாதவர்களும் கந்த புராணம் படித்தால் பரிகாரம் கிட்டும் என்பார்கள் என்று ஆரம்பித்தார் மங்கையர்கரசி.

ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா? என்ற பழமொழியின் தத்துவத்தைக் குறிப்பிடும்போது, "ஐந்து என்பது ஐந்து வயதைக் குறிக்கவில்லை. தாயின் வயிற்றில் கருவாய் இருக்கும்போது, சிசு ஐந்தாவது மாதத்திலேயே வெளி உலகைப் பற்றிய அறிவை அறிந்து கொள்ளத் துவங்கிவிடுவதால், ஐந்து என்பது அன்னையின் கருவறையில் உள்ள ஐந்தாவது மாதத்தைக் குறிக்கும் என்றும், அப்போதே குழந்தைகளுக்கு நல்லவை கற்கச் செய்ய வேண்டும் என்பதே அதன் பொருள்' எனக் கூறவும், சபையோர் கை தட்டி பாராட்டினர்.

உண்மையின் பெருமையைப் பற்றிக் கூறும்போது மங்கையர்கரசி, "நூறு குளம் வெட்டிய புண்ணியம், ஒரு கிணறு வெட்டினால் வரும், நூறு கிணறு வெட்டும் புண்ணியம், ஒரு உண்மையைச் சொன்னால் வரும்' என்றார்.

"குழந்தைகளை வளர்க்கும்போது, நமது பாரம்பரியத்தின் பெருமைகளைச் சொல்லி வளர்க்க வேண்டும். தாலாட்டு என்பது குழந்தைகளைத் தூங்கச் செய்யும் முறை மட்டுமல்ல. தாலாட்டுப் பாடல்கள் நல்ல தர்மங்களும், சிந்தனைகளும், பரம்பரைப் பெருமைகளும் தன்னகத்தே கொண்ட தத்துவப் பாடல்களாகும். குழந்தைக்குத் தாலாட்டின் மூலமாக முதன்முதலாக ஞானத்தைப் போதிக்கும் குரு தாய்தான்.

தினமும் தூங்கி எழுந்தவுடன் தலைக்குத் தண்ணீர் விட்டுக் குளிக்க வேண்டும் என்ற நியதிக்கான காரணங்களை விளக்கினார். இரவு ஒரே நிலையில் படுத்திருப்பதால் உடல் முழுவதும் உஷ்ணம் பரவுகிறது. உடல் வெப்பத்தைத் தணிக்கக் கூடியது நீராடல் மட்டுமே. புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து செயல்படுவது வெப்பத்தின் தன்மை. கழுத்து வரை குளிப்பதால் புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து அத்தனை உடல் வெப்பமும் கழுத்து வரை தணிந்து தலைக்கு ஏறி விடும். எனவே தலைக்கும் தண்ணீர்விட்டு குளிப்பதால் மட்டுமே உடல் வெப்பம் முழுதும் குறைந்து உடலைக் குளிரச் செய்கிறது.

கம்பராமாயணத்தின் கதாபாத்திரங்களில் மிகச் சிறந்த குண நலன்களோடு வாழ்ந்த பரதனை, கம்பர் உயர்வாக சித்திரித்தார். அதேபோல பாரதத்தில் மிக உயர்ந்த குணங்களோடு போற்றப்படுபவர் பிதாமகர் பீஷ்மர்.

தாய் தந்தையரை தினமும் வணங்கினால் ஆயிரம் முறை கங்கையில் நீராடிய புண்ணியம் கிடைக்கும். எனவே புண்ணியம் நாடி கோவில் கோவிலாக வலம் வருவோர் கூட, தாய் தந்தையரை வணங்குவது எல்லாவற்றிலும் சிறந்தது என உணர வேண்டும்.

ஞானம் என்பது அறிவின் முதிர்ச்சி. எத்தனை வயதில் ஞானம் வரும் என்று எவருக்கும் தெரியாது. பிரம்ம ஞானம் என்பது கடவுள் மீதுள்ள பற்றை சிறிதும் சிதைக்காமல், சதா பரம்பொருளின் நினைவைக்கொண்டு வேறு எந்த சலனமுமில்லாமல் முதிர்ச்சி அடைவதே ஆகும்'.

தாய்ப்பாசத்தின் சிறப்பை உணர்த்தும் வகையாக, தான் படித்த செய்தியை நெகிழ்ச்சியோடு மங்கையர்கரசி குறிப்பிட்டார். "ஆஸ்திரேலியாவில் கருவுற்ற ஒரு தாய்க்குக் குறைப்பிரசவமாக ஏழுமாதக் குழந்தை பிறந்து சுயநினைவின்றிக் கிடந்தது. மருத்துவர்கள் குழந்தை பிழைப்பதற்கான வாய்ப்பில்லை என்று தாயிடம் கொடுத்தனர். மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட அந்தத்தாய், குழந்தையை மார்பில் போட்டு, தான் எப்படியெல்லாம் ஆசைப்பட்டு அந்த சிசுவை வளர்க்க எண்ணியிருந்தாரென்று குழந்தையின் காதில் சொல்லிச்சொல்லி அழுதார். தாயின் உணர்ச்சிப் பெருக்கான அரவணைப்பிலேயே இரண்டு மணி நேரம் இருந்த அந்தக் குழந்தையின் அசைவை திடீரென உணர்ந்த தாய், திகைத்துப்போய் மருத்துவர்களைக் கூப்பிட்டு, தன் குழந்தை பிழைத்துக் கொண்டதைத் தெரிவித்தார். மருத்துவர்கள் இதைப் பெரிய மருத்துவ அதிசயமாகக் குறிப்பிட்டனர். அபரிமிதமான தாய்ப்பாசமும், இறைவன் கருணையும், குழந்தையைப் பிழைக்க வைக்கும் அதிசயம், புராண காலத்தில் மட்டுமல்ல, இப்போதும் நடைபெறும் என்பதற்கான சான்று இந்த செய்தி'.

சின்னச்சின்ன கருத்துகளைக்கூட தெளிவான நீரோடைபோல, கணீரென்ற குரலில், எளிமையாக எல்லோரும் ரசிக்கும்படியாக சொற்பொழிவாற்றி கேட்போரைத் தன்வயப்படுத்தும், முத்தமிழ் வித்தகர் வாரியார் சுவாமிகளின் மாணவியான மங்கையர்கரசியின் ஆற்றல், அவருடைய பாரதத் தொடர்சொற்பொழிவுக்கு மேலும் சிறப்பைத் தந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.