புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

கண்ணீர் விழுந்தது கடிதம் நனைந்தது

தமிழ் மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் பெரிதும் பாடுபட்ட அறிஞர்கள், கலைஞர்கள் குறித்து தமிழில் ஏராளமான நூல்கள் வெளிவந்திருந்தாலும் பிற மொழிகளில் அதிகம் வந்ததில்லை. கடந்த செவ்வாய்க்கிழமை சென்னையில் வெளியிட

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:21 am

தமிழ் மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் பெரிதும் பாடுபட்ட அறிஞர்கள், கலைஞர்கள் குறித்து தமிழில் ஏராளமான நூல்கள் வெளிவந்திருந்தாலும் பிற மொழிகளில் அதிகம் வந்ததில்லை. கடந்த செவ்வாய்க்கிழமை சென்னையில் வெளியிடப்பட்ட "ஸ்காலர்ஸ் அண்ட் ஸôவண்ட்ஸ்' (ஆசிரியர் வி.சுந்தரம் ஐ.ஏ.எஸ்.) என்னும் ஆங்கில நூலில் மகாகவி பாரதியார், ஜி.யு.போப், ஆறுமுக நாவலர், வையாபுரிப் பிள்ளை, உ.வே.சா, பாண்டித்துரை தேவர், சரபோஜி மன்னர், போன்றோரது தமிழ்ப்பணியும் சமூக பங்களிப்பும் விரிவாகவும் தெளிவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நூலை முன்னாள் தலைமைச் செயலாளர் டி.வி.வேங்கடராமன் வெளியிட நல்லி குப்புசாமி பெற்றுக் கொண்டார். எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி உட்பட பல தமிழறிஞர்கள் விழாவில் கலந்து கொண்டனர். அவர்கள் பேசியதிலிருந்து,

டி.வி.வேங்கடராமன்: இந்த நூலை நான் வெளியிடுவது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. நான் ஒன்றும் பெரிய பேச்சாளன் அல்ல. மாணிக்கவாசகர் "எட்டும் ரெண்டும் அறியாத என்னை பட்டி மண்டபம் ஏற்றினையே' என்பார். அப்படி என்னை மேடையில் ஏற்றிவிட்டார்கள். இந்த நூலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொருவரும் தமிழுக்கு ஒவ்வொரு வகையில் சிறப்பாக தொண்டாற்றியவர்கள். அதிலும் குறிப்பாக ஜி.யு.போப்பின் தமிழ்ப்பணி மகத்தானது. அவர் திருவாசகத்தின் மீது பெரும் பக்தி கொண்டிருந்தார். அதனை அருமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். தான் எழுதும் ஒவ்வொரு கடிதத்தின் தொடக்கத்திலும் திருவாசக வரிகளைக்  குறிப்பிடுவது அவரது வழக்கம். அவ்வாறு ஒருமுறை தனது நண்பர் நீதிபதி சுப்பிரமணிய பிள்ளைக்கு ஒரு கடிதம் எழுதிய போது திருவாசக வரிகளை எழுதிவிட்டு தொடர்ந்து கடிதத்தை எழுதினார். ஆனால் அவர் கண்களிலிருந்து சொட்டிக் கொண்டிருந்த கண்ணீரால் கடிதத்தின் பெரும்பான்மையான எழுத்துகள் புரியாமல் போய்விட்டன. கடிதத்தின் முடிவில் "திருவாசகம் பற்றி எழுதும்போது எனக்கு ஏற்பட்ட உணர்ச்சிப் பெருக்கால் கண்ணீர் சிந்திவிட்டேன். அதனால் இந்தக் கடிதம் உங்களுக்குப் புரியாமல் போகலாம். ஆனாலும் இந்தக் கடிதத்தை நான் கிழித்துவிடப் போவதில்லை. இப்படியே உங்களுக்கு அனுப்புகிறேன். மற்றொரு கடிதத்தை கண்ணீர் சிந்தாமல் எழுத முயற்சிக்கிறேன்.' என்று குறிப்பிட்டார். அப்படிப்பட்டவர்களைப் பற்றி தமிழ்நாட்டுக்கு வெளியே இருப்பவர்களும் அறிந்து கொள்ள இந்நூல் பயன்படும்.

நல்லி குப்புசாமி: இந்நூலாசிரியரை எனக்கு பல வருடங்தளாக தெரியும். ஒருநாள் அவர் என்னை தொலைபேசியில் அழைத்து, "உங்களுக்கு ஒரு பரிசு வைத்திருக்கிறேன் வாருங்கள்' என்று கூறினார். நான் அவர் வீட்டுக்குச் சென்றேன். தென் தமிழகத்தைப் பற்றிய ஒரு அரிய வரலாற்று நூலை அவர் என்னிடம் தந்தார். அந்தப் புத்தகத்தின் ஒரு பகுதியை நான் அதற்கு முன்பே கன்னிமரா நூல் நிலையத்தில் படித்திருக்கிறேன். அந்த நூலை முழுமையாக படிக்க முடியவில்லையே என்கிற மனக்குறையோடு இருந்த நான் அந்த நூலைக் கண்டதும் பெருமகிழ்ச்சி அடைந்தேன். ஏராளமான தகவல்களை அந்த நூலின் மூலம் அறிந்தேன். அதுபோலவே இன்று வெளியிடப்படும் இந்த நூலும் மிக முக்கியமான அரிய தகவல்கள் அடங்கிய நூல். தமிழ் நூல்களையே வெளியிட்டு வரும் வானதி பதிப்பகம் இந்த ஆங்கில நூலை வெளியிட முன் வந்திருப்பது பாராட்டத்தக்கது.

இந்திரா பார்த்தசாரதி: நான் தில்லியில் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தபோது என்னிடம் பயின்ற மாணவர் இந்நூலின் ஆசிரியர் சுந்தரம். பின்னர் நான் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்த போது அதே கல்லூரியில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். இவர் பெரிய கல்வியாளராக வருவார் என்று நினைத்தேன். ஆனால் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனார். ஆனாலும் தமிழ் மீது மிகுந்த பற்று கொண்டவர். நிறைய எழுதுபவர். இந்த நூலை அவர் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதால் உலகம் முழுவதும் இந்தக் கலைஞர்களும் அறிஞர்களும் அறிமுகம் பெறுவர்.

கருத்து சுதந்திரத்திற்காக படைப்பாளிகளும் கலைஞர்களும் மட்டும் குரல் கொடுத்தால் போதாது. ஊடகங்களும் அவர்களை ஆதரிக்க வேண்டும். தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் மீது ஒரு அவதூறு குற்றச்சாட்டு எழுந்து நீதிமன்றம் வரை சென்றபோது அன்று பிரபலமாக இருந்த ஜன விநோதினி என்ற பத்திரிகை வேதநாயகம் பிள்ளையைத் தீவிரமாக ஆதரித்தது. அவர் குற்றமற்றவர் என்பது பின்னர் நிருபணமானது.

அது போலவே கலைஞர்களை ஆதரிக்கும் கடமை செல்வந்தர்களுக்கு இருக்கிறது. அந்நாளில் கும்பகோணத்தில் சங்கராபரணம் நரசய்யர் என்று ஒரு இசைக்கலைஞர் இருந்தார். அவருக்கு வறுமை வந்தபோது கபிஸ்தலம் மூப்பனாரிடம் சென்று பொருள் உதவி வேண்டினார். அவரும் உடனே தேவையான பணத்தைக் கொடுத்தார். அடமானமாக எதையும் வைக்காமல் பணத்தைப் பெறுவது இழிவு என்று எண்ணிய நரசய்யர் தான் விரும்பி பாடும் சங்கராபரணம் ராகத்தை அடமானமாக வைப்பதாக எழுதி தந்துவிட்டுப் பணத்தை வாங்கிச் சென்றார்.

அடுத்த நாளே அந்த ஊரில் மிகப்  பிரபலமாக இருந்த அப்பாவு என்பவரின் வீட்டில் கச்சேரி செய்ய சென்றார் நரசய்யர். அப்பாவு முதலில் சங்கராபரணம் பாடுங்கள் என்று சொல்ல நரசய்யர் மறுக்க பிறகு விஷயம் தெரிந்து விட்டது. அப்பாவு சங்கராபரணம் இல்லாத நரசய்யர் கச்சேரியே வேண்டாம் என்று நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு நேரே மூப்பனாரிடம் சென்று நரசய்யர் வாங்கியிருந்த தொகையை தான் தந்து விடுவதாகவும் அவரை சங்கராபரணம் பாட அனுமதிக்க வேண்டும் என்றும் வேண்டினார். ஆனால் மூப்பனாரோ நான் அவருக்கு பணம்தான் கொடுத்தேன். அவர்தான் ராகத்தை அடகு வைப்பதாக சொன்னார். நான் அதை அப்போதே ஏற்கவில்லை. அவர் தாராளமாக பாடலாம். நானும் ரசித்து கேட்பேன். எனக்கு அந்தப் பணமும் வேண்டாம். அது உதவி அல்ல என்னுடைய கடமை என்று கூறினார். இப்படிப்பட்ட பெரிய மனிதர்களைப்பற்றிய அரிய தகவல்கள் இந்தப் புத்தகம் முழுவதும் நிறைந்துள்ளன. தமிழகத்து அறிஞர்களையும் கலைஞர்களையும் உலகறிய செய்யும் இதுபோன்ற முயற்சிகள் தொடர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.