புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

படைப்பவனே மேலானவன்!

சென்னை சங்கமத்தின் ஒரு பிரிவான தமிழ் சங்கமம் இவ்வாண்டு நடத்திய ஐந்து நாள் இலக்கிய நிகழ்வின் இறுதி நாளான கடந்த புதன்கிழமை "சா.கந்தசாமியின் படைப்புகள் ஒரு பார்வை' எனும் தலைப்பில் ஒரு கருத்தரங்கு நடைபெற்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:01 am

சென்னை சங்கமத்தின் ஒரு பிரிவான தமிழ் சங்கமம் இவ்வாண்டு நடத்திய ஐந்து நாள் இலக்கிய நிகழ்வின் இறுதி நாளான கடந்த புதன்கிழமை "சா.கந்தசாமியின் படைப்புகள் ஒரு பார்வை' எனும் தலைப்பில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் பங்குபெற்ற சிலரின் பேச்சிலிருந்து...

அசோகமித்திரன்

""எனக்கு சா.கந்தசாமியை முப்பத்தாறு ஆண்டுகளாகத் தெரியும். அப்போதெல்லாம் அவருடன் ஒரு நான்கு நண்பர்கள் எப்போதும் கூடவே இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் இவர் தலைவர் போல் இருப்பார். தனது கருத்துகளை எப்போதும் உறுதியோடு வெளிப்படுத்துவார். எதைப் பற்றியும் அவருக்கு ஒரு தீர்மானமான கருத்து இருந்தது.

தீரர் சத்தியமூர்த்தியின் மகள் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி நடத்தி வந்த "வாசகர் வட்டம்' என்கிற பதிப்பகம் கந்தசாமியின் முதல் நாவலான "சாயாவனம்' நாவலை வெளியிட்டது. அப்போதே இலக்கிய உலகிலும் வாசகர்கள் மத்தியிலும் கந்தசாமியின் பெயர் பிரபலமாகிவிட்டது.

இலக்கிய உலகில் இப்போது இருப்பது போல வட்டாரம், ஜாதி போன்ற பிரிவுகள் அப்போது இல்லாவிட்டாலும் முற்போக்கு, முற்போக்கு இல்லாதது என்று இரண்டு பிரிவுகள் இருந்தன. முற்போக்கு பிரிவில் உள்ளவர்கள் முற்போக்கு என்று நினைப்பதை கந்தசாமி எழுதாததாலும் க.நா.சு. போன்றவர்களோடு நட்பு கொண்டிருந்ததாலும் அவருக்கு முற்போக்கு முகாமிலிருந்து கடுமையான எதிர்ப்புகள் வந்தன. ஆனாலும் கந்தசாமி எதனையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நல்ல கதைகளையே எழுதி இலக்கியத்தின் எல்லாப் பிரிவினரும் தன்னை ஏற்றுக்கொள்ளும்படி செய்தார். அது மிகவும் பாராட்டத்தக்க செயல். அவர் தொடர்ந்து நிறைய எழுதவேண்டும் என்பது என் விருப்பம். அவரை பாராட்ட ஒரு வாய்ப்பு கிடைத்ததற்காக உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன்.''

தமிழவன்

""அசோகமித்திரன் குறிப்பிட்ட அந்தக்கால முற்போக்கு முகாமைச் சேர்ந்தவன் நான். இலக்கிய வாசகர்கள் பெருமதிப்பு கொண்டிருந்த பதிப்பு நிறுவனமான "வாசகர் வட்டம்', "சாயாவனம்' என்கிற சா.கந்தசாமியின் முதல் நாவலை வெளியிட்டது என்னைப் போன்றவர்களுக்கு முதலில் வியப்பாக இருந்தது. காரணம் அந்தக் கதை அப்படி. ஒரு மனிதன் தொழிற்சாலை அமைப்பதற்காக காட்டிலுள்ள மரங்களை ஒவ்வொன்றாக வெட்டுகிறான். இதுதான் கதையின் மையக்கரு. இது முற்போக்கா? அல்லது முற்போக்கு இல்லையா? என்று எப்படிக் கூறமுடியும்? இன்று பெண்ணியம், தலித்தியம், சுற்றுச்சூழலியம் என்று பல பிரிவுகள் இலக்கியத்தில் வந்துவிட்ட நிலையில் அந்த நாவலை வகைப்படுத்துவது எளிது. ஆனால் அன்று அப்படியல்ல. ஆயினும் அது ஒரு சிறந்த நாவல் என்பதில் அன்றுகூட யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

அவர் அடிக்கடி குறிப்பிடும் "கதையிலிருந்து கதையை வெளியேற்றுதல்', "ஒழுங்கற்ற ஒழுங்கோடு இருக்கும் ஒரு நல்ல படைப்பு', "இலக்கியத்துக்கு மொழி தேவையில்லை' போன்ற சொற்றொடர்கள் என்னைப் போன்ற பலரையும் மிகவும் சிந்திக்க வைத்தவை. அவருடைய மோசமான கதை என்று எதையும் என்னால் குறிப்பிட முடியவில்லை.''

எஸ்.ராமகிருஷ்ணன்

""சா.கந்தசாமியின் கதைகளைப் பற்றி பேசுவதைவிட அவர் எடுத்த ஆவணப் படங்களைப் பற்றி பேசுவது எனக்கு மிகவும் மகிழ்வாக இருக்கும். தமிழகத்தின் மரபுவழிப்பட்ட கலையான சுடுமண் சிற்பங்கள் பற்றி அவர் ஓர் அருமையான ஆவணப்படம் எடுத்திருக்கிறார்.

நாம் எந்த ஊருக்குப் போனாலும் ஊருக்கு வெளியே ஒரு அய்யனார் கோயிலும் சில குதிரை சிலைகளும் இருப்பதைப் பார்த்திருப்போம். அந்தக் குதிரை சிலைகள் அவ்வளவு அழகாக இருக்கும். கண்களும் காதுகளும் கவிதை போல் இருக்கும். அவற்றை உருவாக்கியது யார்? தெரியாது. எப்படி உருவாக்குகிறார்கள்? தெரியாது. அவர்களையெல்லாம் தேடிப்பிடித்து நமக்கு அந்தப் படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் கந்தசாமி. அதுமட்டுமல்ல, எழுத்தாளர் ஜெயகாந்தன் பற்றி, சிற்பி தனபால் பற்றி, புதுச்சேரி ஆனந்தரங்கம் பிள்ளை பற்றி படங்கள் எடுத்திருக்கிறார். ஒவ்வொன்றுமே தமிழுலகத்திற்கு முக்கியமான பதிவுகள். எழுத்தாளர்களும் ஓவியர்களும் இணைந்து செயல்படலாம் என்று முதலில் காட்டியவர் இவர்தான். தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருப்பதுதான் அவரது சிறப்பு.''

இமையம்

""சா.கந்தசாமியின் கதைகள் சிக்கல்கள் முடிச்சுகள் இல்லாதவை. அவற்றில் உரையாடல் குறைவு. விவரிப்புகள் அதிகம். அந்த விவரிப்புகளும் மனிதர்கள் குறித்து இல்லாது இயற்கை குறித்தும் பறவைகள், விலங்குகள், மரங்கள் குறித்தும் இருக்கும். தேவைக்கு மேல் ஒரு எழுத்துகூட இருக்காது.

பொதுவாக எழுத வருகிறவர்கள் சுமாராக எழுத ஆரம்பித்து பின்னர் தொடர்ந்து எழுதிவரும் பயிற்சியினால் எழுத்தின் சூட்சுமங்களை உணர்வார்கள். ஆனால் இவரது முதல் நாவலே மிகவும் சிறப்பாக அமைந்திருப்பது ஒரு வியப்புதான். இவரது சில கதைகளில் அரசியல்வாதிகளைப் பற்றிய கோபம் தெரிகிறது.

ஓர் எழுத்தாளன் குழந்தைகளின் உலகத்தை படைப்பில் கொண்டுவருவது மிகவும் கடினம். இவர் பல கதைகளில் குழந்தைகளின் உலகை அற்புதமாகப் படம் பிடித்து அபாரமான வெற்றியைப் பெற்றிருக்கிறார்.''

சா.கந்தசாமி (ஏற்புரை)

""நான் என்னை ஒரு பெரிய படைப்பாளி என்று எண்ணிக் கொண்டதில்லை. நான் பெரிய படிப்பாளியும் இல்லை. கல்லூரிக்குச் சென்று பயின்றதில்லை. தமிழ் இலக்கியங்கள் முழுவதையும் கற்றவன் என்று கூறமுடியாது. சங்க இலக்கியத்தைப் படிப்பதில் இப்போதும் எனக்குச் சிக்கல்கள் இருக்கின்றன. இருந்தாலும் ஓரளவு படித்திருக்கிறேன்.

எனது முதல் நாவலான "சாயாவன'த்தை எழுதி முடித்து அதனை வாசகர் வட்டம் பதிப்பகத்தாரிடம் கொடுத்தேன். மூன்று மாதங்கள் கழிந்தபின் ஒரு நாள் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி என்னிடம் "உங்கள் நாவலை வெளியிடலாமென்று நாங்கள் தற்காலிகமாக தீர்மானித்திருக்கிறோம்..' என்று கூறினார்கள். பின்னர் ஒரு மாதம் கழித்து வெளியிட்டார்கள். என்னை எல்லாரும் தெரிந்து கொண்டார்கள்.

எனக்கு தெரிந்ததை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளவே நான் எழுதுகிறேன். ஒரு படைப்பிலக்கியவாதி எல்லாவிதத்திலும் மேலானவன் என்பது எனது கருத்து. நமது அரசும் பிற அமைப்புகளும் மொழி சார்ந்த கருத்துகள், மாற்றங்கள், ஆலோசனைகளுக்கு கல்வியாளர்களை மட்டுமே நாடாமல் படைப்பிலக்கியவாதிகளையும் அணுகுதல் வேண்டும். தொடர்ந்து மொழியோடு தொழில்பட்டுக் கொண்டிருப்பவன் அவன்தான். பிறருடைய படைப்புகளுக்கு உரையெழுதுவதில் வியப்பதற்கு எதுவுமில்லை. க.நா.சு. குறிப்பிடுவது போல அவையெல்லாம் "பற்றி' இலக்கியங்கள். புதிதாகப் படைப்பதுதான் பெரிய விஷயம். மூல நூலாசிரியர்கள் இல்லையெனில் உரையாசிரியர்களுக்கு என்ன வேலை? தமிழைச் செம்மொழி ஆக்கியோர் கபிலரும், பரணரும், கணியன் பூங்குன்றனும், கம்பனும், வள்ளுவனும், காக்கைப் பாடினியாரும், அவ்வையும், இளங்கோவும், ஆண்டாளும்தானே தவிர எந்த உரையாசிரியரும் அல்லர். நன்றி.''

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.